You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆபாச அழைப்பை பதிவு செய்த பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கிய இந்தோனீசியா
தனக்கு மேலிடத்தில் உள்ள ஊழியர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் என்பதை நிரூபிக்க அலைப்பேசி அழைப்பை பதிவு செய்த பெண்ணிற்கு இந்தோனீசிய நாடாளுமன்றம் மன்னிப்பு வழங்கியுள்ளது.
பைக் நுரில் மக்னுன் என்னும் அப்பெண்ணின் முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில், அதிபர் ஜோகோ விடோடோ அந்த பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்.
மூன்று குழந்தைகளுக்கு தாயான அவர், "என்னை போன்று எவரும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
"இந்தோனீசியாவில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் பெண்களுக்கு எந்த அளவு பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன என்பதை இந்த வழக்கின் மூலம் தெரிந்து கொள்ளலாம்" என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், தனது மூத்த அதிகாரியுடனான அலைபேசி உரையாடலை பதிவு செய்து அதை பகிர்ந்ததற்காக அந்த பெண்ணிற்கு அளிக்கப்பட்ட ஆறு மாதகால சிறைத்தண்டனையை, புதிய ஆதாரம் எதுவும் வழங்கப்படவில்லை எனக்கோரி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
விசாரணைக்காக இரண்டு மாதங்கள் மற்றும் மூன்று நாட்கள் போலீஸாரின் பிடியில் இருந்தார் பைக்.
நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "மிகவும் கடினமாக உள்ளது. இதற்கு மேல் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என நினைக்கிறேன். பெண்கள் தைரியமாக பேச வர வேண்டும்" என்றார்.
லம்புக் என்ற தீவில் உள்ள மதாரம் என்னும் இடத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரியும் பைக் நுர், பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து மோசமான அலைபேசி அழைப்புகள் வருவதாக புகார் தெரிவித்திருந்தார்.
அவ்வாறு வந்த அழைப்பு ஒன்றை அவர் பதிவு செய்தார். அதில் தலைமை ஆசிரியர், பாலியல் ரீதியாக மிக மோசமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு அந்த பதிவு பிற ஊழியர்களுக்கு பகிரப்பட்டது. பின் உள்ளூர் கல்வி முகமையிடமும், அது ஒப்படைக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் அது வைரலானது.
அந்த பதிவு பகிரப்பட்ட பிறகு பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அந்த தலைமையாசிரியர், ஆசிரியை பைக் அலைபேசி பதிவை அனைவரிடமும் பகிர்ந்துள்ளார் என போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.
ஆனால், அதனை மறுத்துள்ள ஆசிரியை பைக், தன்னால் அந்த பதிவு பகிரப்படவில்லை என தெரிவித்தார்.
முதலில் உள்ளூர் நீதிமன்றம் ஆசிரியை பைக் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது. ஆனால், அந்த தலைமை ஆசிரியரின் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
உச்சநீதிமன்றம் நவம்பர் மாதம், "ஒழுக்கத்தை மீறியதாக" ஆசிரியை பைக் மீது குற்றம் சுமத்தி, 35,200 அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தது.
ஆனால், ஆசிரியை பைக் தனது வழக்கில் தோல்வியடைந்துவிட்டால், அவருக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து தான் யோசிப்பதாக அதிபர் விடோடோ முன்னதாக தெரிவித்திருந்தார். ஆசிரியை பைக் எந்த ஒரு தவறையும் இழைக்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்