மாயமான ‘காஃபி டே’ நிறுவனர் சித்தார்த்தாவின் உடல் கண்டெடுப்பு

இந்தியாவின் மிகப்பெரிய உணவு செயின் நிறுவனங்களில் ஒன்றான கஃபே காஃபி டேயின் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் நேத்ராவதி ஆற்றின் அருகே இன்று (புதன்கிழமை) 7 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது

நேத்ராவதி ஆற்றின் அருகே இருந்த ஒரு பாலத்தின் கீழே இவரது உடலை மங்களூர் மீனவர்கள் கண்டெடுத்தனர்.

''சித்தார்த்தா காணாமல் போன ஆற்றுப்பாலத்துக்கு அருகே அவரது உடலை உள்ளூர் மீனவர்கள் கண்டெடுத்தனர். அவரது உடலை மருத்துவ பரிசோதனைக்காக தற்போது நாங்கள் மருத்துவமனைக்கு எடுத்து செல்கிறோம்'' என்று முன்னாள் மாநில அமைச்சரான யு. டி. காதர் பிபிசியிடம் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு முதல் உள்ளூர் மீனவர்களுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் காதரும் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

''சித்தார்த்தாவின் முகத்தில் சிறிய அளவு ரத்தம் இருந்தது. அதேவேளையில் வெளியே தெரியும்படி எந்த காயமும் உடலில் தற்போது இல்லை. அவரது உடலை மருத்துவர்கள் பரிசோதனை செய்வர்'' என்று காதர்மேலும் தெரிவித்தார்.

திங்கள்கிழமை மாலையன்று மங்களூர் புறநகர் பகுதியில் வி ஜி சித்தார்த்தா தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, நேத்ராவதி ஆற்றுக்கு அருகே ஓரிடத்தில் காரை நிறுத்துமாறு தனது ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.

''காரில் இருந்து இறங்கிய சித்தார்த் ஓட்டுநரிடம் அவர் அங்கிருந்து செல்லலாம் என்றும் தான் சிறிது நேரம் நடந்துவிட்டு வருவதாகவும் கூறினார்'' என்று பிபிசியிடம் பேசிய ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

ஆனால் நேரமாகியும் சித்தார்த் வராததால் அச்சமடைந்த ஓட்டுநர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சித்தார்த்தின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அது அணைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது என போலீசார் மேலும் கூறினர்.

சித்தார்த்தா கடந்த திங்கள்கிழமை மாலை நேத்ராவதி ஆற்றில் குதித்ததாக சில தகவல்கள் தெரிவித்தன.

ஒன்றரை நாட்களாக தேடுதல் பணி நடந்து வந்த நிலையில் தற்போது சித்தார்த்தாவின் உடல் கிடைத்துள்ளது.

இந்தியா முழுவதும் கிட்டதட்ட 1750 கிளைகளுடன் நாட்டின் முன்னணி காஃபி பப்பாக இருந்துவரும் கஃபே காஃபி டேக்கு மலேசியா, நேபாளம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலும் கிளைகள் உள்ளன.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் போட்டியால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் இந்தியாவில் உள்ள பல சிறிய பப்களை இந்நிறுவனம் மூடியது.

கோகோ கோலாவுடன் தனது நிறுவனம் தொடர்பாக சித்தார்த்தா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கடந்த மாதத்தில் சில ஊடகங்கள் கருத்து வெளியிட்ட நிலையில், அதனை யாரும் உறுதி செய்யவில்லை.

முன்னாள் கர்நாடக மாநில முதல்வரான எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா எனபது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :