தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம்: என்ன நடக்கிறது?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் - 4 தேர்வுகளில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன செய்யப் போகிறது டிஎன்பிஎஸ்சி?

தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்வுகளை நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் - 4 எனப்படும் நான்காம் நிலை அரசுப் பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வை கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியன்று மாநிலம் முழுவதும் நடத்தியது.

தமிழ்நாடு முழுவதும் 5,575 மையங்களில் 16,29,865 பேர் இந்தத் தேர்வை எழுதினார்கள். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவையர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் தரவரிசைப் பட்டியல் நவம்பர் மாதம் 25ஆம் தேதி வெளியானது.

இரு தேர்வு மையங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையில் தேர்ச்சி

அதில் முதல் 100 இடங்களில் இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரண்டு இடங்களில் இருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தனர். அவர்கள், வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தும், அந்த மையங்களைத் தேர்வுசெய்திருந்ததும் தெரியவந்தது. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், கூடுதலாக இந்த இரு இடங்களையும் தேர்வுசெய்திருந்ததாகச் சொல்லப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்களில் உள்ள 128 தேர்வு மையங்களில் 32,879 பேருக்கு தேர்வு நடைபெற்றது. இதில், ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் மையங்களிலும் மொத்தமாக 2840 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 262 பேர் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்த இரண்டு மையங்களில் இருந்தும் 57 பேர் அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களில் 40 பேர், சென்னை முதல் கன்னியாகுமரி வரை வேறு மாவட்டங்களில் இருந்துவந்து, இந்த இரண்டு ஊர்களில் இருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டுமொத்த தரவரிசையின்படி பார்த்தால், முதல் ஆயிரம் பேருக்குள் 40 பேரும், இவர்களில் 35 பேர் முதல் 100 பேருக்குள்ளும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த முறைகேடு குறித்து செய்திகள் வெளியானபோது, இந்த 40 பேரும் ஒரே தேர்வுமையத்தில், ஒரே அறையிலிருந்து தேர்வு எழுதியதாக செய்திகள் வெளியாகின. இதனை டிஎன்பிஎஸ்சி மறுத்துள்ளது. இவர்கள் பல்வேறு மையங்களில் இருந்து தேர்வுகளை எழுதியுள்ளனர்.

இதையடுத்து, இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பலதரப்பிலிருந்தும் புகார்கள் அனுப்பப்பட்டன. இந்த புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முதல் 1000 இடங்களுக்குள் தேர்வாகி, ஆனால், வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தவர்களை நேரடியாக அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

ஜனவரி 13ஆம் தேதி காலையிலிருந்து அடுத்த நாள் அதிகாலை வரை இந்த விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், இந்த விசாரணையின்போது, பெரும்பாலானவர்கள் ஒரே மாதிரியான பதிலைத் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

விசாரணையை முடித்துவிட்டு வெளியில் வந்தவர்களிடம், விசாரணையில் என்ன கேட்கப்பட்டது, என்ன பதிலளித்தீர்கள் என செய்தியாளர்கள் கேட்டபோது, தேர்வர்கள் யாரும் பேசுவதற்கு முன்வரவில்லை.

தேர்வு எழுதியவர்களிடம் விசாரணைகள் முடிவடைந்த பிறகு, தேர்வின் பல்வேறு நிலைகளில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

முறைகேடுகள் எப்படி நடந்திருக்கக்கூடும்?

தேர்வாணைய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த முறைகேடு எப்படி நடந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தேர்வர்கள், தேர்வுகளை முடித்து OMR எனப்படும் விடைத்தாள்களை கொடுத்த பிறகு, தேர்வாணையத்தை அந்த விடைத்தாள்கள் வந்து சேர்வதற்கு முன்பாக இந்த முறைகேடு நடந்திருக்காலம் என தேர்வாணைய அதிகாரிகள் கருதுகிறார்கள்.

இதன் பல்வேறு கட்டங்களில், பலர் உதவியிருக்கலாம் என்ற நிலையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சியின் செயலர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபட்டுவருகின்றனர். தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர்த்து, புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடுவதா அல்லது அந்த மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடத்துவதா என பல தீர்வுகள் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பாக விரிவான செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவும் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில் 2018ஆம் ஆண்டில் நடந்த க்ரூப் - 2ஏ தேர்வுகளை இந்த மையங்களில் இருந்து எழுதியவர்கள் குறித்தும் தேர்வாணையம் ஆராயவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2011 டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம்

2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டிஎன்பிஎஸ்சியின் தலைவர் செல்லமுத்து மற்றும் ஆணைய உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை நடத்திய சோதனையில் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததற்கான பல ஆவணங்கள் சிக்கின.

முன்னதாக, ஜூன் மாதம் நடந்து முடிந்திருந்த குரூப் - 1 தேர்வில் தேர்வாகியிருந்தவர்களின் பட்டியலை தங்களுக்கு முன்கூட்டியே அளிக்கும்படி தேர்வாணைய உறுப்பினர்கள் கேட்ட நிலையில், டிஎன்பிஎஸ்சி செயலராக இருந்த டி. உதயசந்திரன் அதற்கு மறுப்புத் தெரிவித்தார். இதையடுத்து, தேர்வாணையப் பணியாளர்கள் அவர் சொல்வதைக் கேட்க வேண்டாமென உறுப்பினர்கள் ஆணையிட்டனர்.

இது தொடர்பாக தலைமைச் செயலருக்குப் புகார் தெரிவித்தார் உதயசந்திரன். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை சோதனைகளை நடத்தியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: