You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் 43 பேர் இறந்த தொழிற்சாலையில் மீண்டும் தீப்பற்றியது
டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டு 43 தொழிலாளர்கள் உயிரிழந்த அதே கட்டடத்தில் மீண்டும் புதிதாக தீப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
"புதிதாக ஏற்பட்டுள்ள தீயை அணைப்பதற்காக சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன" என்று ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த கட்டடத்தின் பால்கனியில் இருந்து புகை வெளியானதை அடுத்து தீயணைப்பு படை அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டெல்லி ராணி ஜான்சி சாலையில் உள்ள பொம்மை மற்றும் பயணப் பை (ட்ராலி பேக்) தயாரிக்கும் இதே தொழிற்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.
சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிபிசி ஹிந்தி செய்தியாளர் அனந்த் பிரகாஷ், தாம் விசாரித்த பலரும் இந்த விபத்து மின் கசிவால் நடந்திருக்கவே வாய்ப்புள்ளது என்று கூறியதாகத் தெரிவித்திருந்தார்.
எனினும், இதுவரை தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் அதே கட்டடத்தில் தீ பற்றியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நேற்று தீ விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேற்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்ததுடன், இதுகுறித்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: