You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிதம்பரம் கோயிலில் பெண்ணைத் தாக்கிய தீட்சிதர் இடைநீக்கம்
கடந்த சனிக்கிழமையன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் சரியாக அர்ச்சனை செய்யும்படி கூறிய பெண் ஒருவரைத் தாக்கிய தீட்சிதர் இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கோயிலைச் சேர்ந்த தீட்சிதர்கள் தெரிவிக்கின்றனர்.
சிதம்பரம் நகரின் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் லதா என்பவர் கடந்த சனிக்கிழமையன்று தன்னுடைய மகன் ராஜேஷின் பிறந்த நாளை ஒட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்யச் சென்றார். அந்தக் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சந்நிதிக்குச் சென்ற அவர், அங்கிருந்த தீட்சிதர் தர்ஷன் என்பவரிடம் அர்ச்சனைக்கான பொருட்களைக் கொடுத்திருக்கிறார்.
லதா, தன் மகனுடைய பெயர், நட்சத்திரம் ஆகிய விவரங்களைத் தெரிவிப்பதற்குள் அர்ச்சனையை முடித்துவிட்டதாக, பொருட்களைத் திரும்பத் தந்திருக்கிறார் தர்ஷன்.
இதனால், எந்த விவரத்தையும் கேட்காமல், மந்திரங்களை ஒழுங்காகச் சொல்லாமல் இப்படி அர்ச்சனை செய்து தருகிறீர்களே என்று அவர் கேட்டபோது எழுந்த வாக்குவாதத்தின் முடிவில், தர்ஷன் தகாத வார்த்தைகளால் அந்தப் பெண்ணைத் திட்டி கன்னத்தில் அறைந்து, பிடித்துத் தள்ளிவிட்டதாகச் சொல்லப்பட்டது.
இதற்குப் பிறகு கோயிலில் இருந்த பக்தர்கள் ஒன்று திரண்டு, தர்ஷனிடம் இது குறித்து கேள்வியெழுப்பினர். இது தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.
இந்த சம்பவம் குறித்து லதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண்களைத் துன்புறுத்துதல், அவதூறாகப் பேசுதல், தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தர்ஷன் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தர்ஷன் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.
இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்றே கூடிய தீட்சிதர்களின் பொதுசபை, இது குறித்து விசாரித்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து பிபிசியிடம் பேசிய வெங்கடேச தீட்சிதர், "தர்ஷனை இரண்டு மாதங்கள் கோவில் பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்வதோடு, ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் முடிவெடுத்திருக்கிறோம்" என்றார்.
பிறகு, மீண்டும் அவர் கோயில் பணிகளைச் செய்வாரா என்று கேட்டபோது, "ஆமாம். இதுவே அதிகபட்ச தண்டனை" என்றார். காவல்துறை நடவடிக்கைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தார்.
இது குறித்து விசாரித்துவரும் சிதம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசனிடம் கேட்டபோது, "அவர் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார். நான் இப்போது அவரைத்தேடியே சென்னை வந்திருக்கிறேன். ஒரு அணி மயிலாடுதுறை சென்றிருக்கிறது. அவரைத் தொடர்ந்து தேடிவருகிறோம்" என்று மட்டும் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- இலங்கையில் அதிபர், பிரதமர் எதிரெதிர் துருவம்: அரசியல் சாசன சிக்கல் எழுமா?
- பெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்
- கோட்டாபய மீண்டும் வெல்ல களத்தில் செய்தவை என்ன? அது இனவாதத்தின் வெற்றியா?
- உயிருக்கு போராடிய காகத்தை காப்பாற்றிய ரிக்ஷா ஓட்டுநர்- நெருங்கிய நண்பர்களானது எப்படி?
- 'ஸ்டெம்செல்' தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் #iamthechange
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்