You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹிங்கன்காட்டில் எரித்து கொல்லப்பட்ட பெண்: சம்பவ தினத்தன்று நடந்தது என்ன? #Groundreport
- எழுதியவர், பிரவீன் முதோல்கர்
- பதவி, ஹிங்கன்காட்டிலிருந்து பிபிசி மராத்தி சேவைக்காக
``அந்தப் பெண் வலியால் அலறிக் கொண்டிருந்தார். அவருடைய சுவாசம் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே போனது. சுவாசிப்பதே கடினமாகிப் போனது. நெருப்பு அவருடைய தலை, கழுத்து, முகத்தை எரித்துவிட்டது. பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்த சிறுமியின் ஸ்வெட்டரைப் போட்டு தீயை அணைத்து, அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த சம்பவத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது'' என்று விஜய் குகடே கூறினார். பிப்ரவரி 3 ஆம் தேதி நடந்த அந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி அவர்.
டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
ஒரு வாரத்திற்கு முன்பு மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டம் ஹிங்கன்காட் நகரில் நன்டோரி சவுக் பகுதியில் ஒரு பெண் தீ வைத்து எரிக்கப்பட்டார். 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டு, நாக்பூர் ஆரஞ்ச் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (திங்கட்கிழமை) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹிங்கன்காட் சம்பவத்துக்குப் பிறகு, அந்தச் சம்பவத்தைக் கண்டித்து வார்தா மாவட்டம் சமுத்ரபூர் மக்களும் பலகட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
என்ன நடந்தது?
பிப்ரவரி 3ஆம் தேதி காலை 7:15 மணிக்கு அந்த வழியே சென்று கொண்டிருந்த விஜய் குகடே, தொலைவில் இருந்து `காப்பாற்றுங்கள், தயவுசெய்து காப்பாற்றுங்கள்' என்ற அலறலைக் கேட்டார். யாரோ விபத்தில் சிக்கிவிட்டார்கள் என்று நினைத்து மோட்டார் சைக்கிளை அவர் நிறுத்தியிருக்கிறார்.
மோட்டார் சைக்கிளில் அவர் திரும்பியபோது, சாலையில் ஒரு பெண் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். நேரத்தை வீணடிக்காமல், அந்தப் பெண் மீது தண்ணீரை வீசி தீயை அணைக்க முயற்சி செய்தார்.
ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்த ஒரு சிறுமி தன் ஸ்வெட்டரை கொடுத்தார். அதை வைத்து தீயை அணைக்க குகடே முயற்சி செய்தார்.
உடல் முழுக்க தீ அணைந்ததும், அந்தப் பெண்ணை காரில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை தொடங்கப்பட்டது.
``எனது மகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு நான் திரும்பி வந்து கொண்டிருந்தேன். நன்டோரி சவுக்கில், ஒரு பையன் கையில் தீப்பந்தம் வைத்துக் கொண்டு நின்றிருந்தான். குளிர்காலம் என்பதால், குப்பைகளை சேகரித்து யாரோ தீ மூட்டுகிறார் என்று நினைத்தேன். ஆனால் நான் திரும்பிச் சென்றபோது, அந்த தீப்பந்தத்தால், அந்தப் பெண்ணுக்கு தீ வைக்கப் பட்டிருக்கிறது'' என்று குகடே தெரிவித்தார்.
வழிப்போக்கரின் சமயோசித நடவடிக்கை
பெண் விரிவுரையாளர் மீது பெட்ரோல் ஊற்றி, தீப்பந்தம் மூலம் தீ வைத்ததை அடுத்து எரியும் துணிகளுடன் அவர் கீழே அமர்ந்துவிட்டார். உதவி கேட்டு அவர் அலறியுள்ளார். அவருடைய அலறல் சப்தம் கேட்டு, 10 அல்லது 11வது வகுப்பு படிக்கும் ஒரு மாணவி, அந்தத் திசை நோகி ஓடியுள்ளார்.
தீயில் எரிந்து கொண்டிருந்த பெண்ணை காப்பாற்ற சிலர் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பள்ளிக்கூட மாணவி, தன் ஸ்வெட்டரைக் கழற்றி அந்தப் பெண் மீது வீசினார். அது தீயை அணைத்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுசீல் கோடேவும் உதவிக்கு ஓடி வந்தார். அந்தப் பெண்ணை விஜய் குகடே காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
சம்பவத்தின் விவரம்
1. காலை 7:05: எஸ்.டி. பேருந்தில் இருந்து நன்டோரி சவுக்கில் பெண் விரிவுரையாளர் இறங்கினார்.
2. காலை 7:07: கல்லூரியை நோக்கி அந்த பெண் விரிவுரையாளர் நடக்கத் தொடங்கினார். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விகேஷ், மோட்டார் சைக்கிளில் பேருந்தைப் பின் தொடர்ந்து வந்து, சவுக்கில் நிறுத்தினார்.
3. காலை 7:10: தனது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்த அவர், துணி சுற்றிய குச்சியை பெட்ரோலில் நனைத்துக் கொண்டு, பெண் விரிவுரையாளரை நோக்கி நடந்து சென்றார்.
4. காலை 7:15: பெண் விரிவுரையாளர் நியூ மகாலட்சுமி ஸ்டோரை அடைந்தார். குற்றஞ்சாட்டப்பட்ட விகேஷ் நக்ராலே அவரை நோக்கி வேகமாக நடந்து சென்று அவர் மீது பெட்ரோலை வீசினார்.
5. காலை 7:17: எரிந்து கொண்டிருந்த தீப்பந்தத்தை அவர் மீது வீசிவிட்டு, மோட்டார் சைக்கிளை நோக்கி ஓடினார்.
6. காலை 7:20: விரிவுரையாளரை தாக்குவதற்கு முன்பே தனது மோட்டார் சைக்கிளை அவர் ஆன் செய்து வைத்திருந்தார். எனவே மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டார்.
7. பெண் விரிவுரையாளரின் பலத்த அலறலைக் கேட்டதும், விகேஷை பிடிக்க ஒருவர் முயற்சி செய்தார். ஆனால் அவர் தப்பிவிட்டார்.
8. காலை 7:25: பெண் விரிவுரையாளர் காரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: