You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டு சீனாவின் தற்காப்புக் கலையான 'தாய் சி'-யை பரப்பும் மோகனா - நம்பிக்கைப் பகிர்வு #iamthechange
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்து வந்தது. அதன் இறுதி அத்தியாயம் இது.)
ஏதோ ஒரு பயணத்தில் எப்போதோ சந்தித்த ஒரு சகபயணி நமக்கு வாழ்வின் மகோனதத்தை உணர்த்தி சென்று இருப்பார். கடலை பொட்டலம் மடிக்கப்பட்டு வந்த பேப்பரில் இருந்த கதை நமக்கு அவ்வளவு நம்பிக்கை அளிப்பதாக இருந்து இருக்கும். யாரோ பெரும் ஆளுமையெல்லாம் தேவை இல்லை, நம்முடன் இருக்கும் சகமனிதர்களின் கதைகளே அவ்வளவு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். நம் வாழ்வைத் திருப்பிப் போடும்.
அப்படியான கதைதான் மோகனாவுடையது.
புற்றுநோயிலிருந்து மீண்டு சீனாவின் தற்காப்புக் கலையான 'தாய் சி'-யைபரப்பி வருகிறார் 60 வயதை கடந்துள்ள மோகனா.
ஒரு வரியில் இதனை சொல்லிவிட்டாலும் இதன்பின் பெரும் வலி இருக்கிறது, ஒரு நெடும் பயணம் இருக்கிறது. நம் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் கதை இது.
ஆணவக் கொலை
மோகனாவின் சொந்த ஊர் மயிலாடுதுறையில் இருக்கும் சோழம்பட்டி.
அந்த கிராமத்திலிருந்து உயர்கல்வி படித்த முதல் பெண் தாம்தான் என்கிறார் அவர்.
மோகனா, "பெண்கள் காவிரிக்கரை தாண்டி செல்வது பாவம். அதவும் படிக்கச் சென்றால் குலப்பெருமை கெட்டுவிடும் என பெண்களை யாரும் அங்கு படிக்க அனுப்ப மாட்டார்கள். ஆனால், கல்வி மட்டும்தான் நம் வாழ்க்கையை மாற்றும் என்பதில் மிக உறுதியாக இருந்தேன். வீட்டில் பெரும் போராட்டம் நடத்தியே கல்லூரியில் சேர்ந்தேன்," என்கிறார்.
கல்லூரியில் சேர்ந்த பின்பும் பல போராட்டங்களை அவர் சந்தித்திருக்கிறார் மோகனா.
"உயர்கல்வி குறித்து ஆலோசனை கூறும் கடிதமொன்றை நண்பர் ஒருவர் எழுதி இருந்தார். அதனைக் காதல் கடிதம் என்று தவறாகப் புரிந்து கொண்ட என் உறவினர்கள் என்னை ஆணவக் கொலை செய்ய திட்டமிட்டார்கள், " என்று தம் பதின்மவயது நாட்களை நினைவு கூறுகிறார்.
"அந்தக் கடிதத்தின் சாரத்தை எதிர்வீட்டிலிருந்தவர் விளக்கி என் பெற்றோருக்குக் கூறிய பின் அந்த ஆணவக் கொலை முயற்சியை கைவிட்டுவிட்டார்கள். அதே சமயம் என்னுடன் பேசுவதையும் என் தந்தை நிறுத்துவிட்டார்," என்று மோகனா கூறுகிறார்.
கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாகக் கீற்று முடைந்து தம் கட்டணம் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டதாகக் கூறுகிறார் மோகனா.
பழனி நாட்கள், 50 நூல்கள்
உயர்கல்வி முடித்தபின் பழனி அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்திருக்கிறார் மோகனா.
அதன் பின் திருமண வாழ்வும் அவருக்கு கசப்பானதாகவே அமைந்திருக்கிறது.
தன் துயரத்தை மறக்க, புத்தகங்களில் மூழ்கி இருக்கிறார். பரந்துபட்ட இவரது வாசிப்பு பழக்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இவரை இணைத்திருக்கிறது.
அவர்களுடன் இணைந்து செயல்படத் தொடங்கிய மோகனா அறிவியல், சமூக அரசியல், கல்வி என பல்வேறு களங்களில் ஏறத்தாழ 50 புத்தகம் எழுதி இருக்கிறார்.
அவர், "வாசிப்புப் பழக்கம் மட்டும் இல்லை என்றால், என் வாழ்வு என்னவாக மாறி இருக்கும் என்றே தெரியவில்லை. வாசிப்பு என் வாழ்வை செழுமைப்படுத்தியது, பல்வேறு மனிதர்கள் புதிதாகச் சந்திக்க உதவியது," என்கிறார்.
பின் இவருக்கு ஏற்பட்ட புற்றுநோய் இவரது வாழ்க்கையை வேறொரு தளத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறது.
புற்றுநோய் தினங்கள்
"ஒரு நாள் மார்பு வலிப்பதுபோல இருந்தது. முதலில் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். பின் மார்பில் ஏற்பட்ட கட்டி பெரிதாகிக் கொண்டே போனது. மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்ததில் அது புற்றுநோய் கட்டி என்று தெரியவந்தது," என்று வலிமிகுந்த அந்த நாட்களை விவரிக்கிறார்.
"அறிவியல் இயக்க பணிகள் இருந்ததால் எனது அறுவை சிகிச்சையைக் கொஞ்ச நாட்கள் தள்ளிப்போட்டேன். இதன் காரணமாகப் புற்றுநோய் இரண்டாவிலிருந்து மூன்றாவது ஸ்டேஜிற்கு சென்றுவிட்டது. அதன்பின் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது," என்கிறார்.
அறுவைசிகிச்சைக்குப் பின் கை செயல்படுவதில் கொஞ்சம் சுணக்கம் இருக்கும் என மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.
அவர்களின் அந்த வார்த்தைகள்தான் இவரை 'தாய் சி' கலை நோக்கி நகர்த்திச் சென்றிருக்கிறது.
மோகனா, "உடல்வலிகளை நிச்சயம் நான் கடந்துவிடுவேன். சிறுவயதில் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் என்னை உறுதியாக்கி இருக்கிறது. ஆனால், அதே நேரம் சிகிச்சைக்குப் பின் வீட்டிலேயே முடங்கி இருப்பது ஒருவிதமான அச்ச உணர்வை ஏற்படுத்தியது.
தற்காப்பு கலை தாய்சி
"தியானம் போல ஒரு கலை தாய் சி. அதன் பயிற்சிகளே ஒரு மெல்லிசை போலதான் இருக்கும்," என்கிறார் மோகனா.
அவர், "என் கல்லூரி முன்னாள் மாணவர்கள் தாய் சி பயிற்சி அளிப்பதை அறிந்தேன். அவர்களிடம் நான் மாணவியாக சேர்ந்தேன்," என்கிறார்.
"இந்தக் கலை என் வாழ்க்கையயே திருப்பிப் போட்டுவிட்டது. உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் தாய் சி கலை பெரும் மாற்றத்தை என் வாழ்வில் உண்டாக்கிவிட்டது," என்று கூறுகிறார்.
'தாய் சி'கலையை முறையாக கற்றிருக்கும் மோகனா, இதில் முதுநிலை டிப்ளமா பட்டமும் பெற்றிருக்கிறார்.
அவர், "'தாய் சி 'யில் முதுநிலை டிப்ளமா பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் நான்தான். உண்மையில் அதில் எனக்குப் பெருமைதான்," என்கிறார்
இந்த கலையை தமிழகமெங்கும் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் மோகனா. இதோடு பழனி பகுதி துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் களத்தில் செயல்பட்டு வருகிறார் மோகனா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: