You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுஜித் மரணம்: ‘என்னால் எதுவுமே செய்யமுடியலையே’ - ஹர்பஜன் சிங் உருக்கம்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் உயிரிழந்தது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சுஜித்தின் மரணம் மீள முடியா துயரம் என்று கூறியுள்ளார்.
'என்னால எதும் செய்ய முடியல அப்பிடின்னு நெனச்சு அழுக வருது.போனது ஒரு உயிர் மட்டுமில்ல நம்ம ஒட்டுமொத்தப் பேரோட தன்னம்பிக்கை. இனியொரு உயிர் இந்த மாதிரி போகக் கூடாது.அவங்க அம்மா அப்பாக்கு யார் ஆறுதல் சொல்லுவாங்க.என் மனதில் என்றும் நீ நிற்பாய் மகனே' என்று தனது ட்விட்டர் பதிவில் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் உயிரிழந்தது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிறுவன் கிணற்றில் விழுந்துவிட்ட தகவல் அறிந்தவுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களுக்கு தான் உத்தரவிட்டதாகவும், தனது உத்தரவின் பேரில் அனைத்து அமைச்சர்களும் இரவு பகலாக மீட்புப் பணிகளை மேற்கொண்டதாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆழ்துளை கிணறு அமைக்கும்போது, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விதிகளை வகுத்து, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இதில் கவனக்குறைவு ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்றும் முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இனி வருங்காலங்களில் இது போன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க பொது மக்களும் தங்களுடைய நிலங்களில் ஆழ்துளை கிணற்றை மூடும்போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
சுஜித் உயிரிழந்தது தொடர்பாக ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குழந்தையின் பெற்றோருக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
"85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சு சத்தம்தான் மீட்புப் பணியில் தந்தை ஸ்தானத்தில் என்னை இயங்க வைத்தது. நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
"நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து விட்டு போய்விட்டான். சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது?அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்!" என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
"சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜித்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.
எப்படியாவது நலமுடன் வந்துவிடுவான் என்று அனைவரும் எதிர்பார்த்த குழந்தை சுஜித் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது மனதை உலுக்குகிறது. குழந்தையை இழந்திருக்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூற வார்த்தைகளால் முடியாது என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.
சிறுவன் சுஜித் மீட்கப்பட போவது இப்படிதான்...!
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்