You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹைதராபாத் பாலியல் வல்லுறவு வழக்கு: அழுகிய உடல்களை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவு
ஹைதராபாத் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் காவல்துறை என்கவுண்டரில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களையும் மறுபிரேத பரிசோதனை செய்து அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நால்வரின் உடல்களை ஒப்படைப்பது குறித்து முடிவு செய்ய தெலங்கானா உயர் நீதிமன்றம் இன்று, சனிக்கிழமை, விசாரணை மேற்கொண்டது. இது தொடர்பாக காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷ்ரவன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்களை காவல் துறையினர் டிசம்பர் 6 அன்று என்கவுண்டர் செய்தனர்.
என்கவுண்டர் செய்யப்பட்டவர்களின் உடல்கள் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உடல்கள் 50% அழுகிவிட்டதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் இன்னும் 7 முதல் 10 நாட்களில் உடல்கள் முற்றிலுமாக அழுக்கிவிடும் என்றும் தெரிவித்தார்.
இதன் பிறகு உடல்களை மேலும் பதப்படுத்த வேறு ஏதேனும் வசதிகள் உள்ளதா என நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, மருத்துவர் ஷ்ரவன் அது குறித்து தனக்கு தெரியாது என பதிலளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தெலங்கானா மாநில அரசின் அட்டார்னி ஜெனரல் கூறுகையில், மனுதாரர்கள் இன்னொரு முறை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என பொதுநல வழக்கு தொடரவில்லை.
அவ்வாறு இன்னொரு முறை பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய தேவை இருந்தால், தெலங்கானாவின் தடயவியலில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மேற்கொள்வார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அட்டார்னி ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால் ஏற்கனவே மனுதாரர்கள் தரப்பில் இருந்து மறு பிரேதப் பரிசோதனைக்காக உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என இந்த வழக்கின் விசாரணைக்கு உதவ நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிரகாஷ் ரெட்டி கூறுகிறார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து ஆதாரங்களையும் பாதுகாக்க வேண்டும். எனவே மறு பிரேதப் பரிசோதனைக்காக நீதிமன்றம்தான் உத்தரவிடவேண்டும் என்று பிரகாஷ் ரெட்டி தெரிவித்தார்.
மேலும் மறு பிரேதப் பரிசோதனையை சுயாதீன அமைப்பிடம் ஒப்படைப்பதன் மூலம், இந்த நடை முறையின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்றும் பிரகாஷ் ரெட்டி கூறுகிறார்.
மருத்துவ கண்காணிப்பாளர் சொன்னது போல, இன்னும் 10 நாட்களில் உடல் அழுகும் நிலை ஏற்படுமானால் உடல்களை அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பது நல்லது என்றும் பிரகாஷ் ரெட்டி தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்ன?
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தெலங்கானா உயர் நீதிமன்றம், டிசம்பர் 23ம் தேதி மாலை 5 மணிக்குள் மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தது. மேலும் மறு பிரேதப் பரிசோதனை முழுவதும் காணொளியாக பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷ்ரவன் உடல்களின் அழுகும் நிலை குறித்து குறிப்பிட்ட தகவல்களை கருத்தில் கொண்டு, இந்த மறு பிரேதப் பரிசோதனையை இந்திய மருத்துவ வாரியம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
மறு பிரேதப் பரிசோதனைக்கு பிறகு காவல் துறையினரின் கண்காணிப்பில் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: