'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மாற்றங்கள் அரசின் நோக்கங்களுக்கு எதிராக அமையும்'

    • எழுதியவர், அகிலா இளஞ்செழியன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்திய நாடாளுமன்றத்தால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் அந்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்துவிடும் என்றும் அச்சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எனினும், இந்தத் திருத்தங்கள் அச்சட்டத்தை ஒழுங்குபடுத்தும் என்று இந்திய அரசு தெரிவிக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த திங்களன்று (22.07.2019) மக்களவையிலும், வியாழனன்று (25.07.201) மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, மக்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது இதை நாடாளுமன்ற தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இது குறித்த வாக்கெடுப்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என 75 உறுப்பினர்களும், தேர்வுக்குழுவுக்கு அனுப்ப தேவையில்லை என 117 உறுப்பினர்களும் வாக்களித்ததனர்; அதன் அடிப்படையில் இந்த சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மாநிலங்களைவியிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் என்ன?

இந்த சட்ட மசோதாவில் மத்திய தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள், மாநில தகவல் ஆணையர்கள் ஆகியோரின் பதவிக்காலம், ஊதியம் ஆகியவற்றை நியமிப்பதில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

2005ல் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கான ஊதியமும் இதே சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டதிருத்தத்தில் தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்பதை மாற்றி அவர்களின் பதவிக்காலத்தை மத்திய அரசுதான் தீர்மானிக்கும் என்றும், அவர்களின் ஊதியத்தில் மாற்றம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்த மசோதா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வலிமையை நீர்த்து போகச் செய்யும் என எதிர்க்கட்சிகளும், சில செயற்பாட்டாளர்களும் விமர்சிக்கின்றனர்.

அரசியல் சாசன அமைப்பின்படி தன்னாட்சி அதிகாரம் உடைய தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களுக்கு நிகரான அதிகார வலிமையுடையவராக தகவல் ஆணையர்கள் இருந்தனர். இப்போது அந்தப் பதவியின் வலிமையை குறைத்து , தகவல் ஆணையத்தை அரசின் ஆதிக்கத்தில் இருக்கும் ஓர் அமைப்பாக மத்திய அரசு மாற்றியுள்ளது என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.

இந்திய அரசு கூறுவது என்ன?

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், "அரசுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் சுதந்திரத்தை குறைக்கும் எண்ணம் இல்லை. இந்த சட்ட திருத்த மசோதா தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஒழுங்கு படுத்தவதோடு மட்டுமல்லாது வலிமையடையவும் செய்யும் என்று என்று இந்த சட்டத் திருத்தத்தை அறிமுகம் செய்து பேசியபோது நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

"எதிர்க் கட்சிகள் குறிப்பிடுவது போல தகவல் ஆணையர்களை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அரசு மாற்றும் என்றும் சட்ட திருத்த மசோதாவில் எங்கும் குறிப்பிடவில்லை. அரசுக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் உரிய தகவல்களை எளிதாக பெரும் வகையில் மொபைல் செயலி கொண்டுவரப்படவுள்ளது."

"கடந்த ஐந்து வருடங்களில் பல தகவல்கள் பொதுத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் ஆணையருக்கு இணையாக தகவல் ஆணையருக்கு வழங்கப்பட்டு இருந்த அதிகாரம் குறைக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிடுகின்றனர். தகவல் ஆணையம் என்பது (தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் சரத்துகளின்படி அமைக்கப்பட்ட) சட்ட ரீதியாக செயல்படக் கூடிய அமைப்பு, தேர்தல் ஆணையம் என்பது அரசியலமைப்பின் ஓர் அங்கம். இரண்டையும் வேறுபடுத்திதான் பார்க்க வேண்டும்," என்றும் கூறியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தினை வலிமையடையச் செய்யுமா அல்லது நீர்த்து போகச் செய்வதாக அமையுமா என்பது குறித்து செயற்பாட்டாளர் கதிர் மதியோனிடம் பேசியது பிபிசி தமிழ்.

கதிர் மதியோன், தொடர்ந்து தகவல் பெரும் உரிமை சட்டத்தின் வாயிலாக பல தகவல்களை பெற்று நுகர்வோர் நலன் குறித்து செயல்பட்டு வருகிறார். அவர் கூறிய கருத்துகள் பின்வருாறு:

இந்த சட்டத் திருத்தம் , தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவந்ததன் நோக்கத்திற்கே முரணானதாக இருக்கிறது.

இந்த சட்ட திருத்தத்தின்படி நேரடியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் செயல்பாடுகளில் எந்த மாற்றத்தினையும் கொண்டுவரவில்லை, தகவல் ஆணையர்களை பணியமர்த்தும் விதத்தில்தான் மாற்றத்தினை கொண்டு வந்துள்ளனர் எனினும் மறைமுகமாக இது தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எதிரானதாக இருக்கும்.

இந்தச் சட்ட திருத்தத்தின்படி தகவல் ஆணையர்களுக்கு தீர்மானிக்கப்பட்ட நிலையான பதவிக்காலம், ஊதியம் இருக்காது, தகவல் ஆணையர்களின் பதவி, ஊதியம் அனைத்தும் நிலையானது இல்லை என்கிறபோது, அவர்கள் அரசினை எதிர்பார்த்துக் கொண்டே அல்லது அரசின் ஆதிக்கத்திலேயே இருப்பதால் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியாது.

தகவல் ஆணையர்கள்தான் ஒரு குறிப்பிட்ட தகவலை பொதுமக்களுக்கு அளிக்கவேண்டும் என்று உத்தரவிடும் இடத்தில் இருப்பவர், அவரின் பதவிக்காலமே நிலையானது இல்லை, எப்போதும் மாற்றப்படலாம் என்ற நிலை இருக்கும் பொழுது அந்த பதவியின் அதிகாரம் வலிமை குன்றியதாகத்தான் இருக்கும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் தகவல் ஆணையர்கள் நியாயமாகவும், தைரியமாகவும் உத்தரவுகள் பிறப்பிக்க கூடிய வாய்ப்புகள் குறைவு. அதனால்தான் இந்த சட்ட திருத்தங்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையே மாற்றிவிடும் என்ற பயம் எங்களை போன்ற பொதுமக்களுக்கு இருக்கிறது.

நரேந்திர மோதி அரசு, வெளிப்படைத்தன்மையும், ஊழல் ஒழிப்பும்தான் எங்கள் நோக்கம் என்று கூறுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், ஊழலை வெளிக்கொண்டு வர முடிந்துள்ளது. அரசின் வெளிப்படைத்தன்மையை சோதிக்க முடிகிறது. எனவே அரசு குறிப்பிடும் தனது நோக்கங்களுக்கு வலிமை சேர்ப்பதே தகவல் அறியும் உரிமை சட்டம்தான். ஆனால், இந்த சட்ட திருத்தங்கள் அந்த நோக்கங்களுக்கு எதிரானதாகத்தான் அமையும் என்கிறார்.

முன்னரே தகவல் அறியும் உரிமை சட்டத்திலேயே சில குறைபாடுகள் உள்ளன. அதை சரிசெய்தால் உதவியாக இருக்கும் என்று நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.

2005ல் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்படும் பொழுது தகவல்கள் அளிக்கப்படாத அலுவலர்களுக்கு சிறை தண்டனை அளிக்கப்படும் என்றுதான் குறிப்பிட்டு இருந்தது. அதில் சட்டதிருத்தம் செய்துதான் அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதிகாரிகள் இந்த சட்டத்தின் உண்மையையும், நோக்கத்தையும் புரிந்து கொண்டு மக்களுக்கு தகவல் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பிரிவை நீக்குகிறோம் என்று சொல்லி தகவல் அளிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனை என்பதை நீக்கி அந்த சட்டம் நிறை வேற்றப்பட்டது.

ஆனால், எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதால் தகவல் அதிகாரிகள் பெரும்பாலும் அலட்சியமாகத்தான் விண்ணப்பங்களை எதிர்கொள்ளுகின்றனர். பொதுமக்களுக்கு முறையாக தகவல் அளிக்காதவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் மற்றும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும் கூட மிகவும் அரிதாகத்தான் அப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி பொதுமக்கள் வேண்டுகின்ற தகவல் கோரிக்கை விண்ணப்பம் முதலில் பொதுத் தகவல் அதிகாரியிடம் அளிக்கப்பட வேண்டும்.

அவர் தகவல் தராதபட்சத்தில் மேல்முறையீட்டு அலுவலரிடம் தகவல் கேட்டு விண்ணப்பிக்கலாம், அவரிடம் இருந்தும் கிடைக்கப் பெறவில்லையெனில் தகவல் ஆணையத்தில் சென்றுதான் தகவலைப் பெற வேண்டும்.

அப்படி சென்றால் தகவல் கிடைக்க சுமார் இரண்டு வருடம் ஆகின்றது. ஏனெனில், தகவல் ஆணையத்தில் ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து கிடக்கின்றன. இப்பொழுதே நிலைமை இப்படித்தான் இருக்கின்றது. இந்த சூழலில் இந்த சட்ட திருத்தங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தினை வலிமைப்படுத்துவதற்கு மாறாக அதை வலிமை இழக்கச்செய்வதாக அமைந்து விடுமோ என்ற பயம் எங்களுக்கு இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார் கதிர்மதியோன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :