You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமைச்சர் மணிகண்டன்: தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் - காரணம் என்ன?
தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்த மணிகண்டன், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி பரிந்துரையின் பேரில் அமைச்சர் எம். மணிகண்டன் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அந்தத் துறையை மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூடுதலாகக் கவனிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்து, எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பிறகு, தமிழக அமைச்சர் ஒருவர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றபோது புதிதாக அமைச்சரவையில் கே.ஏ. செங்கோட்டையன் சேர்க்கப்பட்டார். ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து அமைச்சரவையிலிருந்து வெளியேறிய பாண்டியராஜன் வகித்துவந்த பள்ளிக் கல்வித் துறை செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டது.
இதற்குப் பிறகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்ட பிறகு அவர் தனது அமைச்சர் பதவியை இழந்தார். அந்தத் துறை செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டது.
இதற்குப் பிறகு, அமைச்சரவையில் சிலரது துறைகள் மாற்றப்பட்டனவே தவிர, யாரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவில்லை. இந்தப் பின்னணியில்தான் முதல் முறையாக அமைச்சரவையிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டிருக்கிறார்.
மணிகண்டன் நீக்கத்திற்குக் காரணம் என்ன?
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் பதவி அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்பது, தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் வரும் அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைவர் பதவியை உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வழங்கியதில் அமைச்சர் மணிகண்டன் கடும் அதிருப்தி அடைந்தார்.
இந்த நிலையில், புதன்கிழமையன்று பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், "கடந்த வாரம் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுடன் கேபிள் டிவி நிறுவன தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது தனிப்பட்ட முறையில் கேபிள் டிவி வைத்திருக்கும் அனைவரும் தங்களிடம் உள்ள இணைப்புகளை உடனடியாக அரசு கேபிளுக்கு மாற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். முதலில் அவர் தான் நடத்திவரும் அட்சயா கேபிள் விஷனிடம் உள்ள சுமார் 2 லட்சம் இணைப்புகளை அரசு இணைப்புக்கு மாற்ற வேண்டும்" என்றார்.
மேலும், சமீபத்தில் கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படுவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு குறித்து தன்னிடம் முதலமைச்சர் விவாதிக்கவில்லையெனவும் மணிகண்டன் தெரிவித்தார்.
கேபிள் டிவி விவகாரம் குறித்து அமைச்சர் மணிகண்டன் வெளிப்படையாகப் பேசியதே இந்த நீக்கத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், மணிகண்டன் தனது மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுவந்தார். இது அந்த மாவட்டத்தில் இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுவும் இந்த நீக்கத்திற்கு ஒரு சிறிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்