You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மெரினா புரட்சி' படநிகழ்வு: 18 இளைஞர்களை கவுரவிக்காமல் முடிந்த நிகழ்ச்சி
சமூகவலைத்தளங்களில் வைக்கப்பட்ட விமர்சனங்களை அடுத்து, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு 10 லட்சம் மக்களை திரட்டிய 18 இளைஞர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதாக அறிவித்த மெரினா புரட்சி திரைப்பட குழுவினர், யாரையும் கவுரவிக்காமல் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டனர்.
ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு இருந்த தடையை நீக்கக்கோரி 2017ல் நடந்த போராட்டத்தை அடிப்படையாகக்கொண்டு உருவான படம் 'மெரினா புரட்சி'. நாச்சியாள் பிலிம்ஸ் என்ற பெயரில் எம்எஸ் ராஜ்-நாச்சியாள் சுகந்தி தம்பதியினர் உருவாக்கிய படம் குறித்த உரையாடல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு 10 லட்சம் மக்களை திரட்டிய 18 இளைஞர்களுக்கு பாராட்டு விழா என்ற தலைப்பில் நடத்தப்படுவதாக பிறகு அந்த நிகழ்வுக்காக தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ் கூறியது. இந்த அழைப்பிதழ் சமூகவலைத் தளங்களில் பரவியது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தலைமையேற்ற குழுவினர் யாரும் இல்லை என்பதாலும், மக்கள் திரளாக கலந்துகொண்ட போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் என யாரையும் அடையாளப்படுத்தமுடியாது என்று கூறி பலரும் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்தனர்.
யார் அந்த 18 நபர்கள், 18 பேர்கள் மட்டுமே ஒருங்கிணைத்த போராட்டமாக ஜல்லிக்கட்டு போராட்டம் இல்லை என கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால், படவிழாவில் யாரும் கவுரவிக்கப்படவில்லை.
நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு, பிரசாத் லேப் அரங்கத்தில் வைக்கப்பட்ட பதாகைகளில் 18 இளைஞர்கள், 10 லட்சம் மக்கள் என்ற வார்த்தைகள் மறைக்கப்பட்டன. நிகழ்வில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, விடுதலைசிறுத்தைகள் கட்சிதலைவர் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் திரைப்படகுழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒருங்கிணைத்த இளைஞர்கள் என்ற ஒரு குழு இல்லை என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்திற்கு கிடைத்த வெற்றி என்றார் திருமாவளவன்.
போராட்டத்தில் இளைஞர்கள், இளம் பெண்கள் பங்கேற்று, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இருந்த தடையை நீக்கினார்கள் என்பது இளைய சமூகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றார் நல்லகண்ணு. ''போராட்டம் நடந்த 15 நாட்களில் சாதி, மத வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றாக இளைஞர்கள் போராடியது வரவேற்கக்கூடியது. ஜல்லிக்கட்டு தடை, நீட் என தமிழகம் சந்தித்த பல பிரச்சனைகளின் குவிமையாமான போராட்டமாக ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது,'' என்றார் நல்லகண்ணு.
இந்த நிகழ்வில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த இயக்குநர்கள் பார்த்திபன், ராஜு முருகன், எழுத்தாளர்கள் ஜோ டி குரூஸ், பத்திரிகையாளர்கள் ஏகலைவன், பாரதிதம்பி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் வரவில்லை.
நிகழ்வில் பேசிய இயக்குநர் எம்எஸ் ராஜ் கடும் சிக்கல்களுக்கு மத்தியில் மெரினா புரட்சி படத்தை எடுத்ததாகவும், தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக அதிக மனஉளச்சல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
''18 இளைஞர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்தவில்லை. பல லட்சம் மக்கள் ஒன்றுதிரண்டு மக்கள் போராடினார்கள். பல லட்சம் மக்களையும் கொண்டாடவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். 82 நிமிட திரைப்படத்தில் பலரையும் நாங்கள் முன்னிறுத்தியுள்ளோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆவணப்படுத்தும் இந்த படத்தை எடுக்க யாரும் முன்வரவில்லை. என்னிடம் காசு இல்லை. நான் ஏழை என்பது உண்மை. இந்த படத்தை வைத்து நான் பணம் சம்பாதிக்கவுள்ளதாக பலர் முகநூலில் எழுதுகிறார்கள். வணிக ரீதியாக இந்த படத்தை எடுக்கவேண்டும் என நினைத்திருந்தால், நடிகர்களை வைத்து இந்த படத்தை எடுத்திருப்பேன். இந்த படத்தில் பல உண்மைகளை சொல்லியிருப்பதால், நான் பல சிக்கல்களை சந்தித்துள்ளேன். இரண்டு ஆண்டுகளாக நானும், என் மனைவியும் மிகுந்த சிரமங்களை சந்திக்கிறோம்,''என்றார்.
''பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதற்காக இந்த படத்தை எடுக்கவில்லை என்று கூறிய அவர், ''இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வாங்க நெருக்கடிகளை சந்தித்தேன், பீட்டா நிறுவனம் 100கோடி ரூபாயை இழப்பீடாக கேட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்தில் நானும், என் மனைவியும் ஆஜராகவேண்டியுள்ளது. அமெரிக்கா, தென் கொரியா, ஏமன் உள்ளிட்ட 11 நாடுகளில் தமிழர்களை இந்த படத்தை பார்த்துள்ளனர். இந்தியாவில் படத்தை திரையிட யாரும் முன்வரவில்லை,'' என்றார் எம்.எஸ்.ராஜ்.
இந்த நிகழ்விற்கு வந்திருந்த நடிகர் ஆதி பேச முயன்றபோது அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்பட்டாலும், இறுதியில் அவர் பேச அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி முடிவுற்றது என அறிவிக்கப்பட்டதால், படக்குழுவினர் மற்றும் ஆதியின் குழுவினர் இடையில் சலசலப்பு ஏற்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்