You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவை விமர்சிக்கும் இம்ரான் கான்; கேலி செய்யும் ட்விட்டர் வாசிகள்
வங்கதேசத்தில் 2013ஆம் ஆண்டு நடந்த வன்முறை சம்பவத்தின் காணொளி ஒன்றை, உத்தரப்பிரதேச காவல்துறை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல் என்று ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட காணொளியை நீக்கிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதேபோன்று வேறொரு செய்தியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை முதலில் பதிவிட்ட காணொளியை நீக்கியுள்ள இம்ரான் கான், நியூஸ் 18 செய்தி இணையதளத்தின் செய்தி ஒன்றை சனிக்கிழமை மதியம் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருக்கும் வறுமை உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்காமல் இந்தியாவில் நடப்பதைப் பற்றி தவறான தகவல்களை பகிர்ந்து வருவதாக அவரது பதிவின் பின்னூட்டத்திலேயே இந்தியாவைச் சேர்ந்த பலரும் அவரைக் கண்டித்திருந்தனர்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடந்தபோது, அதிகபட்சமான மரணங்கள் உத்திரப்பிரதேசத்தில் நிகழ்ந்தன. அங்கு குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமியர்களுக்கு சொந்தமான வீடுகள், கடைகள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தும் காணொளிகள், போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக கூறப்படும் காணொளிகள் பலவும் இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகின.
தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று கூறிய அந்த மாநில காவல்துறை தலைவர் ஓ.பி.சிங், மரணங்களுக்கு காரணமான துப்பாக்கிகள் போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு சொந்தமானது என்றும் கூறியிருந்தார்.
பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்கள் மற்றும் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீதே காவல்துறை பதில் தாக்குதல் நடத்த வேண்டியதாகிவிட்டது என்றும் உத்தரப்பிரதேச காவல்துறை கூறியிருந்தது.
இம்ரான் கானின் பதிவும் உத்தரப்பிரதேச காவல்துறையின் மறுப்பும்
நேற்று, வெள்ளிக்கிழமை மாலை இம்ரான் கான் பதிவிட்டிருந்த காணொளியை, தங்கள் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மறுபகிர்வு செய்து மறுப்பு கூறியிருந்த உத்திரப்பிரதேச காவல்துறை, அது மே 2013இல் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடந்த சம்பவத்தின் காணொளி என்று கூறியிருந்தது.
RAB (Rapid Action Battalion) என்று அந்தக் காணொளியில் இருப்பவர்களின் மேலாடைகளில் எழுதப்பட்டுள்ளது அந்தக் காணொளியில் 0:21 மற்றும் 1:27 ஆகிய நேரங்களில் தெரிவதாகவும், வங்க மொழி பேசப்படுவதை அதில் கேட்க முடியும் என்றும் அந்த ட்விட்டர் பதிவில் கூறியிருந்த உத்தரப்பிரதேச காவல்துறை, அது தொடர்பாக சில செய்திகளின் சுட்டிகளையும் பகிர்ந்திருந்தது.
இம்ரான் கான் தவறான காணொளியை பகிர்ந்திருந்தது இந்தியாவில் உள்ள வலதுசாரி ட்விட்டர் பயனாளிகளால் பெரும் எள்ளலுக்கும் கண்டனத்துக்கு உள்ளானது.
இம்ரான் கானின் இன்றைய பதிவிலும் பாகிஸ்தானில் அகமதியாக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடக்கும் தாக்குதல் குறித்து அவர் எதுவும் கூறாமல் இருப்பது குறித்த பின்னூட்டங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
நேற்றைய பதிவை அவர் நீக்கியதையும் சிலர் பின்னூட்டத்தில் கேலி செய்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: