You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பி.எஸ்.எடியூரப்பா: கர்நாடகாவின் 25வது முதல்வராக பதவியேற்பு
கர்நாடகா மாநிலத்தின் 25வது முதலமைச்சராக பி.எஸ் எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பாஜகவின் முக்கிய தலைவர்கள் எடியூரப்பாவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
காங்கிரஸ் கட்சி எடியூரப்பாவின் பதவியேற்பு விழாவை புறக்கணித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ரோஷன் பெய்க் மட்டுமே எடியூரப்பாவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
பதவியேற்பதற்கு சில மணி நேரத்துக்குமுன், தனது பெயரில் சில திருத்தங்களை செய்துள்ளார். BS Yeddyurappa என்பதை BS Yediyurappa என்று மாற்றியுள்ளார்.
முன்னதாக இன்று காலை, கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமைக் கோரினார் எடியூரப்பா.
ஆளுநரை சந்திக்கச் செல்லும் முன் ஊடகங்களிடம் பேசிய அவர் பதவியேற்பு விழாவை இன்றே நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.
கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மாநில அரசு தோல்வியடைந்ததையடுத்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அதன் மூலம் கர்நாடகா அரசியலில் நீண்டநாட்களாக நிலவிய குழப்பம் ஒரு முடிவுக்கு வந்தது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். இதனால் ஆளும் கூட்டணிக்கு நெருக்கடி தொடங்கியது.
பாரதிய ஜனதா கட்சி இதன் பின்னணியில் இருக்கிறது, ஆப்ரேஷன் கமலா என்ற பேரில் அவர்கள் ஆட்சியை கலைக்கும் பணியை முன்னெடுத்துள்ளார்கள் என்று பரவலாக கூறப்பட்டது. ஆனால், பா.ஜ.கவின் மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் இதனை மறுத்திருந்தார். அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியும், வளர்ச்சி திட்டங்களை கிடப்பில் போடுவதும் தங்கள் பதவி விலகலுக்குக் காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஜூலை 22ஆம் தேதி மாலை 7 மணியளவில் கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 பேர் வாக்களித்தனர். அதேவேளையில் அரசுக்கு எதிராக 105 பேர் வாக்களித்தனர்.
நம்பிக்கை வாக்களிப்பில் தோல்வியடைந்ததால் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
தற்போது, நான்காவது முறையாக கர்நாடகவின் முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா.
5 சுவாரஸ்ய தகவல்கள்
- அவருடைய முழுப்பெயர் புக்கநக்கிரி சித்தலிங்கப்பா எடியூரப்பா.
- அரசின் சமூக மேம்பாட்டு துறையில் முதல் நிலை ஊழியராக பணியை தொடங்கிய எடியூரப்பா பின்னர் அந்த வேலையை ராஜிநாமா செய்துவிட்டு சொந்தமாக பிசினஸ் செய்ய ஆரம்பித்தார்.
- 2008 சட்டப்பேரவை தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை பெற்று தென்னிந்தியாவில் பாஜக காலூன்றுவதற்கு எடியூரப்பா முக்கிய காரணமாக இருந்தார்.
- தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி அமைத்த முதல் ஆட்சிக்கு தலைமையேற்றிருந்த எடியூரப்பா, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக ஒருமுறை பதவி விலக நேரிட்டது.
- பாஜக அவரை மீண்டும் முதலமைச்சராக நியமிக்க முன்வராததால் 2012ல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய பிறகு, கர்நாடக ஜனதா கட்சி எனும் புதிய கட்சியை பி.எஸ்.எடியூரப்பா தொடங்கினார். ஆனால், அதை மீண்டும் பாஜகவுடன் இணைத்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்