பட்ஜெட் 2019: ராணுவ நிதி ஒதுக்கீட்டில் சிறந்தது பாஜகவா காங்கிரஸா?

    • எழுதியவர், ஜூகல் ஆர் புரோகித்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பட்ஜெட் தரவுகளிலுள்ள எண்களை எடுத்து அவற்றை முந்தைய தரவுகளோடு ஒப்பிட்டு பார்ப்பதற்கு முன்னால், வரலாற்று ஆசிரியர் ஜெஃப்ரி பிளேனி கூறிய இரண்டு வரிகள் இந்த பட்ஜெட் ஆய்வு ஏன் முக்கியமானது என்பதை நாம் புரிந்துகொள்ள உதவும்.

"போரிடும் நாடுகள் தங்களின் வலிமையை ஒப்பிட்டு பார்த்து, ஏற்றுக்கொள்ளும்போது போர்கள் முடிவடைகின்றன. அந்த நாடுகள் தங்களின் வலிமை ஒப்பீடுகளை ஏற்றுக்கொள்ளாதபோது போர்கள் தொடங்குகின்றன" என்கிறார் ஜெஃப்ரி பிளேனி.

சீனாவும், பாகிஸ்தானும், தங்களுக்குள் நெருங்கிய நட்பு நாடுகளாக விளங்கும் நிலையில், அணு ஆயுதங்களுடைய இந்த இரு எதிரி நாடுகளுக்கு இடையில் இந்தியா அமைந்துள்ளது.

இந்த இரண்டு நாடுகளோடும் இந்தியா போரிட்டுள்ளதால், பிற நாடுகள் எதிர்கொள்ளாத பிரச்சனைகளையும், பாதுகாப்பு சுற்றுச்சூழலையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.

எண்ணற்ற உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை பற்றி இதில் எழுதப்போவதில்லை. ஆனால், உள்நாட்டு பிரச்சனைகளிலும் ராணுவத்தின் தலையீடுகளை நாம் தவிர்த்துவிட முடியாது.

பலவீனமான அல்லது ராணுவ திறன்களில் சீரழிவு என்கிற பார்வை, கடந்த கால மோதல்கள் நிரூபித்திருப்பதைபோல ராணுவத்தின் தவறான செயல்பாடுகளை தூண்டலாம்.

இந்த சூழலில்தான் இந்தியாவின் மில்லியனுக்கும் மேலான எண்ணிக்கையில் இருக்கின்ற ஆயுதப்படைபிரிவுகள் சிறந்த, அதிகமான வசதிகளை பெற்றுகொள்ள வேண்டியுள்ளது.

இது தொடர்பாக, முந்தைய தரவுகள் சிலவற்றை சற்று திரும்பி பார்ப்போம்.

2014ம் ஆண்டு மே மாதம் ஆட்சியமைத்த பின்னர், நரேந்திர மோதியின் அரசில், முழுநேர பாதுகாப்பு அமைச்சர் இருக்கவில்லை.

நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பையும் கூடுதலாக கையாள்வார் என்று கூறப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சகத்தை நிதி அமைச்சரே வழிநடத்துவதால், பாதுகாப்பு படைப்பிரிவுகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று பலரும் தெரிவித்தனர்.

ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு

ஜூலை 10, 2014

2014ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி, அருண் ஜெட்லி முதலாவது பட்ஜெட்டை சமர்பித்தார்.

ராணுவ செலவுக்கு ரூ. 2 லட்சத்து 33 ஆயிரத்து 872 கோடி தொகை ஒதுக்குவதாக அறிவித்தார்.

இது, 2014ம் ஆண்டு பிப்ரவரியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிவித்த தொகையை விட ரூ. 5000 கோடி அதிகமாகும்.

2013-14 நிதியாண்டு ஒதுக்கப்பட்டதைவிட சுமார் 9 சதவீத அதிகரிப்பாக இது அமைந்தது.

பிப்ரவரி 28, 2015

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலாவது முழுமையான பட்ஜெட் 2015ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி சமர்பிக்கப்பட்டது.

முந்தைய பட்ஜெட்டைவிட இப்போது சுமார் 9 சதவீத அதிகரிப்பாக ரூ. 2 லட்சத்து 55 ஆயிரத்து 443 கோடி தொகை ராணுவத்திற்கு ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 29, 2016

2016ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி சமர்பித்த மத்திய அரசு பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ராணுவத்திற்கான செலவை குறிப்பிடவில்லை.

இதற்கு எல்லோரும் ஆச்சர்யத்தை தெரிவித்தவுடன், ஓராண்டுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டதோடு 2 சதவீத அதிகரிப்போடு ரூ. 2 லட்சத்து 58 ஆயிரத்து 502 தொகை ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

2015ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி, ஐஎன்எஸ் விக்கிரமாதித்தியா விமானந்தாங்கி கப்பலில் கட்டளை தளபதிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "முக்கிய வல்லரசு நாடுகள் தங்களின் படைப்பிரிவுகளை குறைத்து கொண்டு தொழிற்நுட்பங்களை அதிகரித்து வருகையில், நாம் படையின் அளவை தொடர்ந்து விரிவாக்க பார்க்கிறோம். ஒரே சமயத்தில் நவீனமயமாக்குவதும், படைப்பிரிவுகளை விரிவாக்குவதும் கடினமான மற்றும் தேவையற்ற குறிக்கோளாக உள்ளது" என்று பேசினார்.

பிப்ரவரி 01, 2017

2017ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி பாதுகாப்பு பட்ஜெட்-க்கு ரூ. 2 லட்சத்து 74 ஆயிரத்து 114 கோடி தொகையை ஒதுக்குவதாக நிதியமைச்சர் அறிவித்தார். அதற்கு முந்தைய ஆண்டை விட 6 சதவீத அதிகரிப்பாக இது அமைந்தது.

முனைவர் பட்ட ஆய்வு மாணவர் லக்ஸ்மன் கே பிகரா என்பவர் பாதுகாப்பு அமைச்சகத்தால் நிதி ஆதரவு வழங்கப்படுகிற ராணுவ கல்வி மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்திற்கு எழுதிய கட்டுரையில் இந்த ஒதுக்கீட்டை, "முற்றிலும் போதாதது" என்று குறிப்பிட்டிருந்தார்.

பிப்ரவரி 01, 2018

2018ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி ராணுவ செலவுகளுக்காக ரூ. 2 லட்சத்து 95 ஆயிரத்து 511 கோடி தொகையை நிதியமைச்சர் ஒதுக்கீடு செய்தார்.

முந்தைய ஆண்டை விட 8 சதவீத அதிகரிப்பாக இந்த ஒதுக்கீட்டு தொகை இருந்தது.

2019 பிப்ரவரி 01

தனது முதலாவது பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் பொறுப்பு பியூஸ் கோயல், "2019-20 நிதியாண்டில் நமது நாட்டு ராணுவ பட்ஜெட் முதல் முறையாக ரூ. 3 லட்சம் கோடியை தாண்டும்' என்று அறிவித்தார்.

சரியாக 3 லட்சத்து 18 ஆயிரத்து 847 கோடி தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் கடந்த ஆண்டை விட 8 சதவீத அதிகாரிப்பாகும்.

எனவே, பாதுகாப்பு படைப்பிரிவுகளுக்கு அவசியமானவற்றை வழங்குவதில் தேசிய ஜனநாயக கூட்டணி சிறந்ததா? அல்லது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி சிறந்ததா?

பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் நிதி ஆலோசகர் (திறன் வளர்ச்சி) இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இந்த இரண்டு கூட்டணிகளை ஒப்பிடுகையில், தற்போதைய நிலை மாறவில்லை. தேவைக்கும், விநியோகத்திற்கும் இடைவெளி கடந்த 15 ஆண்டுகளாக உள்ளது. வேறுபட்ட புள்ளிகளில் இந்த இடைவெளி அதிகரித்துள்ளது அல்லது குறைந்துள்ளது. ஆனால், நிறைவாகவில்லை" என்கிறார்.

படைப்பிரிவுகளின் மூத்த அதிகாரிகள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் (பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் உள்பட) பார்வையிலிருந்து பார்த்தால், மோதி அரசின் ராணுவ பட்ஜெட் வேதனை அளிப்பதாகவே உள்ளது.

இது பற்றி சிலரின் கருத்துகள்:

"நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், நமது பட்ஜெட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பட்ஜெட் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டு தொகை அதிகரிப்பது விரைவாக வேகத்தில் இருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். காரணம், பல தேவைகள் உள்ளது எங்களுக்கு தெரிகிறது" என்று 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய கடற்படை தலைமை தளபதி சுனில் லன்பா கூறினார்.

"...1962ம் ஆண்டு இந்திய - சீனப் போர் நடைபெற்றது முதல் இதுவரை நாட்டின் மொத்த உள்நாட்டு மதிப்பில் 1.56 சதவீதமாக ராணுவ செலவு உள்ளது. தற்போதைய புவி-அரசியல் சூழ்நிலையில், இந்தியா போன்ற பெரிய நாடு தன்னிறைவு பெற்றுவிட முடியாது..." என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகர் ஜோஷியின் தலைமையிலான குழு 2018ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி மதிப்பிட்டுள்ளது.

"...2018-19 நிதியாண்டு பட்ஜெட் எமது நம்பிக்கைகளை தகர்த்துள்ளது. பெரும்பான்மை தேவைகள் சிறிது குறைபாடுகளோதான் கிடைத்துள்ளன. 2017ம் ஆண்டு செய்ய முடிவு செய்தவைகளும் 2018ம் ஆண்டு நடைமுறையாகி தொடர்வதால் நிலைமை மேலும் அழுத்தமாகிறது" என்று 2018ம் ஆண்டு மார்ச் மாத நாடாளுமன்ற நிலை குழுவில் படை ஊழியர்களின் துணை தலைவர் தெரிவித்தார்.

"...கடந்த சில ஆண்டுகளாக விமானப்படைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையில் கணிசமான சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது... விமானப்படையை நவீனப்படுத்துவதற்கு ஒதுக்கப்படும் இந்த தொகை தொடர்ந்து பெரும் சரிவை கண்டுள்ளது. 2007-08ம் நிதியாண்டு மொத்த ராணுவ பட்ஜெட்டில் 17.51 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2016-17ம் நிதியாண்டு இது 11.96 சதவீதமாக குறைந்துள்ளது" என்று 2018ம் ஆண்டு மார்ச் மாதம் பாதுகாப்பு பற்றிய நடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்தது.

(இதை எழுதியவர் பிபிசி இந்தியா-வில் தொலைக்காட்சி சேவையில் மூத்த ஒளிபரப்பு பத்திரிகையாளராக வேலை செய்து வருகிறார்)

பாகிஸ்தானியர்களிடம் காஷ்மீர் மக்களை இந்திய ராணுவம் காப்பாற்றிய நேரடி சாட்சி

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :