"5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் மன அழுத்தம், இடைநிற்றல் அதிகரிக்கும்"

- எழுதியவர், மு.ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக பல தரப்புகளில் இருந்தும் கருத்து தெரிவிக்கப்படுகிறது.
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மேலும், இந்த நடைமுறையை அமல்படுத்துவது பற்றி அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது.
இதனடிப்படையில், தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக பள்ளிக்கல்விதுறை கடந்த ஆண்டு அறிவித்தது.
இந்நிலையில், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமல்படுத்தியதை பல தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கோவையில் உள்ள புதுப்புதூர் கிராமத்தில் வசித்து வரும் தவமணி, அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த மன அழுத்தத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்.

'நானும் எனது கனவரும் பனியன் தொழிற்சாலையில் தினக்கூலிகளாக பணியாற்றி வருகிறோம். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பத்து வயதாகும் மூத்த மகன், 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான். அவனுக்கு பொதுத்தேர்வு எழுதும் அளவிற்கு இன்னும் பக்குவம் வரவில்லை. விளையாட்டு தனத்தோடு பள்ளிக்கு சென்றுவரும் அவனுக்கு பொதுத்தேர்வு என்றால் என்னவென்றே தெரியாது. வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்ததும் அவர்களோடு அமர்ந்து பாடம் சொல்லிக்கொடுப்பேன். ஆனால், அந்த நேரத்தில் குழந்தைகளும் சோர்வாகி தூங்கிவிடுவர். பொதுத்தேர்வு அறிவிப்பு வந்தபிறகு அதிகாலையில் குழந்தைகளை எழுப்பி படிக்க வைக்கிறேன். பொதுத்தேர்வு என்பதால் கூடுதல் அக்கறை காட்ட வேண்டியுள்ளது.
குழந்தைகளாக விளையாடித்திரியும் வயதில் பொதுத்தேர்வுமுறை தேவையில்லாதது. இதனால், என்னைப்போல தினக்கூலிகளாக வேலைக்கு செல்லும் பெற்றோர்களும், குழந்தைகளும், ஆசிரியர்களும் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகிறோம். ஒருவேளை, மதிப்பெண் குறையும் பட்சத்தில் குழந்தைகளின் தன்னம்பிக்கை கட்டாயம் பாதிக்கப்படும். அதனால் அவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தமாட்டார்கள். ஆனால், என் மகனின் வாழ்க்கையை நம்பித்தான் எனது குடும்பம் உள்ளது' என தெரிவிக்கிறார் இவர்.
பொதுத்தேர்வு முறையை சரியாக அணுகும் மனநிலை 15 வயதுக்கு மேல் தான் உருவாகும் என்கிறார் கோவை அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் வெள்ளைச்சாமி.
குழந்தைகளை குழந்தைகளாக நடத்துவோம்
'Performance anxiety disorder என்பது ஒரு வேலையை செய்து முடிக்கும் வரை நம் மனதில் எழக்கூடிய ஒரு பதற்றம். அது சாதாரண அளவில் இருக்கும் பட்சத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தொடர்ந்து அந்த பதற்றத்திலேயே இருக்கும் பட்சத்தில் அது மனதளவிலும் உடலளவிலும் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறை, மிகக் குறைந்த வயதிலேயே குழந்தைகளுக்கு அந்த பதற்றத்தை உருவாக்கி விடுகிறது.

கற்றுக்கொண்ட பாடத்தை சரியாக எழுதி குழந்தைகள் தேர்ச்சி பெறுவார்களா என்ற பதற்றத்தை பெற்றோர்களுக்கும் ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக இரு தரப்பினரும் மிகுந்த மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். பொதுவாக, 15 வயதிற்கு மேல் தான் பொதுத் தேர்வுகளை மனப்பக்குவத்தோடு அணுக முடியும். ஆனால் எட்டு அல்லது பத்து வயதில், தான் யார் என்ற கேள்வியும், தன்னைச்சுற்றி நடப்பவை என்ன போன்ற கேளிவிகள் தான் இருக்கும். இந்த வயதில் தேர்வு முறை என்பதே அவசியமற்றது. எனவே 15 வயது வரை குழந்தைகளை குழந்தைகளாகவே நடத்த வேண்டும், அதுவே நம் சமூகத்திற்கும் நல்லது' என கூறுகிறார் வெள்ளைச்சாமி.
பெற்றோருடன் இடைவெளி
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது போன்று 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், குழந்தைகள் வீட்டிற்கு வந்தபின்னர் பெற்றோர்களுடன் சேர்ந்து உறையாடுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
'நானும், எட்டாவது படிக்கும் எனது மகளும் வீடு திரும்பியதும் இருவரும் அமர்ந்து அன்றைய நாள் எப்படி சென்றது என்பது குறித்து பேசுவோம். பள்ளியில் நடந்த விஷயங்களை அவள் என்னோடு பகிர்ந்து கொள்வாள். ஆனால் பொதுத் தேர்வு அறிவிப்பு வந்த பின்னர் அவளுக்கு தொடர்ச்சியாக வகுப்புகளும் சிறப்பு வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிகாலை வேளையிலும் எழுந்து படித்து வருகிறார். இது குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமான இடைவெளியை சிறுவயதிலேயே அதிகரிக்கிறது' என்கிறார் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவரும் மாணவியின் தந்தை ஜீவானந்தம்.

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை அமல்படுத்தியது கிராமத்து மாணவர்கள் கல்வி கற்க முன்வரும் சதவிகிதத்தை வெகுவாக பாதிக்கும் என்கிறார் கல்வியாளர் மற்றும் பேராசிரியர் த.வீரமணி.
'புதிதாக அமல்படுத்தப்படும் கல்வி திட்டங்கள், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முறை பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் வசிக்கும் கிராமத்து மாணவர்களை வெகுவாக பாதிக்கும்.
தற்போது பேருந்து ஓட்டுனராகவும், நடத்துனராகவும், பல சாதாரண வேலைகளையும் செய்து வருபவர்களில் பெரும்பாலானோர் குறைந்தபட்ச கல்வி அறிவாக எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் தான். இன்னும் ஏராளமான குழைந்தைகள் சத்துணவிற்காக பள்ளிக்கு வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச கல்வி தகுதியை உறுதிசெய்ய வேண்டும் என்பதே அனைவருக்கும் கல்வி திட்டத்தின் நோக்கமாக உள்ளது. ஆனால், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால், அதில் தோல்வி அடையும் எளிய கிராமத்து மக்களின் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடராத நிலை உருவாகும்.

பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி அடையவில்லை என்றால் அதை தாங்கும் மனப்பக்குவமும் இந்த வயதில் இருக்காது. எனவே, படிப்பின் மீது வெறுப்பு ஏற்பட்டு பல மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தொழிலாளர்களாக மாறிவிடுவர். இதனால், படித்தவர்களின் எண்ணிக்கையும் கனிசமாக குறைந்துவிடும்' என்கிறார் கோவை அரசு கலைக்கலூரியில் பேராசிரியராக பணியாற்றிவரும் முனைவர். த.வீரமணி.
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. 8ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 30-ம் தேதி துவங்கி ஏப்ரல் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













