கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 இடங்களில் சோதனை

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கோவை உக்கடம், கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் 5 பேர் வீடுகளில் தேசிய புலானய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை 5 மணியிலிருந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் சமூக வலைத்தளத்தில் தொடர்புடையவர்கள் என்று கூறி ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் முகமது உசேன், ஷாஜகான், ஷேக் அப்துல்லா உள்ளிட்டவர்களின் இல்லங்களில் சோதனை செய்த அதிகாரிகள் அவர்களை கோவை பந்தைய சாலையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர்.

குறிப்பாக கடந்த வாரம் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கை வழியாக கோவைக்கு வந்திருப்பதாக கூறி கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கோட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மட்டும் 3 மணி நேரம் சோதனை மற்றும் விசாரணை நடந்துள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற சோதனை முடிவில் 5 பேர் வீடுகளில் இருத்து 7 அரபு மொழி புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக உள்ளூர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 5 பேரையும் நாளை கொச்சி தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: