You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அசுரன் படத்துக்கு பாராட்டு: பஞ்சமி நிலம் குறித்து ஸ்டாலின், ராமதாஸ் விவாதம்
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்படவில்லையென தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்திருக்கிறார்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இந்த விளக்கத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தை சமீபத்தில் திரையரங்கு ஒன்றில் கட்சியினருடன் பார்த்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அந்தப் படத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
"அசுரன் படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!" என்று அந்த ட்விட்டர் செய்தியில் கூறியிருந்தார்.
இதை முன்வைத்துக் கருத்துத் தெரிவித்திருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், "பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பதிவுசெய்யப்பட்டுள்ள ஆவணத்தை மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
"மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது "முரசொலி " இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை" என்றும் "நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?" என்று மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்