You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போட்டோகிரபியில் புது முயற்சி: சூரிய வெளிச்சமே கலர் லேப், இலையில் பிரிண்டிங்
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
டிஜிட்டல் போட்டோகிரபி நவீனத்தின் உச்சம் தொட்டுக்கொண்டிருக்கிறது. நாளொரு தொழில்நுட்பம், பொழுதொரு புதிய கருவி என வேகமெடுத்துப் பறக்கும் இந்தத் தொழிலில் கலைக்கான நிதானமும், வெள்ளந்தியான அழகியலும் கொஞ்சம் குரல் ஒடுங்கித்தான் போகின்றன.
இந்த நிலையில், நின்று நிதானித்து, டிஜிட்டல் கேமிராவில் எடுக்கும் புகைப்படங்களை, ஒரு மிகப்பழைய எளிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கருவிகள் ஏதுமில்லாமல், வெறும் கையால் அஞ்சலட்டை உள்ளிட்டவற்றில் பிரிண்ட் போடும் முறையை பரவலாக்கிவருகிறார் வினோத் பாலுச்சாமி என்ற புகைப்படக் கலைஞர்.
சைனோடைப் பிரிண்டிங் எனப்படும் இந்த முறை மிகப் பழைய முறை என்று கூறும் வினோத் இதற்கு எந்தக் கருவியும் தேவையில்லை. ஓரிரண்டு ரசாயனங்கள் இருந்தால் வெறுங்கையிலேயே பிரிண்ட் போட முடியும் என்கிறார்.
ரசாயனம்கூட ஏதுமில்லாமல் இல்லாமல் இலையில் பிரிண்ட் போடும் முறை இவர் நிகழ்த்தும் இன்னொரு ஆச்சரியம்.
இந்தியா முழுதும் பயணம் செய்தவர். பல மாநிலங்களில் பழங்குடிகளின் வாழ்வை புகைப்படத்தில் பதிவு செய்தவர் வினோத். மதுரை அடுத்த காரியாப்பட்டியை சேர்ந்த இவர் தற்போது வசிப்பது திருவண்ணாமலையில்.
'யா' ஸ்டுடியோ என்ற பெயரில், புகைப்படக் கலையில் புதுமைகளை முயற்சிப்பதோடு, இளைஞர்களுக்கு புகைப்படக் கலையை போதித்தும் வருகிறார்.
இவரது புகைப்பட வகுப்புகள் அதிகாலையில் சூரியோதயத்துக்கு முன்பு தொடங்கிவிடும். காத்திருப்பதும், கவனிப்பதுமே இவரது வகுப்பின் முதல் பாடங்கள்.
பின்ஹோல் கேமரா (தீப்பெட்டி அல்லது மூடிய அறையின் கதவில் மிக நுண்ணிய ஓட்டை போட்டு அதன் மூலம் பிலிம் உதவியோடு படம் பிடிப்பது), முறையில் கேமராவின் அடிப்படைகளை தமது மாணவர்களுக்கு விளக்கும் இவர், அதே எளிமையோடு படங்களை அச்சிட்டுக் காட்டவேண்டும் என்று முனைந்தபோது சைனோடைப் பிரிண்டிங் முறையை கண்டடைந்ததாக கூறுகிறார்.
"பின்ஹோல் கேமராவிலோ, டிஜிட்டல் கேமராவிலோ படம் எடுத்தாலும், அச்சிட்டுப் பார்க்கும்போதுதான் அது முழுமை அடைகிறது. புதிதாகப் புகைப்படம் கற்பவர்களுக்கு அப்படி அச்சிட்டுப் பார்ப்பதில் ஒரு நிறைவு தோன்றுகிறது. அதிலும் தம் கையாலேயே பிரிண்ட் போடும்போது கிடைக்கிற நிறைவு அலாதியானது. அதனால்தான் சைனோடைப் பிரிண்டிங் முறையை கையாள்கிறேன்" என்று பிபிசி தமிழிடம் கூறினார் வினோத்.
சைனோடைப் பிரிண்டிங் என்பது என்ன?
இது எப்படி செயல்படுகிறது என்று கேட்டபோது, "அஞ்சலட்டை, மரம், துணி, சின்ன சிமிழ்கள் என்று பலவிதமான பொருள்களில் இந்த சைனோடைப் முறையில் உங்கள் படங்களை பிரிண்ட் போடலாம். எடுத்துக்காட்டாக, அஞ்சலட்டையில் பிரிண்ட் போடுவது என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் இருட்டறையில் அதில் இரண்டு ரசாயனங்களை கையுறை உதவியோடு பூசவேண்டும்.
முன்னதாக, ஓ.எச்.பி. புரொஜக்டரில் பயன்படுத்தக்கூடிய கண்ணாடி போன்ற தாளில், உங்கள் புகைப்படத்தை பிரிண்ட் போட்டுக்கொள்ளவேண்டும். இப்போது ரசாயனம் பூசிய அஞ்சலட்டை மீது, பிரிண்ட் போட்ட ஓ.எச்.பி. ஷீட்டை ஒட்டிவைத்து வெளியில் எடுத்துவந்து வெயிலில் காட்டவேண்டும். சிறிது நேரத்துக்குப் பிறகு, அந்த அட்டையை ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலந்த நீரில் கழுவி காயவைத்தால் சாம்பல் கலந்த நீல நிறத்தில் உங்கள் புகைப்படம் அஞ்சலட்டையில் அச்சாகியிருக்கும். இது ஓவியத்துக்கும் புகைப்படத்துக்கும் இடைப்பட்ட ஓர் உணர்வைத் தரும்" என்கிறார்.
இளம் புகைப்படக் கலைஞர்களாக உருவெடுத்துவரும் சதீஷ், அருண் போன்ற தம் மாணவர்களும் இந்த முறையில் ஆர்வத்தோடு படங்களை அச்சிடுவதாகக் கூறுகிறார் வினோத்.
நாங்கள் நிறைய அஞ்சலட்டையில் பிரிண்ட் போடுகிறோம். 50 காசு செலவில் புகைப்படங்களை இந்தியா முழுதும் பயணிக்கவைக்க முடியும் என்பதால் இது கிளர்ச்சியூட்டுகிறது.
பின்ஹோல் கேமராவும், சைனோடைப் பிரிண்டும், ஒளியின் பயணம்தான் புகைப்படம் என்ற அடிப்படைக் கருத்தை, தொழில்நுட்பத்தின் மூடுதிரைகள் இல்லாமல், இளைஞர்களின் கண்முன் காட்சியாக நிறுத்திவிடுகிறது என்கிறார் வினோத்.
"அவர்கள் ஒளியின் பயணத்தை, அது நிகழ்த்தும் வித்தையை கண்முன் காண்கிறார்கள். காத்திருப்பதிலும், கவனிப்பதிலும், தமது கையாலேயே முழுவதும் படைப்பதிலும் விவரிக்க இயலாத நிறைவு கிடைக்கிறது. கட்டையில், துணியில்கூட இந்த முறையில் பிரிண்ட் போட முடியும். அட்டையில் பிரிண்ட் போட்டபிறகு, தேனீர் டிக்காஷனில் மீண்டும் நனைத்து காயவைத்தால், பழைய புகைப்படம் போன்ற ஒரு தோற்றம், உணர்வு உங்கள் படத்துக்கு கிடைத்துவிடும்" என்கிறார் வினோத் பாலுச்சாமி.
இலையில் பிரிண்டிங்
ஆனால், வினோத்தும் அவரது குழுவினரும் இலையில் ரசாயனம் ஏதும் இல்லாமலே புகைப்படங்களை அச்சிடுகிறார்கள். ஓ.எச்.பி. ஷீட்டில் அச்சிட்ட புகைப்படங்களை சில தேர்ந்தெடுத்த காட்டு இலைகளின் மீது வைத்து வெயிலில் குறிப்பிட்ட நேரம் வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் புகைப்படம் அச்சாகியிருக்கும் என்கிறார் வினோத்.
பளபளப்புக்குப் பதிலாக மட்கிய உணர்வுடன் (dull finish) படங்களை படைக்கும் சுவையுணர்வு பல புகைப்படக் கலைஞர்களுக்கும் உண்டு. ஆனால், எளிமையாலும், மட்கிய உணர்வின் மித மிஞ்சிய ஈர்ப்பாலும் தனித்தவொரு கலைவடிவமாகவே உருவெடுக்கும் வினோத்தின் சைனோடைப் அச்சுகள் டாம்பீகத்துக்கு எதிரான எளிமையின் கலகமாகி நிற்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்