You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விப்லவ் தாக்கூர்: ‘மோதி, அமித்ஷா, பாகிஸ்தான்’’ கர்ஜித்த மாநிலங்களவை உறுப்பினர் - யார் இவர்? பேசியவை என்ன? - 5 தகவல்கள்
கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை விப்லவ் தாக்கூராகதான் இருக்கும்.
புதன்கிழமை வரை பெரும்பாலான தமிழர்கள் விப்லவ் என்ற பெயரைக் கூட கேட்டிருக்கமாட்டார்கள். ஆனால், வெள்ளிக்கிழமை அதிகம் பேர் நாடாளுமன்றத்தில் வில்பவ் பேசிய பேச்சின் காணொளியை பகிர்ந்தார்கள்.
சரி யார் இந்த விப்லவ்?
விப்லவ் தாக்கூர் - 76 வயதான இந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர். 1943 அக்டோபர் மாதம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் பிறந்தார். அரசியலில் முதுகலை வரை படித்துள்ளார். இவரது பெற்றோர் சுதந்திரப் போராட்ட வீரர்கள்.
இவரது தந்தை பரஸ் ராம், இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த முக்கிய சுதந்திரப் போராட்ட வீரர். இவரது தாய் சர்லா சர்மா காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய பதவிகளை வகித்தவர்.
இவர் 1961ல் தாகூர் ஹர்னாம் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
1985 முதல் இமாச்சல் மாநில அளவிலும், மத்திய அளவிலும் பல முக்கிய பதவிகளை இவர் வகித்து வந்திருக்கிறார்.
வியாழக்கிழமை அவர் மாநிலங்களவையில் பேசியது என்ன?
- இன்று நீங்கள் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள். விமானத்தில் பயணிக்கிறீர்கள். இவை எல்லாம் யார் கொடுத்தது? இந்த பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்... இவை எல்லாம் யார் கட்டினார்கள்? ஐ.ஐ.டி-ஐ, ஐ.ஐ.எம்-ஐ உருவாக்கியது யார்? கடந்த ஆறு ஆண்டுகளாக நீங்கள் செய்தது என்ன? இந்தியாவை உடைக்க, பிரிக்க முயன்றது அல்லாமல் வேறு என்ன நீங்கள் செய்தீர்கள்?
- துரோகி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். யார் துரோகி என்று அழைக்கப்பட்டார்? இடதுசாரிகள் இந்திய சுதந்திரத்தை ஒப்புக் கொள்ளாமல் இருந்த போது, அந்த கட்சி நான்கு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. ஆனால், அவர்களைத் துரோகி என்று நேரு அழைக்கவில்லை, அவர்களை துரோகி என்று இந்தியா கூறவில்லை. நேரு குறித்து இந்த நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசி இருக்கிறார் வாஜ்பேயி. ஆனால், அவர் துரோகி என்று அழைக்கப்படவில்லை. ஆனால் இன்று இந்திய பிரதமர் குறித்து, இந்திய உள்துறை அமைச்சர் குறித்து அவர்கள் கொள்கைகள் குறித்து யார் எதிர்த்துப் பேசினாலும், அவர்கள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆறு வயது சிறுவர்களைக் கூட இந்த அரசு விடுவதில்லை.
- 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் கூட இத்தனை முறை பாகிஸ்தான் என்ற பெயர் உச்சரிக்கப்படவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளில் அத்தனை முறை உச்சரித்துவிட்டீர்கள். அழைப்பில்லாமல் பாகிஸ்தான் சென்றது யார்? நீங்கள்தானே... ஆனால் இப்போது பேசுகிறீர்கள்.
- காஷ்மீர் குறித்து பேச, தீர்மானம் நிறைவேற்ற எந்த உரிமையும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இல்லை என்கிறீர்கள். பின் ஏன் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இங்கே அழைத்து வந்தீர்கள்? ஏன் அவர்களை காஷ்மீர் அழைத்து சென்றீர்கள்? நீங்கள்தான் தலையிட அழைத்தீர்கள், மற்றவர்கள் அல்ல. நாங்கள் ஆட்சியிலிருந்த போது, நம் நாடு குறித்து தவறாகப் பேச யாருக்கும் தைரியம் வரவில்லை. ஆனால், இப்போது... இதற்கு நீங்கள்தான் காரணம்.
- இந்த நாட்டை பிரிக்காதீர்கள். இந்த நாடு அப்படியே ஒற்றுமையாக இருக்கட்டும். நாம் மதச்சார்பற்றவர்கள். 'தர்மா' மீது நம்பிக்கை கொண்டவர்கள். ராமருக்குக் கோயில் கட்டுவது மட்டும் முக்கியமல்ல. அவரை பின்பற்ற வேண்டும். ராமர் மக்களின் குரலுக்கு செவிசாய்த்தார். ஆனால், நீங்கள் போராடும் மக்களின் குரலை கூட கேட்க மறுக்கிறீர்கள்.
- இவ்வாறாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை பேசினார் விப்லவ் தாக்கூர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: