You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்திரயான் 2: 'இஸ்ரோ விஞ்ஞானிகளை எண்ணி இந்தியா பெருமை கொள்கிறது' - நரேந்திர மோதி
சந்திராயன் 2 விண்கலத்தின் லேண்டர் உடனான தகவல் தொடர்பு இழக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியர்கள் ஒவ்வொருவரும் இஸ்ரோ விஞ்ஞானிகள் உடன் இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
எதிர்பார்த்த வேகத்தைவிட விக்ரம் லேண்டர் வேகமாகச் சென்று நிலவின் மேற்பரப்பை தொட்டது என்று மோதி தமது உரையில் குறிப்பிட்டார்.
நிலவின் மேற்பரப்புக்கு மேல் 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபோது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்று மட்டுமே இஸ்ரோ தெரிவித்திருந்த நிலையில், விக்ரம் நிலவின் மேற்பரப்பைத் தொட்டது என்று நரேந்திர மோதி கூறியுள்ளார்.
ஒருவேளை விக்ரம் நிலவின் மேற்பரப்பின் மீது விழுந்து விட்டது என்று தகவல் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டியருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இன்று, சனிக்கிழமை காலை, பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் இடையே உரையாற்றிய மோதி இதைத் தெரிவித்தார்.
நரேந்திர மோதி உரையாற்றிவிட்டு கிளம்பும்போது, கண்கலங்கிய நிலையில் இருந்த இஸ்ரோ தலைவர் சிவனை ஆரத் தழுவு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் இடையே உரையாற்றிய மோதி, கடந்த சில மணிநேரங்கள் இந்திய தேசமே, விஞ்ஞானிகளுக்கு ஆதரவாக கண் விழித்து இருந்ததாக கூறினார்.
சந்திரயான் 2 திட்டம் இந்தியாவின் லட்சியத் திட்டம்; அதன் இலக்குக்கு மிகவும் நெருக்கமாகச் சென்றோம். எனினும், எதிர்காலங்களில் அடைவதற்கு நிறைய உள்ளது என்று கூறினார்.
இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இந்தியாவில் மட்டுமல்லாது பிற நாட்டு மக்களின் கல்வி, சுகாதாரம் ஆகியவை மேம்பட வழிவகுத்துள்ளது என்று கூறிய மோதி, இதற்கு மறைமுகமாக ஆதரவளித்த அந்த விஞ்ஞானிகளின் குடும்பத்தினருக்கு தலை வணங்குவதாக கூறினார்.
இனிமேலும் நிறைய வாய்ப்புகள் வரும் என்றும், நாம் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
"நமது கடந்த பல்லாயிரம் ஆண்டு கால வரலாற்றில் பல பின்னடைவுகளை சந்தித்துள்ளோம். எனினும் நாம் துவண்டுவிடவில்லை," என்று தமது உரையில் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
இன்றைய அனுபவர்களில் இருந்து கற்றுக்கொள்வது நம்மை மேலும் வலிமையாக்கும்; புதிய விடியலுடன் ஒளிமயமான நாளை விரைவில் வரும் என்று மோதி கூறினார்.
நிலவை நோக்கிய சந்திரயான் 2 விண்கலத்தின் பயணம் மிகவும் அற்புதமானது என்றும் விண்வெளி ஆய்வில் இந்தியா தனது பெயரை நிலைநாட்டியுள்ளது.
வருத்தம் கொள்ளவோ, பின்னோக்கிப் பார்க்கவோ தேவையில்லை என்று விஞ்ஞானிகளிடம் மோதி தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்