You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்: மீட்புப் பணிகளின் நிலவரம் என்ன?
மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் மத்திய - மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை, சுமார் 68 அடி ஆழத்திற்கு இறங்கிவிட்டதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவடடம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி. இவர்களுக்கு சுஜித் வில்சன் என்ற இரண்டு வயது மகன் இருக்கிறார்.
கட்டடத் தொழிலாளராக வேலை பார்த்துவரும் பிரிட்டோ, தனது வீட்டின் அருகில் உள்ள தனது வயல்காட்டில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பாக ஆள்துளை கிணறு ஒன்றைத் தோண்டியுள்ளார். ஆனால், அந்தக் கிணற்றில் தண்ணீர் வராததால், அதனை இப்போது பயன்படுத்துவதில்லை. அந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தற்போது விவசாயம் பார்த்துவருகிறார் பிரிட்டோ.
இந்தக் ஆழ்துளைக் குழாய் கைவிடப்பட்டிருந்த நிலையில், மண் விழுந்து மூடியிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அந்த மண் உள்வாங்கியது. இந்த நிலையில், வயல்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வெள்ளிக்கிழமையன்று மாலை ஐந்தரை மணியளவில் எதிர்பாராத விதமாக அந்தக் குழாய்க்குள் விழுந்தான்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் துவங்கின. குழந்தைக்கு மூச்சுத் திணறாமல் இருப்பதற்காக குழாய் மூலம் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. இம்மாதிரி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவரும் சேலம், மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களைச் சேர்ந்த மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
பிறகு கயிறு மூலம் சுருக்கைப் போல மாட்டி, குழந்தையை மேலே இழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், குழந்தையின் கைகள் சரியாகச் சிக்கவில்லை. இதனிடையே மண் மேலும் சரிந்ததால், 28 அடியில் இருந்த குழந்தை இன்னும் ஆழத்துக்கு சென்றது. தற்போது குழந்தை கிட்டத்தட்ட 65 அடி முதல் 70 அடி ஆழத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே பொக்லைன் எந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சிகள் துவங்கின. ஆனால் சுமார் 12 அடி ஆழத்திலேயே பாறை குறுக்கிட்டது.
பாறையை உடைக்கும் முயற்சியில் பெரும் சத்தம் ஏற்பட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. குழந்தை பயந்துவிடாமல் இருப்பதற்காக அவரது பெற்றோரும், உறவினர்களும் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் இருந்தவாறு பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.
காலை ஐந்து முப்பது மணிவரை குழந்தையிடமிருந்து அழுகுரலோ, முனகல் சத்தமோ கேட்டுவந்த நிலையில், தற்போது குழந்தை ஆழத்திற்கு சென்றுவிட்டதால் சத்தம் ஏதும் இல்லை. தற்போது குழந்தை 4 அங்குல அகலமுள்ள குழியில் சிக்கி உள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
குழந்தை மீட்கப்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு அருகிலேயே ஆம்புலன்ஸ் வாகனமும் மருத்துவர்களும் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், குழந்தையை மீட்கும் முயற்சிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் அங்கு வந்துள்ளனர். மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஏற்கனவே அங்கு முகாமிட்டுள்ளனர்.
அவ்வப்போது பெய்துவரும் மழையும் மீட்ப்புப் பணிகளில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
"குழந்தையை மீட்பதற்காக 7-க்கும் மேற்பட்ட குழுவினர், எல்லோருமே அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் - தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால், அதில் வெற்றி இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சி நடந்துவருகிறது" என அப்பகுதியில் முகாமிட்டுள்ள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்