கொரோனா பாதிப்பா? தமிழகத்தில் கண்காணிப்பில் இருக்கும் 1,157 பேர்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லையென தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இருந்தபோதும் 13 பேர் தனி வார்டுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சீனாவில் கொரோனோ வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்திவருவதாக மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
சீனா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற கொரோனோ வைரஸால் தாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருவோர் அனைவருமே சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்களான சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகியவற்றில் காய்ச்சல் இருப்போரைக் கண்டறியும் 'தெர்மோ ஸ்கேனர்கள்' பொருத்தப்பட்டுள்ளன.
சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்துவந்து, காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ளவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
"சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இதுபோல 10 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 8 பேர் சீனர்கள். கேரளாவில் கொரோனோ வைரஸ் இருப்பதாக அடையாளம் காணப்பட்டிருக்கும் ஒருவருடன் விமானத்தில் பயணித்த ஒருவரும் இந்தப் பத்துப் பேரில் இருக்கின்றனர். ஆனால், இவர்களில் யாருக்கும் கொரோனோ வைரஸ் தாக்குல் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது" என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியாவில் புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் வைராலஜியில் மட்டுமே இந்த நோய் தாக்குதல் குறித்த சோதனை செய்யப்பட்டுவந்த நிலையில், சென்னையில் உள்ள கிங் இன்ஸ்ட்டிடியூட்டிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இந்த சோதனைக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 12 பேரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டதில் யாருக்கும் அந்த நோய் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் நான்கு பேரது ரத்த மாதிரிகள் புனேவுக்கும் 4 பேரது ரத்த மாதிரிகள் கிங் இன்ஸ்ட்டிடியூட்டிற்கும் அனுப்பட்டு, முடிவுகள் தெரிவதற்காக காத்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் எந்த வகையிலும் இந்த நோய் பரவிவிடாமல் இருக்க தீவிர சோதனைகளும் தடுப்பு நடவடிகைகளும் எடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறையின் இயக்குனர் குழந்தைச்சாமி பிபிசியிடம் தெரிவித்தார். "நோய் தாக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் நோயின் அறிகுறி இல்லாவிட்டாலும் அவரவர் ஊர்களுக்குச் சென்ற பிறகு அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்படுகிறார்கள். இதுபோல தமிழ்நாடு முழுவதும் 1157 பேர் பொது சுகாதாரத்துறையால் கண்காணிக்கப்படுகிறார்கள். இவர்கள் இந்தியா வந்ததிலிருந்து 28 நாட்களுக்குக் கண்காணிக்கப்படுவார்கள்.
கொரொனோ வைரஸ் மனித உடலுக்கு சென்ற பிறகு அதிகபட்சம் 14 நாட்களுக்குள் அதன் பாதிப்பு தெரிய ஆரம்பிக்கும். இதனை 'இன்குபேஷன்' காலம் என்கிறார்கள். இந்த 'இன்குபேஷன்' காலத்தை இருமடங்காக்கி, மாநில சுகாதரத்துறை கண்காணிக்கிறது" என்கிறார் குழந்தைச்சாமி.

பட மூலாதாரம், Getty Images
பொது சுகாதரத்துறை இயக்குநரகத்திலேயே கொரோனோ தொற்றைக் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் இங்கிருந்தபடி மாநிலம் முழுவதும் கண்காணிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி உள்ள மருத்துவமனைகள் அனைத்திலும் நோயின் அறிகுறிகளுடன் வருபவர்களை சிகிச்சை அளித்துக் கண்காணிக்க தனிமைப்படுத்தப்படும் வார்டுகள் (isolation wards) உருவாக்கப்பட்டுள்ளன.
இதுவரை 13 பேர் இம்மாதிரி வார்டுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் பத்து பேரும் ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர் ஆகிய ஊர்களில் தலா ஒருவரும் இதுபோல கண்காணிக்கப்படுகிறார்கள்.
"இரண்டு வழிகளில்தான் இது பரவும். நோய் இருப்பவர்கள் தும்மும்போதும் இருமும்போது பரவும். நோய் தொற்று இருப்பவர்கள் தும்மும்போதும் இருமும்போதும் அருகில் இருந்த பொருட்களில் இந்தக் கிருமிகள் இருக்கலாம். அதனால், வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்தவுடன் கைகளைக் கழுவ வேண்டும்" என்கிறார் குழந்தைசாமி.
நோய் பரவாமல் தடுக்கவும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்களையும் மாநில அரசு பெரும் எண்ணிக்கையில் விநியோகம் செய்துவருகிறது.
பிற செய்திகள்:
- ட்விட்டரில் ட்ரெண்டாகும் சிலம்பரசனின் மாநாடு- யார் இந்த அப்துல் காலிக்?
- தர்பார் படம்: நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு அரசு உதவும் - அமைச்சர் கூறியது என்ன?
- "5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் மன அழுத்தம், இடைநிற்றல் அதிகரிக்கும்"
- பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களியுங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













