"பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இனி பிரியாணி சாப்பிடக் கூடாது?" - தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் உத்தரவு

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "இனி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி சாப்பிடக் கூடாது?"

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உடல்தகுதியில் கட்டுக்கோப்புடன் இருக்க பிரியாணி, இனிப்பு, பர்கர் உள்ளிட்டவற்றை சாப்பிடக்கூடாது என்று அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் உத்தரவிட்டுள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு புதிய பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய அணி வீரர்கள் மற்றும் உள்ளூர் முதல் தர போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு பழக்க முறையில் மாற்றம் கொண்டு வர அவர் பரிந்துரை செய்துள்ளார். அதாவது வீரர்கள் மத்தியில் புதிய உடல் தகுதி கலாசாரத்தை கொண்டு வரும் நடவடிக்கையில் அவர் இறங்கி உள்ளார்.

இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் வீரர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்தமான பிரியாணி, எண்ணையில் பொறிக்கப்பட்ட இறைச்சி, பர்கர், பீட்சா, இனிப்பு ஆகியவற்றை சாப்பிட தடை விதித்துள்ளார்.

அதே சமயம் நெருப்பில் சுட்டு சாப்பிடும் அசைவ உணவுகள், பாஸ்தா மற்றும் நிறைய பழங்களை தங்கள் உணவு முறையில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். இந்த உணவு பழக்க முறை உள்ளூர் முதல்தர போட்டி வீரர்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு வீரரும் தங்கள் உடல் தகுதி மற்றும் உணவு திட்டம் குறித்து தினசரி குறிப்பு புத்தகத்தை பின்பற்ற வேண்டும். இதனை சரியாக பின்பற்றாத வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்." - இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

தினமணி: கோவளத்தில் பிரதமர் மோதி-சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்புக்கான ஏற்பாடுகள்

சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள பிரம்மாண்ட நட்சத்திர விடுதியில் பிரதமர் நரேந்திர மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று நாள்கள் அங்கு தங்கியிருக்கும் அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களுக்கு நடுவே அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோதி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27, 28 தேதிகளில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அங்குள்ள வூஹான் நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் மற்றும் உலக முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் பேசப்பட்டன. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோதி அழைப்பு விடுத்தார். அவரும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி ஷி ஜின்பிங், வரும் அக்டோபர் 11 முதல் 13-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, தலைநகர் தில்லிக்கு வெளியே உள்ள நகரத்தில் சந்தித்துப் பேச பிரதமர் மோதி விரும்புவதாகத் தெரிகிறது. அந்த வகையில், ஷி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையை எந்த இடத்தில் நடத்தலாம் என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதில் சென்னையை அடுத்த மாமல்லபுரமும் இடம் பெற்றுள்ளது.

யுனெஸ்கோ அமைப்பால் மாமல்லபுரம் அங்கீகரிக்கப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புமிக்க இடத்தில் பிரதமர் மோதி - சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோதி, சீன அதிபர் ஷி ஜின்பிங் பேச்சுவார்த்தை, அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறும். 11-ஆம் தேதி இரவில் அவர்கள் மாமல்லபுரம் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

- இவ்வாறாக தினமணி நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

இந்து தமிழ்: "பாஜக ஆதரவாளராக முத்திரை குத்துகின்றனர்" - ரஜினிகாந்த் வேதனை

மோதிக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்ததால், பாஜக ஆதரவாளராக என் மீது முத்திரை குத்துகின்றனர் என்று மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு தனது அரசியல் வருகையை உறுதி செய்த ரஜினிகாந்த், இதைத்தொடர்ந்து தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார்.

ஆனால், அதன் பின் இதுவரை கட்சி ஆரம்பிப்பது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை. மக்களவை தேர்தல் வந்த போது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பார் என்று எதிர்ப்பாக்கப்பட்டது. ஆனால் தனது இலக்கு சட்டப்பேரவை தேர்தல்தான் என்று அறிவித்ததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், மறைமுகமாகத் தனது அரசியல் ஆலோசகர்களுடன் இணைந்து புதிய கட்சிக்கான வியூகங்களை வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், பிரதமர் மோதிக்கு ஆதரவான கருத்து களை ரஜினிகாந்த் தெரிவித்ததால், அவரை பாஜக ஆதரவாளர் என்று சிலர் விமர்சிக்கத் தொடங்கினர். சிறுபான்மையினர் மத்தியில் அவருக்கான ஆதரவைக் குறைக்கும் வகையில் அந்த விமர்சனங்கள் அமைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 'தர்பார்' திரைப்பட பணிகளை முடித்து விட்டு, சென்னை போயஸ் தோட்ட வீட்டில் ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த், கடந்த சில தினங்களாக மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த நண்பர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ரஜினி அரசியலுக்கு வருவதை மக்கள் ஆதரிக்கிறார்களா? எதிர்க்கிறார்களா?

சாகும் வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன் - 80 வயது கமலாத்தாள்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு'

கோவை இரட்டைக் குழந்தைகள் கொலை வழக்கின் குற்றவாளி மனோகரனுக்கு செப்டம்பர் 20 வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனைக்கு, அக்டோபர் 16-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

"தூக்குத் தண்டனை பெற்ற மனோகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், சஞ்சீவ் கன்னா, சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞர் யோகேஷ் கன்னா ஆஜரானார். குற்றவாளி மனோகரன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ரேவதி ராகவன், மனோகரனுக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை செப்டம்பர் 20-ஆம் தேதி நிறைவேற்றப்படவுள்ளது. இந்த வழக்கு தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாலும், வழக்கில் வாதாடுவதற்கு மூத்த வழக்குரைஞர் வர முடியாததாலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 2-ஆவது வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும். இந்த வழக்கு நடைபெற்ற காலம் முழுவதும் மனோகரன் சிறையில் இருந்துள்ளார். அவரது தரப்பில் ஏழு வழக்குரைஞர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை மனோகரன் தரப்பில் உரிய வகையில் வாதங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும், வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்தபோது மனோகரனுக்கு உரிய சட்ட உதவி அளிக்கப்படவில்லை. இதனால், அந்த ஆவணங்களை ஆராய வேண்டியுள்ளது என்றார்.

அதற்கு நீதிபதிகள், இந்த விவகாரம் தூக்குத் தண்டனை தொடர்புடையாக இருப்பதால், வழக்குரைஞர் வாதிடுவதற்கு கடைசி வாய்ப்பாக அக்டோபர் 16-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு விசாரணை நடைபெறும். அதுவரை தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது," என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :