You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓமன் சுல்தான் காபூஸ் மரணம்: இந்திய அரசு துக்க தினம் அனுசரிப்பு
அரபு நாடுகளிலேயே நீண்ட காலம் மன்னராக இருந்தவரான ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அரசு நாளைய (ஜனவரி 13) தினத்தை துக்க நாளாக அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படும் இந்த துக்க நாளில், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் எந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது என்றும் இந்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் ஜனவரி 10ஆம் தேதியன்று, தனது 79வது வயதில் உயிரிழந்தார்.
இவருக்கு முன்பு சுல்தானாக இருந்த தனது தந்தையையே, பிரிட்டிஷ் உதவியுடன் ஆட்சியில் இருந்து நீக்கி, 1970இல் இவர் ஆட்சியைக் கைப்பற்றினார். அப்போது இவருக்கு வயது 29.
ஓமனின் பிரதமர், பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி, பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர், வெளியுறவு அமைச்சர் ஆகிய உட்சபட்ச பதவிகளையும் இவர் தன் வசமே வைத்திருந்தார்.
இவரது இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஓமனின் அடுத்த சுல்தானாக இவரது ஒன்று விட்ட சகோதரர் ஹைத்தம் பின் தாரிக் அல் சைத் பதவியேற்றார்.
கடந்த மாதம் சுல்தான் காபூஸ், பெல்ஜியம் நாட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு புற்றுநோய் இருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
யார் இந்த சுல்தான் காபூஸ்?
சுமார் 50 ஆண்டுகாலம் ஓமன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் சுல்தான் காபூஸ். 46 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஓமனில் வசிப்பவர்களில், 43% பேர் வெளிநாட்டவர்கள்.
தன் 29வது வயதில் பழமைவாத ஆட்சியாளராக இருந்த தனது தந்தை சைத் பின் தைமூரை ஆட்சியில் இருந்து நீக்கி இவர் ஆட்சிக்கு வந்தார்.
இவரது தந்தையின் ஆட்சிக் காலத்தில் வானொலிகளில் பாடல் கேட்பது, கண்களுக்கு சன் கிளாஸ் அணிவது போன்றவை தடை செய்யப்பட்டிருந்தன.
யாரெல்லாம் திருமணம் செய்துகொள்ள வேண்டும், வெளிநாடுகளுக்கு பயணிக்க வேண்டும் போன்றவற்றைக் கூட முடிவு செய்பவராக சுல்தான் சைத் பின் தைமூர் விளங்கினார்.
தந்தை தைமூரிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியபின், எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு நாட்டின் ஆட்சிமுறையையே புதுப்பிக்க போவதாக அறிவித்தார்.
அந்தக் காலகட்டத்தில் ஓமன் முழுவதும் மூன்றே பள்ளிகளும், 10 கிலோமீட்டர் மட்டுமே சாலை வசதி இருந்தது.
மார்க்சிய சார்புடைய நாடாக இருந்த ஏமன் மக்கள் ஜனநாயக குடியரசின் ஆதரவைப் பெற்ற தோஃபார் இன மக்களின் ஆயுதப் போராட்டத்தை பிரிட்டிஷ் சிறப்புப் படைகளின் உதவியுடன் ஒடுக்கினார்.
வெளியுறவுக் கொள்கையில் பக்கச்சார்பற்றவராக இருந்த காபூஸ், 2013இல் அமெரிக்கா மற்றும் இரான் இடையே நடந்த ரகசியப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். இந்த ரகசிய பேச்சுவார்த்தை இரான் சர்வதேச நாடுகளுடன் செய்துகொண்ட முக்கியத்துவம் வாய்ந்த அணு ஒப்பந்தத்துக்கு வழிவகுத்தது.
சர்வ சக்தி வாய்ந்த ஆட்சி
'அரபு வசந்தம்' என்று பரவலாக அறியப்பட்ட எழுச்சி, அரபு நாடுகளில் 2011இல் உண்டானபோது ஓமனில் பெரிய அளவில் போராட்டங்கள் நடக்கவில்லை.
எனினும், ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட முற்பட்டனர்.
தொடக்கத்தில் அமைதியாக இருந்த பாதுகாப்புப் படைகள், கண்ணீர் புகை, துப்பாக்கிச் சூடு ஆகியவை மூலம் போராட்டத்தை அடக்கியது. இதில் இருவர் கொல்லப்பட்டனர்.
அனுமதியின்றி கூட்டம் கூடியது, சுல்தானை அவமதித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது.
அதன்பின் ஊழல்வாதிகள் என்று கருதப்பட்ட, நீண்டகாலம் அமைச்சர்களாக இருந்தவர்களை பதவியில் இருந்து நீக்கிய சுல்தான் காபூஸ், வேலைவாய்ப்புக்காக கூடுதல் பொதுத் துறை நிறுவங்களை உருவாக்குவதாகவும் உறுதியளித்தார்.
அப்போது முதல் அரசை விமர்சிக்கும் உள்ளூர் ஊடகங்களை அதிகாரிகள் முடக்குவதாகவும், செயல்பாட்டாளர்களை தொந்தரவுக்கு உள்ளாக்குவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: