You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடியுரிமை திருத்த சட்டம்: ' கருத்தை மாற்றினால் எதிர்க்கட்சிகளை அரவணைக்க பாஜக தயார்'
திமுக-காங்கிரஸ் இடையே உள்ள உறவில் விரிசல் அதிகரித்துவரும் வேளையில் அவர்களில் யாராவது குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தங்களது கருத்தை மாற்றிக்கொள்ள விரும்பினால், அவர்களை அரவணைக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது என பாஜகவைச் சேர்ந்த, உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் சென்னையில் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான கருத்துகளை பரப்பிவருவதாகவும், அந்த சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பாஜக இந்தியா முழுவதும் நடத்திவருவதாகவும் தெரிவித்த சித்தார்த் நாத் சிங், அந்த நிகழ்ச்சிகளுக்கு பெரும் வரவேற்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ''திமுக - காங்கிரஸ் மத்தியில் விரிசல் அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் தங்களது கருத்தை மாற்றிக்கொள்வதில் தவறில்லை. அவர்கள் மாற்றிக்கொண்டால், அவர்களை அரவணைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்களை வரவேற்போம். கருத்துகளை மாற்றிக்கொண்ட பல எதிர்க்கட்சி தலைவர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்,'' என்றார் சித்தார்த் நாத் சிங்.
மேலும் அவர் எதிர்க்கட்சியினர் பலரும் குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் தற்போது குடிமக்களாக இருக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இருப்பதாக பிரசாரம் செய்துவருவதாக தெரிவித்தார்.
''குடியுரிமை சட்டம் பற்றி தவறாக பரப்பப்படும் கருத்துகள் என்ன, அரசாங்கம் உண்மையில் என்ன விதத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை இயற்றியுள்ளது என தெளிவாக விளக்கி கையேடு ஒன்றை உருவாக்கியுள்ளோம். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் இந்த கையேடுகளை தருகிறோம். சுமார் மூன்று கோடி குடும்பங்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பது எங்கள் இலக்கு,''என்றார் அவர்.
ஜனவரி மாதம் 5ம் தேதி தொடங்கிய விழிப்புணர்வு கூட்டங்கள் வரும் ஜனவரி 20ம் தேதி நிறைவடையும் என்று கூறிய அவர் இந்த கூட்டங்களால் மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.
''பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதை அந்த நாடுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது. இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையாக உள்ள மக்கள், இந்தியா வருவதில் பிரச்சனை இல்லை. இதனை புரிந்துகொள்ளாமல் ஊடகங்களில் எதிர்க்கட்சிகள் பேசுகிறார்கள்,'' என்றார் அவர்.
தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார்?
தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் நான்கு மாதங்களுக்கு முன்னதாக, தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் வகித்து வந்த தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், தலைவர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வர தாமதம் ஆகும் என சித்தார்த் நாத் சிங் தெரிவித்தார்.
''இறுதி முடிவை எடுத்துவருகிறோம். அடுத்த வாரம் நிச்சயம் புதிய தலைவர் பதவி ஏற்பார். தற்போது அறிவிக்கமுடியாது. தமிழக பாஜகவின் தலைவர் பதவிக்கான நபர் யார் என விரைவில் அறிவிப்போம். காத்திருங்கள்,'' என்றார் சித்தார்த் நாத் சிங்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்