You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை ரூட்டு தலைகளின் உறுதிமொழி: ”இனி பெற்றோருக்கு நல்ல பெயர் வாங்கித்தருவோம்”
சென்னை கல்லூரி மாணவர்களிடையே ரூட்டு தல பிரச்சனையால் அடிக்கடி மோதல்கள் நிகழ்வதால், அடையாளம் காணப்பட்ட ரூட் தலகளிடம் வன்முறையில் ஈடுபடப்போவல்லையென காவல்துறை நன்னடத்தை உறுதிமொழியைப் பெற்றுள்ளது.
ஜூலை 23ஆம் தேதியன்று சென்னை பெரம்பூரிலிருந்து திருவேற்காடு நோக்கிச் சென்ற பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பலர் பயணம் செய்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர் அந்தப் பேருந்தை மறித்து நின்றனர். பேருந்து நின்றவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பட்டாக்கத்திகளுடன் பேருந்தில் ஏறினர்.
அந்தப் பேருந்திற்குள் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை அந்தக் கத்தியால் தாக்க ஆரம்பித்தனர். பல மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். அவர்களையும் துரத்தித் துரத்தி இந்த கும்பல் வெட்டியது.
பேருந்தில் இப்படித் தாக்குதல் நடத்தப்பட்ட காட்சிகள் அங்கிருந்த சிலரால் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் ஒளிபரப்பானது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இதுவரை ஐந்து பேரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், இம்மாதிரி தொடர்ச்சியாக மோதல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கொண்ட பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, புதுக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதல்வர்களுடன் சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் வந்து செல்லும் 17 வழித்தடங்களில் ஆறு வழித்தடங்கள் அடிக்கடி மோதல்கள் நடக்கும் வழித்தடங்களாக அடையாளம் காணப்பட்டன. இந்த வழித்தடங்களிலிலும் பிற வழித்தடங்களிலும் சேர்ந்து மொத்தமாக 90 'ரூட் தல'கள் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த ரூட் தலைகளில் அறுபது பேர், தங்களது பெற்றோருடன் தாங்கள் சம்பந்தப்பட்ட காவல் மாவட்டத்தின் தலைமையகத்திற்கு இன்று வரவழைக்கப்பட்டனர். அங்கே பெற்றோர் முன்னிலையில் அவர்களுக்கு அறிவுரையும் எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டன.
இதற்குப் பிறகு, "எந்த விரும்பத்தகாத செயலும் செய்ய மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். எங்கள் பெற்றோருக்கும் நல்ல பெயரை வாங்கித் தருவோமென்று உறுதியளிக்கிறோம். தவறினால் சட்டப்படியான நடவடிக்கைக்குக் கட்டுப்படுகிறோம் என்று உறுதியளிக்கிறோம்" என்று அவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதனை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110ன் கீழ் எழுத்து மூலமாகவும் அவர்கள் அளித்தனர்.
ஓராண்டுக்கு ஏற்கப்பட்டிருக்கும் இந்த உறுதிமொழிப் பத்திரத்தை மாணவர்கள் மீறும் பட்சத்தில், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் 30 பேரும், மாதவரம் காவல் மாவட்டத்தில் 17 பேரும், புளியந்தோப்பு மாவட்டத்தில் 5 பேரும், அண்ணாநகர் மாவட்டத்தில் 7 பேரும், வண்ணாரப்பேட்டை மாவட்டத்தில் ஒருவரும் இம்மாதிரி உறுதிமொழி ஏற்றனர்.
மீதமுள்ள 30 மாணவர்களும் விரைவில் வரவழைக்கப்பட்டு, அவர்களிடமும் இம்மாதிரி உறுதிமொழி பெறப்படுமென காவல்துறை தெரிவித்திருக்கிறது.
இந்த 'ரூட்டு தல' எனப்படுபவர்கள், அந்த பேருந்து வழித்தடத்தில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கு தலைவர்களைப் போல கருதப்படுகிறார்கள். ஒரு வழித்தடத்தில் 'ரூட்டு தல'யாக இருக்கும் ஒருவர் மற்றொரு வழித்தடத்தில் பயணிக்கும்போதும் ஒரு கல்லூரியின் ரூட்டு தல, இன்னொரு கல்லூரியின் ரூட்டு தல பயணிக்கும் பேருந்தில் பயணிக்கும்போதும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பாரி முனை 'ரூட்டு தல' ஒருவரை பூந்தமல்லி வழித்தடத்தில் செல்லும் மாணவர்கள் சுற்றிவளைத்து, அரை நிர்வாணமாக்கி பாரி முனை வழித்தடத்தை கெட்டவார்த்தையில் திட்டும்படியும் பூந்தமல்லி வழித்தடமே சிறந்தது என 108 முறை எழுதும்படியும் வலியுறுத்தினர். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாக்குதல்கள் நடைபெற்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்