You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜே.என்.யூ: பல்கலைக்கழகத்துக்கு நிதி நெருக்கடி; மாணவர்களுக்கு வாழ்க்கை பிரச்சனை
கடந்த ஒரு வார காலமாக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேன்யு) மாணவர்கள் வகுப்பைபுகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். உயர்த்தப்பட்ட விடுதி கட்டணத்தை திரும்ப பெற கோரி நவம்பர் 18ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியும் நடத்தினர். ஆனால் பல்கலைக்கழக தரப்பில் இருந்து எந்த மாற்று அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஜேன்யு விடுதியில் புதிய கட்டணமாக, சீட்டர் ரூமின் மாத வாடகையை 20 ரூபாயில் இருந்து 600 ரூபாய் ஆகவும், இருவர் தாங்கக்கூடிய அறையின் வாடகையை 10 ரூபாயில் இருந்து 300 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு மாதமும் சேவை கட்டணமாக 1700 ரூபாயும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே புதிய வரைமுறைகளை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் உணவு, மின்சாரம், தண்ணீருக்கான கட்டணத்தை தவிர, ஒரு மாணவர் சுமார் 3350 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
எனவே மொத்தமாக, இந்த கட்டணம் எம்.ஃபில் மாணவர்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபாய் ஊக்க தொகையைவிட அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும் தேவையான பாடப் புத்தகங்கள் மற்றும் ஓவ்வோர் ஆண்டும் செலுத்த வேண்டிய வருடாந்திர கட்டணமும் உள்ளது.
ஆனால் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, மாத வருவாய் 12,000 ரூபாய்க்கும் கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் அறிவிக்கப்பட்ட புதிய விடுதி கட்டணத்தில் பாதி கட்டணம் செலுத்தினால் போதும் என பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவித்தார்.
அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டும் 300 ரூபாய் என அறிவிக்கப்பட்ட விடுதி கட்டணம் 150 ரூபாய் ஆக குறைக்கப்பட்டது. அரசாங்கம் இதை மிக பெரிய சலுகையாகவும் அறிவித்தது.
இந்த கட்டண உயர்வால் எவ்வளவு மாணவர்களுக்கு சிரமம் ?
ஜேஎன்யு அலுவல்பூர்வ வலைதளத்தின் தகவலின்படி, 2017-18ம் ஆண்டு 1556 மாணவர்கள் பல்கலைகழகத்தில் சேர்ந்துள்ளனர், அதில் 623 மாணவர்கள் பொருளாதாரதில் பின்தங்கிய மாணவர்கள், அவர்கள் குடும்பத்தின் மாத வருவாய் 12,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. அதாவது ஜேஎன்யுவை சேர்ந்த 40% மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளனர்.
மேலும் 904 மாணவர்கள் 12000 ரூபாய்க்கும் மேலாக மாத வருவாய் இருக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். இதன் அர்த்தம், அவர்கள் குடும்பத்தின் மாத வருவாய் 20,000 அல்லது 2 லட்சம் ரூபாய் ஆக கூட இருக்கலாம். இதில் 570 மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்தவர்கள்.
ஜேஎன்யுவில் உள்ள, பாஜக சார்புடைய ஏபிவிபி மாணவர் அமைப்பும் இந்த புதிய கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். மற்ற இடதுசாரி மாணவர் அமைப்புகளின் கொள்கையை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இந்த விடுதி கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கின்றனர்.
ஜே.என்.யுவிற்கு நிதி நெருக்கடி உள்ளதா ?
முப்பது ஆண்டாக ஜேஎன்யுவின் கல்வி கட்டணம் உயர்த்தப்படவில்லை, எனவே தற்போதைய இந்த கட்டண உயர்வை மாணவர்கள் ஏற்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் குறிப்பிடத்தக்க பிரச்சனை என்னவென்றால், பெரும்பாலான இந்திய பல்கலைக்கழகங்கள் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. பல்கலைக்கழகத்தின் மொத்த செலவில், 2-3% மட்டுமே மாணவர்களின் கட்டணத்தில் வசூலிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக 2017 - 2018 ஜே.என்.யு வெளியிட்ட அறிக்கையின்படி மாணவர்களின் கல்வி கட்டணம் மூலம் 10 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் மொத்த வருவாய் 383கோடி ஆகும். ஆனால் 556 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் மற்ற செலவினங்களை கணக்கில் எடுப்பதன் மூலம், பல்கலைக்கழக நூலக கட்டணம் குறைக்கபட்டது தெரியவருகிறது. ஆனால் 2017-18 ஆண்டிற்கான பாதுகாப்பு செலவினங்கள் மட்டுமே 17.38 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த ஆண்டு செலவு செய்யப்பட்ட 9.52 கோடி ரூபாயைவிட அதிகம்.
ஜே.என்.யு தீர்வு காணுமா ?
பல ஐ.ஐ.டி நிர்வாகங்கள் வருவாய் ஈட்டுவதற்கான புதிய வழிகளை கையாளுகின்றனர். நிறுவனத்தில் படித்து முடித்த பழைய மாணவர்கள் மூலம் நிதி திரட்டுகின்றனர். மும்பை ஐ.ஐ.டி 1993ம் ஆண்டு படித்து முடித்த மாணவர்கள் மூலம் 25 கோடி நிதி திரட்டியது. இதே போல சென்னை ஐ.ஐ.டி , 220 கோடி ரூபாய் நிதி திரட்டியது.
மேலும் பழைய மாணவர்களுடனான உறவை மேம்படுத்த, பிற மாநிலங்களில் அலுவலகங்களை நிர்வகித்து வருகின்றனர்.
இவ்வாறு போதிய ஆராய்ச்சி மற்றும் ஆலோசனையுடன் ஜே.என்.யு மற்றும் பிற நிறுவனங்களும் செயல்பட முடியும்.
பல்கலைக்கழக வருவாய்க்கும் , செலவினத்திற்கும் உள்ள இடைவெளியை போக்க இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும் இந்த இடைவெளியை போக்க மாணவர்களின் விடுதி மற்றும் கல்வி கட்டண உயர்வுமட்டும்தான் ஒரே தீர்வா என்ற கேள்வியும் எழுகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்