You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதி: இந்திய அரசின் முடிவுக்கு என்ன காரணம்?
- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய முப்படைகளையும் அதன் பிற துறைகளையும் வழிநடத்தும் ஒரே தலைமைத் தளபதி பதவியை உருவாக்க பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அந்த பதவிக்கு நியமிக்கப்படும் உயரதிகாரி, நான்கு ஸ்டார்களுக்கான தகுதி வாய்ந்த ஜெனரல் ஆக இருப்பார் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் இந்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், முப்படைகளுக்கும் சேர்த்து புதிய தலைமை தளபதியை நியமிக்க வசதியாக ஒரு புதிய பதவியை உருவாக்கவும் அவரே பாதுகாப்பு விவகாரங்கள் துறையின் தலைவராக இருப்பார் என்றும், பாதுகாப்பு அமைச்சகம் முன்மொழிந்த பரிந்துரை முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இந்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புதிய நியமனம் ஏன்?
1999-ஆம் ஆண்டில் கார்கில் போருக்கு பிறகு இந்திய அரசு நியமித்த உயர்நிலைக்குழு, முப்படைகளின் தேவை கருதியும் தேச பாதுகாப்பு தொடர்புடைய முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில், அரசுக்கும் முப்படைகளுக்கும் இடையே ஒரு பாலம் போல செயல்பட்டு ஆலோசனை வழங்க உயர்நிலை அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.
நீண்ட காலமாக விவாத அளவில் இருந்த இந்த பரிந்துரை குறித்து, இந்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது அமலில் உள்ள முப்படை தளபதிகள் குழுவுக்கு (சீஃப் ஆஃப் ஸ்டாஃப் கமிட்டி) முப்படைகளில் தலைமை தளபதிகளாக உள்ளவர்களில் ஒருவர் தலைவராக இருப்பதற்கு பதிலாக, இனி பாதுகாப்பு தளபதிகளின் தலைமைத் தளபதியாக ஒருவர் நியமிக்கப்படுபவர், முப்படை தளபதிகள் குழுவுக்கும் தலைவராக அவரே செய்படுவார் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
பொறுப்புகள் என்ன?
இந்திய முப்படைகளில் ராணுவ ஜெனரல் அல்லது விமானப்படை ஏர் சீஃப் மார்ஷல் அல்லது கடற்படை அட்மிரல் ஆகிய உயர் பதவிகளில் இருந்தவர்களில் ஒருவர் மட்டுமே பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி பதவிக்கு நியமிக்க தகுதி பெறுவார். ராணுவ பணியில் ஜெனரல் அந்தஸ்தில் இருப்பவருக்கு நான்கு நட்சத்திர தகுதியும் அந்தஸ்தும் வழங்கப்படும். காவல்துறையில் அதன் தலைமை இயக்குநருக்கு மூன்று நட்சத்திர தகுதி வழங்கப்படும். அவர்களுக்கான அந்தஸ்து, அவர்களுடைய அலுவல்பூர்வ வாகனத்திலும் சீருடை சட்டை காலர் பேட்ஜிலும் பிரதிபலிக்கும்.
அதுபோலவே, ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப்படை தலைமை தளபதி பதவி வகிப்பவர்களுக்கு நான்கு நட்சத்திர தகுதி உள்ளது. விதிவிலக்காக, காவல் பணியில் இருந்து இந்திய உளவுத்துறை (இன்டலிஜென்ஸ் ப்யூரோ) பணியில் அதன் இயக்குநராக நியமிக்கப்படும் உயரிதாரிக்கு நான்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்படும்.
அந்த வகையில், முப்படைகளின் தலைமை தளபதி (சிடிஎஸ்) பதவிக்கு நியமிக்கப்படுபவர், அதே நான்கு நட்சத்திர அந்தஸ்துடன் புதிய பணியை தொடருவார். அந்த பதவியுடன் சேர்த்து, அவர் பாதுகாப்பு விவகாரங்கள் துறைக்கான தலைவராகவும் செயல்படுவார்.
தேச பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து ஆயுதங்கள் கொள்முதல், முப்படைகளின் கூட்டு நடவடிக்கை, பயிற்சி உத்திகள், கேந்திர நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும், அரசை நடத்தும் ஆட்சியாளர்களுக்கு முப்படை சேவை குறித்த ஆலோசனைகளை வழங்குவது, முக்கிய ஒப்புதல்களை பெற்றுத்தருவது ஆகிய பணிகளை ஒருங்கிணைக்கும் ராணுவ ஆலோசகர் பணியையும் புதிய தலைமை தளபதி ஆற்றுவார்.
பாதுகாப்பு அமைச்சரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் புதிய தலைமை தளபதி, இந்திய பாதுகாப்புத்துறை ஆயுத கொள்முதல் கவுன்சில் மற்றும் பாதுகாப்பு திட்டமிடல் குழுவின் உறுப்பினராக இருப்பார்.
யாருக்கு வாய்ப்பு?
பணி மூப்பு, நிபுணத்துவம் அடிப்படையில் புதிய முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்படும் தகுதி வாய்ந்தவர்கள் வரிசையில், தற்போதைய ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் முன்னணி வகிக்கிறார். ராணுவ தலைமை தளபதியாக அவரது மூன்றாண்டு பதவிக்காலம் இந்த மாத இறுதியுடன் நிறைவுபெறுகிறது. அதனால், புதிய முப்படை தலைமை தளபதிக்கு அவரே நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
சிடிஎஸ் பதவிக்கு நியமிக்கப்படும் உயரதிகாரியின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். அந்த பதவி வகித்த உயரதிகாரி, பதவிக்காலம் முடிந்த நாளில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித அரசு தொடர்புடைய பணியிலோ, தனியார் பணியிலோ ஈடுபட அனுமதி கிடையாது.
இந்திய முப்படைகளின் தலைமை தளபதிகளின் தலைவராக செயல்படும்போதும், அவரால் நேரடியாக முப்படைகளின் நடவடிக்கைகளுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. அரசுக்கு ஆலோசனை கூறுவதும், முப்படை தளபதிகளிடம் அரசின் முடிவுகளை தெரிவித்து அவற்றை செயல்படுத்துவதற்கான நிர்வாக ஒருங்கிணைப்பில் மட்டுமே அவரால் ஈடுபட முடியும் என்று பாதுகாப்பு அமைச்சர உயரதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: