You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுஜித் வில்சன்: "நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் இந்த விஞ்ஞானம் எதற்காக?" - ஹர்பஜன் சிங் கேள்வி
நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்?நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு? என ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நவீன கேமரா பொருத்திய கருவியை பயன்படுத்தி மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ள மற்றொரு ட்வீட்டில், "நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு, நிச்சயம் வருவ நீ. தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான #தீபாவளி.எழுந்து வா தங்கமே." என்றும் ட்வீட் செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பகிர்ந்துள்ள ஒரு ட்வீட்டில், "ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது.
ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும்.
ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அண்ணா தொழில்நுட்ப குழுவினர் ரோபோடிக் கேமரா மூலம் ஆய்வு செய்து குழந்தையின் உடலில் இருக்கும் வெப்பநிலையை உணர்ந்துள்ளனர். எனவே குழந்தை உயிருடன் இருக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.
ஆனால் நேற்று (சனிக்கிழமை) மாலைக்கு பிறகு குழந்தையின் குரல், உடல் அசைவு எதுவும் இல்லை. இருப்பினும் குழந்தை சுயநினைவை இழந்திருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளனர். நல்லதை நினைப்போம். " என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்