நரேந்திர மோதிக்கு கோயில் கட்டிய திருச்சி விவசாயி

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - நரேந்திர மோதிக்கு கோயில்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி எனும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.

இந்தக் கோயிலைக் கட்டிய 50 வயதாகும் சங்கர் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியில் அங்கம் வகிக்கிறார்.

ரூபாய் 1.2 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு தினமும் இரு முறை பூஜை செய்யும் சங்கர் சில நேரங்களில் பாலபிஷேகமும் செய்கிறார்.

தனது 10 ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்தபின்பு இந்தக் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று அவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் ஆகிய இடங்களில் ஏற்கனவே நரேந்திர மோதிக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.

தினமணி: உடல் உறுப்பு தானம் செய்யய 12,511 போ் பதிவு

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் வழங்க இதுவரை 12,511 போ் பதிவு செய்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பு நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. அதன் காரணமாக உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் நாட்டின் தலைநகராகவே தமிழகம் விளங்கி வருகிறது. அதனால்தான், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உடல் உறுப்பு தானத்தில் நமது மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

மூளைச் சாவு அடைந்த ஒருவரால் 7 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். அதன் அடிப்படையில், ஒருவரிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், உரிய விதிகளின்படியே பயனாளிகளுக்கு பொருத்தப்படுகின்றன.

தமிழகத்தில் இதுவரை 1328 கொடையாளர்களிடம் இருந்து 7,804 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 2,387 சிறுநீரகங்களும், 2,004 கருவிழிப் படலங்களும், 1,225 கல்லீரல்களும், 841 இதய வால்வுகளும், 581 இதயங்களும், 494 நுரையீரல்களும் தானமாகப் பெறப்பட்டுள்ளன.

உடல் உறுப்புகளை பயனாளிகளுக்கு அளிப்பதில் அரசு மருத்துவமனைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன் பின்னரே தனியாா் மருத்துவமனைகளுக்கு உறுப்புகள் வழங்கப்படுகின்றன என்று அவர்கள் தெரிவித்தனர் என்கிறது தினமணி செய்தி.

தினத்தந்தி - 'பின்வாங்க மாட்டோம்'

தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாக்கத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் சுரேஷ் பூஜாரி உறுதியளித்துள்ளார் என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"தேசிய குடிமக்கள் பதிவேடு நாட்டின் நலனுக்காக செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் அனைத்து அரசு சலுகைகளையும் அனுபவித்து வருகிறார்கள். அரசியல் கட்சிகள் அவர்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்தி வருகிறது. இது கொள்கை பிரச்சனை. அதனை அமல்படுத்துவதில் இருந்து பாரதிய ஜனதா பின்வாங்காது," என ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் பாஜக தேசிய செயலாளர் சுரேஷ் பூஜாரி கூறியுள்ளார்.

தி இந்து - பெங்களூருவில் வெளிநாட்டவர் தடுப்பு மையம் எதற்கு?

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் ஜனவரி 1, 2020 முதல் வெளிநாட்டவர்களை தடுத்து வைக்கும் மையம் செயல்பாட்டுக்கு வருகிறது என தி இந்து ஆங்கில நாளிதழ் தெரிவிக்கிறது.

இது சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பும் முன் தங்க வைப்பதற்கான மையம் என்றும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (என்.ஆர்.சி) இதற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றும் இந்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: