You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல்
இந்தியாவின் தலைநகரும், யூனியன் பிரதேசங்களில் ஒன்றுமான டெல்லியின் சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி முழுவதும் ஒரே கட்டமாக நடத்தப்படும் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் பிப்ரவரி 11ஆம் தேதி எண்ணப்படும் என்று இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை - சில தகவல்கள்
டெல்லியில் மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின் படி, டெல்லியில் மொத்தம் 1,46,92,136 வாக்காளர்கள் உள்ளனர்.
டெல்லி முழுவதும் 13,750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். இந்நிலையில், டெல்லி முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தவிர்க்க முடியாத காரணங்களால் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாதவர்களுக்கு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, 80 அல்லது அதற்கு அதிகமான வயதுடைய மூத்த குடிமக்கள் தபால் வாக்கு செலுத்தும் வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சி அறுதிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மீதமுள்ள மூன்று தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றிருந்தது.
என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்?
"ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களை மையமாக வைத்து இந்த முறை டெல்லி மக்கள் வாக்களிப்பார்கள். எங்களது தேர்தல் பிரசாரம் முழுவதும் நேர்மறையானதாக இருக்கும்" என்று டெல்லி முதல் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
"வளர்ச்சியில் டெல்லியை முதன்மைப்படுத்தும் முயற்சிக்கு இந்த தேர்தல் தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். டெல்லியின் மக்கள் அனைவரும் இந்த தேர்தலில் புதிய வரலாற்றை படைப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: