You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆழ்துளை கிணறு உயிரிழப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - உச்சநீதிமன்றம் கேள்வி
இந்தியாவில் தொடர்ந்து ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது. இதனை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
ஆழ்துளை கிணறு விவகாரத்தில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்க கோரி மத்திய மாநில அரசாங்கத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்புயுள்ளது.
வழக்கறிஞர் ஜி.எஸ் மணி தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எம் ஆர் ஷா கொண்ட அமர்வு மத்திய மாநில அரசாங்கங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியோரிடம் விளக்கம் கேட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கிய பின்னரும் ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பாக மூடும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என வழக்கறிஞர் மணி வழக்கு தொடர்ந்தார்.
மத்திய பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த உயிரிழப்புகளை சுட்டிக்காட்டி இந்த வழக்கு தொடரப்பட்டது.
ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அதிகாரிகள் இது வரை என்ன நடவடிக்கை எடுத்தனர் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்திருக்கின்றனர். இவற்றில் 4 குழந்தைகள் சடலமாகவே மீட்கப்பட்டனர். மேலும் நான்கு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 3 குழந்தைகள் மட்டுமே, மீட்கப்பட்டு உயிர் தப்பினர்.
இவர்களில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்தும் ஒருவர். சுஜித் உயிரிழப்புக்கு பின்னர் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் ஆழ்துளைக் கிணறுகள் குறித்து மக்கள் மணதில் அச்சம் நிலவுகிறது.
இதில் உயிர் பிழைத்த குழந்தைகளில் ஒரு குழந்தை ஐம்பதடி ஆழத்திலும் மற்றொரு குழந்தை 18 ஆழமுள்ள கிணற்றிலும் விழுந்து மீட்கப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரியில் 3 வயதுச் சிறுவன் ஹர்ஷன் 18 அடி ஆழமுள்ள குழியில் தவறி விழுந்தான். ஆறு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவன் மீட்கப்பட்டான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: