You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“தினகரன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்”: அமமுக புகழேந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமமுகவை சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கோவையில் அமமுக தொண்டர்களுடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு நிர்வாகிகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, தினகரனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்றும் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இனி தினகரனால் அரசியலில் நிலைக்க முடியாது. இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை எனில் யாரிடம் அவர் விலைபோனார்? வேலூர், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி தேர்தலில் போட்டியிடாதது அமமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அமமுகவின் சகாப்தம் முடிந்துவிடும். எந்த கட்சி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லையோ, அந்த கட்சிக்கு எதிர்காலம் இல்லை,'' என்று தெரிவித்தார்.
''இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கப்போவதாகப் பேசிய தினகரனால் எந்த வெற்றியும் பெற முடியவில்லை. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்வு காணாத தினகரன், அவர் வகிக்கும் எம்எல்ஏ பதவியை உடனே ராஜிநாமா செய்யவேண்டும். இவர்களின் மனஉளைச்சல் மற்றும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றிக்கடன் செய்யவேண்டும் என எண்ணினால் உடனடியாக ஆர்கே நகர் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யவேண்டும்,'' என்றார்.
ஒரு வாரகாலத்தில் அல்லது பத்து நாட்களில் முக்கியமான முடிவு ஒன்றை எடுக்கவுள்ளதாகப் பேசிய அவர், ''பல பிரச்சனைகளைச் சந்தித்து, பதவியை இழந்து நிற்கிறோம். எங்களுக்கு எந்த பின்னணியும் இல்லை. யாரும் எங்களை இயக்கவில்லை. புதிய கட்சியைத் தொடங்கியதால்தான் டிடிவி தினகரன் வீழ்ச்சியைச் சந்தித்தார். கட்சியை, பதவியை மீட்டெடுக்காததால், அவர் வீழ்ச்சியைச் சந்தித்தார், ''என்றார்.
விரைவில் அமமுகவிலிருந்து வெளியேறிவிடுவார் எனப் பேசப்படும் சூழலில், செய்தியாளர் சந்திப்பில், ''ஆட்சியில் உள்ளதால், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் செய்யும் நல்ல காரியங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, அதே நேரம் விமர்சனமும் செய்கிறோம். இதனால் யார் பின்னணியிலும் நான் இல்லை. இதுவரை தேனாம்பேட்டை(திமுக தலைமை அலுவலகம்) அல்லது ராயப்பேட்டை(அதிமுக தலைமை அலுவலகம்) செல்ல நாங்கள் முடிவு செய்யவில்லை. யாரிடமும் இருந்து அழைப்பு வரவில்லை,''என்றார் புகழேந்தி.
சமீபத்தில் புகழேந்தி தினகரனை விமர்சித்துப் பேசியது போன்ற ஆடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியது. ஆனால் அந்த ஆடியோவில் பேசிய விவரங்கள் பலவும் எடிட்டிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது எனப் புகழேந்தி முன்னர் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்