You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"பாஜகவோடு சேர்ந்தால் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாக சொன்னார் மோதி": சரத்பவார்
மகாராஷ்டிராவில் பாஜகவோடு சேர்ந்து பணியாற்றினால் தமது மகள் சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாக பிரதமர் நரேந்திர மோதி கூறியதாகவும் தாம் மறுத்துவிட்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மாகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க அதன் கூட்டணி கட்சியான சிவசேனை மறுத்துவிட்ட நிலையில் நரேந்திர மோதி தம்மை தொடர்புகொண்டு பாஜகவுடன் சேர்ந்து பணியாற்றும்படி கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார் சரத் பவார்.
பருவகாலத்திற்கு முந்தைய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசின் உதவி கோருவதற்கு நவம்பர் 20ம் தேதி தாம் பிரதமரை சந்தித்தபோது பாஜக-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து செயல்படுவது குறித்து நரேந்திர மோதி பேசியதாகவும் பவார் தெரிவித்தார்.
அதற்கு "நமது தனிப்பட்ட உறவு நன்றாக உள்ளது. இந்த உறவு நன்றாகவே இருக்கும். ஆனால், அரசியல் ரீதியாக சேர்ந்து பணிபுரிவது நடக்காது" என்று தெரிவித்துவிட்டதாக சரத் பவார் கூறியுள்ளார்.
இதற்கு மறுமொழியாக,, வளர்ச்சி, தொழில்மயமாக்கம், விவசாயம் ஆகிய பல பிரச்சனைகளில் நமது அணுகுமுறைகள் வேறுபட்டவை அல்ல என்று நரேந்திர மோதி கூறியதாகவும் பவார் தெரிவித்தார்.
இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, நடாளுமன்றத்தில் சரத் பவாரைப் பற்றி புகழ்ந்து பேசியிருந்த நரேந்திர மோதி, தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் இருந்தும், சரத் பவாரின் அணுகுமுறையில் இருந்தும் பாஜக அதிகம் கற்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிர சட்டமன்றத்தில் மொத்தமாக சேர்த்து 98 இடங்கள் வைத்துள்ள என்.சி.பி.யும், காங்கிரசும் சிவசேனை ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது என்று கடந்த நவம்பர் 22ம் தேதி மாலை முடிவெடுத்தன.
மறுநாள் சிவசேனை ஆட்சி அமையும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இடைப்பட்ட ஓர் இரவில், என்.சி.பி. சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் திடீரென பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தார்.
இதையடுத்து, ஆளுநர் பாஜகவின் தேவேந்திர பட்னாவிசை ஆட்சியமைக்க அழைத்து, காலையிலேயே அவருக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.
ஆனால் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உறுதியாக அஜித் பவார் பின்னால் செல்ல மறுத்து, சரத்பவார் உடன் நின்றனர்.
சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சி(என்சிபி), காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து அமைத்துள்ள வளர்ச்சிக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர முதல்வராக உத்தவ்பதவி ஏற்றுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்