You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனா- அமெரிக்கா வர்த்தகப் போர் விளைவால் மீண்டும் சரிந்தது சீனாவின் ஏற்றுமதி
சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகப் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதத்துக்கான சீனாவின் ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடும்போது, சுமார் 1.1% அளவுக்கு சீனாவின் ஏற்றுமதி குறைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக சீனாவின் ஏற்றுமதி தொடர் சரிவை கண்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவுக்கான சீன ஏற்றுமதி 23% அளவுக்கு குறைந்துள்ளது.
தற்போது இருநாடுகளுக்கு இடையே நிலவி வரும் வர்த்தக பிரச்சனையில், அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்குள் சீன பொருட்கள் மீது அமெரிக்கா மேலும் சில வரிகளை விதிக்க உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் லாரி குட்லோ, சீனாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட டிசம்பர் 15 காலக்கெடு அமலில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சீனா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் சிலவற்றின் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிக்க உள்ளது. அந்த பொருட்களின் மதிப்பு சுமார் 156 பில்லியன் டாலர்கள் ஆகும்.
இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக பிரச்சனையை முடித்து ஒரு சுமூகமான உடன்படிக்கையை எட்ட அமெரிக்காவும், சீனாவும் முயன்று வருகின்றன. ஆனால், இதுவரை அம்முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
அமெரிக்கா விதிக்கவுள்ள புதிய வரிகளுக்கு சீனா ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தி விலக்கு பெற்றாலும், பல அமெரிக்க வர்த்தகர்கள் ஏற்கனவே மாற்று சந்தையை கண்டுபிடித்துவிட்டதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை எல்லாம் சரியாக சென்று கொண்டிருப்பதாக கடந்த வியாழக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், அமெரிக்காவுடன் போடப்படும் இடைக்கால ஒப்பந்தத்தில் ஏற்கனவே சீனா மீது விதிக்கப்பட்டிருக்கும் வரிகளை அமெரிக்கா விலக்க வேண்டும் என்று சீனா கூறுகிறது.
இரு நாடுகளுக்கு இடையே கடந்த 17 மாதங்களாக நீண்டு கொண்டே செல்லும் இந்த வர்த்தகப் போரால் சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது.
சீனாவின் பொருளாதாரம் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்திக்கும் நிலையில், ஆட்சியாளர்கள் நிறைய பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் மாதம், கடந்த ஆண்டின் இதே மாதத்தை ஒப்பிடுகையில், சீனாவின் இறக்குமதி 0.3 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து, இப்படி மாதா மாத ஒப்பீட்டில் இறக்குமதி உயர்வது இதுவே முதல் முறை.
உலக நாடுகளுடன் சீனாவின் வணிக உபரி (இறக்குமதியைவிட ஏற்றுமதி அதிகமாக இருத்தல்) வீழ்ந்துள்ளது என்றாலும், இன்னுமும் ஏற்றுமதிமதிப்பு இறக்குமதியைக் காட்டிலும் மாதத்துக்கு 38 பில்லியன் டாலர் கூடுதலாகவே உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: