You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அருண் ஜெட்லி மரணம்: "என் மதிப்பிற்குரிய நண்பரை இழந்துவிட்டேன்" - பிரதமர் மோதி
என் மதிப்பிற்குரிய நண்பரை இழந்துவிட்டேன் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். அவரை பல ஆண்டுகளாக தெரியும். எனக்கும் அவருக்கும் உடைக்க முடியாத உறவு இருந்தது. அவசரநிலை காலத்தில் நம் ஜனநாயகத்தை காக்க போராடிய மாணவர் தலைவராக இருந்தார். பின்னர் கட்சியின் முகமாக ஆகினார் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஜெட்லிக்கு பெரும் பங்களிப்பு இருப்பதாகவும், அரசியலமைப்பு குறித்து மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருப்பார் என்றும் மோதி ட்வீட் செய்துள்ளார்.
மத்திய நிதித்துறை மற்றும் பல்வேறு முக்கிய துறைகளில் அமைச்சராகவும், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய அருண் ஜெட்லி காலமானது வருத்தமளிப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தனது கருத்துகளை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர். கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடன் அன்பாக பழகக் கூடியவர் என்றும் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
"எங்களின் குருவாக இருந்தவர். அனைவருக்கும் உதவி செய்வார். அவரது அறிவுநுட்பத்திற்கு யாரும் ஈடில்லை," என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தை சரியாக வழிநடத்தியதற்காக அவர் என்றும் நினைவில் இருப்பார் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
அருண் ஜெட்லியின் மரணம் இந்நாட்டிற்கான பெரிய இழப்பு என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.
ஜெட்லி மரணமடைந்ததால் தாம் மிகவும் வருத்தம் அடைந்துள்ளதாகவும், இது தமக்கு தனிப்பட்ட வகையில் இழப்பு என்றும் பாஜக தலைவரும் இந்தியாவின் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்