You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமேசான் நிறுவனரின் இந்திய வருகை: போராட்டங்கள் நடப்பது ஏன்?
இந்தியாவில் தங்கள் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்தை டிஜிட்டல் மயமாக்க 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7,000 கோடி ரூபாய்) இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமேசான் நிறுவனத்தின் விழா ஒன்றில் பங்கேற்க அதன் நிறுவனர் மற்றும் தலைவர் ஜெஃப் பெசோஸ் இந்திய தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளார்.
அந்த விழாவில் பேசிய பெசோஸ், இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்தை டிஜிட்டல் மயமாக்க 1 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்போவதாக, ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் முன்னிலையில் அறிவித்தார்.
அது மட்டுமின்றி 2025ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 10 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களை ஆன்லைன் வர்த்தகம் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் கூறினார்.
அமேசான் மின்னணு வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளில் மிக முக்கியமான நாடாக கருதப்படும் இந்தியாவில் மேலும் 5.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யப்போவதாகவும் அமேசான் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
மேலும் இந்தியாவின் பெருமை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ''மேக் இன் இந்தியா'' தயாரிப்புகளை உலகளவில் கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டே இந்த முதலீடுகளை அமேசான் நிறுவனம் மேற்கொள்வதாகவும் ஜெஃப் பெசோஸ் தெரிவித்தார்.
இந்தியாவின் அமேசான் இணையதளம் மூலம் தற்போது 5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் வர்த்தகம் மேற்கொள்கின்றனர். அதில் 60,000க்கும் மேற்பட்ட இந்திய தயாரிப்பாளர்கள் ''மேக் இன் இந்தியா'' தயாரிப்புகளை உலகளவில் உள்ள அமேசான் வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்வதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
பெசோஸ் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதை கண்டித்து நாடு முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்தியாவில் உள்ள 300 நகரங்களில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சிறு மற்றும் நடுத்தர வர்த்தகம் மேற்கொள்ளும் வணிகர்களை ஆன்லைன் வர்த்தகம் பாதிக்கிறது என சிறு தொழில் வர்த்தக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் டெல்லியில் வர்த்தகர்கள் நடத்திய போராட்டத்தில் ''அமேசான் - கிழக்கு இந்திய கம்பெனியின் இரண்டாவது அத்தியாயமா?'' என்ற வாசகங்கள் உள்ள பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
''அமேசான் நிறுவனம், தொழிலில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது, ஏற்கனவே பல்லாயிரக்கணக்காக சிறு வணிகர்களின் தொழில் நசுக்கப்பட்டுவிட்டன'' என்று இந்தியாவில் பெசோஸ் வருகைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும் அனைத்து இந்திய வணிகர்கள் கூட்டமைப்பை சேர்ந்த பிரவீன் கண்தேல்வால் கூறுகிறார்.
பெசோஸ் இந்தியவிற்கு வருகை தரும் சில மணி நேரத்திற்கு முன்பு, இந்தியாவில் இயங்கும் அமேசான் மற்றும் ஃபிலிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் மேற்கொள்ளும் செயல்முறை குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என சந்தை போட்டிகளை முறைப்படுத்துவற்கான இந்திய அரசின் ஆணையம் (Competition Commission of India) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இணையதளங்கள் மூலம் மட்டுமே சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் மொபைல் ஃபோன்கள் மற்றும் அதிக தள்ளுபடியில் விற்கப்படும் பொருட்கள், அதிக விலை நிர்ணயிக்கப்படும் பொருட்கள் குறித்து இந்த ஆணையம் கண்காணிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: