அமித் ஷா விளக்கம் : இந்தியை திணிக்க வேண்டும் என்று கூறினேனா?

மாநில மொழிகளை ஒதுக்கிவிட்டு அந்த இடத்தில் இந்தியை திணிக்க வேண்டும் என்று தான்கூறவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

''பிராந்திய மற்றும் மாநில மொழிகளை ஒதுக்கிவிட்டு இந்தியை இந்த இடத்தில் திணிக்கவேண்டும் என்று நான் கேட்கவில்லை. தங்களின் தாய்மொழிக்கு அடுத்து இரண்டாவது மொழியாக மக்கள் இந்தி கற்கலாம் என்றுதான் நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன்'' என்று அமித் ஷா அந்த பதிவில் விளக்கம் அளித்திருந்தார்.

''இந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலமான குஜராத்தில் இருந்துதான் நானே வருகிறேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சிலர் எனது முந்தைய பதிவை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அது அவர்களின் தேர்வு'' என்று அமித் ஷா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்தி திவஸ் தினமான செப்டம்பர் 14-ஆம் தேதியன்று தனது ட்விட்டரில் பக்கத்தில் அமித் ஷா தெரிவித்த கருத்து கடும் விமர்சனங்களையும், விவாதங்களையும் எழுப்பியது.

"இந்தியா பல மொழிகளை கொண்ட ஒரு நாடு. ஒவ்வொரு மொழியும் தனித்துவம் வாய்ந்தது. ஆனால் அதே சமயம் உலகளவில் நமது நாட்டின் அடையாளமாக ஒரே மொழி இருத்தல் வேண்டும். தற்போதைய சூழலில் ஒரு மொழி நம்மை இணைக்குமானால் அது இந்தி மொழியாகதான் இருக்கும். ஏனென்றால் அதுதான் அதிகளவில் பேசப்படுகிறது" என அமித் ஷா தெரிவித்திருந்தார்.

இந்தியாவை இணைக்கும் மொழி இந்தியாகதான் இருக்கும் என அமித் ஷா டிவிட்டரில் பகிர்ந்ததால் #StopHindiImposition என்னும் ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.

குறிப்பாக பலதென் மாநில மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அமித் ஷாவின் ட்விட்டர் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதற்கு விளக்கம் கூறுவதுபோல இன்று (புதன்கிழமை) இந்த பதிவை அமித் ஷா வெளியிட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :