You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஷீலா தீட்ஷித்: காங்கிரஸ் மூத்த தலைவர், டெல்லியின் 3 முறை முதல்வர் காலமானார்
டெல்லியின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்ஷித் இன்று (சனிக்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 81.
பஞ்சாப் மாநிலத்தில் 1938ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி பிறந்த ஷீலா தீட்ஷித் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 1984ல் உத்தர பிரதேச மாநிலத்தில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வானார்.
1986 முதல் 1989 வரை ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இணை அமைச்சராக செயல்பட்டார்,
1998ம் ஆண்டு டெல்லியின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2013ம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் முதலமைச்சராக செயல்பட்டார்.
2014ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி கேரளா மாநில ஆளுநரான பொறுப்பேற்று கொண்ட ஷீலா தீட்ஷித், அதே ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி அந்த பதவியில் இருந்து விலகினார்.
இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அன்பான ஆளுமையுடைய அவர் டெல்லியின் வளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றியுள்ளார். இவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்வதாக மோதி ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, ஷீலா தீட்ஷித்தின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்கையில், காங்கிரஸ் கட்சியின் அன்பு மகள் என்றும் அவருடன் நெருங்கிய தனிப்பட்ட பிணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று முறை டெல்லியின் முதலமைச்சராக பணியாற்றியுள்ள ஷீலா தீட்ஷித்தின் குடும்பத்தினருக்கும், டெல்லி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஷீலா தீட்ஷித் இறப்பு டெல்லிக்கு பெரிதொரு இழப்பு, அவரது பங்களிப்பு என்றுமே நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
1998 முதல் 2013ம் ஆண்டு வரை டெல்லியின் முதலமைச்சராக இருந்த ஷீலா தீட்ஷித்-ஐ, அவ்வேளையில்தான் தீவிர அரசியலில் குதித்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வென்று, டெல்லியின் முதலமைச்சராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்