You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கு: பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் சேங்கருக்கு ஆயுள் தண்டனை
உத்தர பிரதேசத்தில் உள்ள உன்னாவ்-யில் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சேங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லியில் உள்ள நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
குல்தீப் சிங் சேங்கருக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ள நீதிமன்றம் அதில் 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து மூன்று மாதத்துக்கு ஒருமுறை ஆராயுமாறும், அவரது குடும்பத்தினருக்கு பாதுக்கான இருப்பிடத்தை ஏற்பாடு செய்யுமாறும் சி.பி.ஐ-க்கு தீஸ் ஹசாரி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (வன்புணர்வு) மற்றும் பாலியல் தாக்குதல்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) பிரிவு 5(C) மற்றும் 6 ஆகியவற்றின் கீழ் சேங்கர் குற்றவாளி என்று கடந்த டிசம்பர் 16ஆம் தேதி டெல்லி தீஸ் ஹசாரியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் உறுதியானது.
உத்தரப் பிரதேச காவல்துறையால் விசாரணை செய்யயப்பட்டிருந்த இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குல்தீப் சிங் சேங்கர் மீதான வழக்கு என்ன?
பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்வாகி உன்னாவ் சட்டமன்ற உறுப்பினரான குல்தீப் சிங் சேங்கர் வீட்டுக்கு வேலைக்கு சென்ற சிறுமி ஒருவர், தம்மை சேங்கர் வன்புணர்வு செய்ததாக ஜூன் 2017-ல் குற்றச்சாட்டு வைத்தார். தற்போது அவருக்கு 19 வயதாகிறது.
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க கூடாது என தாங்கள் மிரட்டப்பட்டதாக பெண்ணின் தரப்பினர் கூறினார்.
ஏப்ரல் 2018ல் இந்தப் பெண் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார்.
அடுத்த நாள் அந்தப் பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் உயிரிழந்தார். சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்படுவதற்கு முன்னதாக எம்.எல்.ஏ.வின் சகோதரர் அதுல் சேங்கர் பெண்ணின் தந்தையைத் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
அந்த பெண்ணின் தந்தை இறப்பதற்கு முன் ஒரு காணொளி சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் அவர் குல்தீப் சிங் சேங்கரின் தம்பி அதுல் சேங்கர் உள்ளிட்டவர்களால் தாக்கப்படுவதாகத் தெரிந்தது.
அதன் பின்னரே குல்தீப் சிங் சேங்கர் மீது வன்புணர்வு மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் மீது கடந்த ஜூலை மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே லாரி மோதியதில் அவரது உறவினர் பெண்கள் இருவர் கொல்லப்பட்டனர். அந்தப் பெண்ணும் அவரது வழக்குரைஞரும் பலத்த காயம் அடைந்தனர்.
கார் மீது மோதிய லாரியின் பதிவு எண் கருப்பு மையால் அழிக்கப்பட்டிருந்தது.
முதலில் இது விபத்து என்று போலீஸ் கூறியது. எனினும், பிறகு, குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சேங்கர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆகஸ்டு 1ஆம் தேதி சேங்கர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக அறிவித்தது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: