You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோயம்புத்தூர்: “ஏனுங்... உலகத்துல நியாயமான மனுஷங்க நீங்கதானுங்” - ஆய்வு சொல்கிறது
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்திய செய்தியாளர்
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வாளர்கள் ஒரு விநோதமான ஆய்வொன்றை நடத்தினார்கள். அதாவது எட்டு இந்திய நகரங்களில் உள்ள வங்கி, திரையரங்கம், உணவகம், காவல் நிலையம், அஞ்சலகம், மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட பொது இடங்களில் 'மணி பர்ஸை' கீழே போட்டு அதை யார் உரியவர்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்று பார்த்தார்கள்.
சில பர்ஸுகளில் 230 ரூபாய் பணம் இருந்திருக்கிறது. சில பர்ஸுகளில் பணம் ஏதும் இல்லை.
என்ன நடந்தது?
மக்கள் நாம் நினைத்து பார்ப்பதைவிட நேர்மையானவர்களாக இருந்திருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆம், பெரும்பாலனவர்கள் அந்த பர்ஸை அங்குள்ள காவலாளிகள் மற்றும் வரவேற்பு பகுதியில் இருக்கும் பிரதிநிதிகளிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.
காவலாளிகள், வரவேற்பாளர்கள் தங்களிடம் வந்து அந்த மணிபர்ஸை உரியவரிடம் தருகிறார்களா என்றும் ஆய்வு நடத்தியவர்கள் சோதித்து பார்த்து இருக்கிறார்கள்.
அகமதாபாத், பெங்களுரூ, கோவை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லியில் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார்கள்.
பணம் உள்ள மணி பர்ஸை 43 சதவீத பேர் எடுத்து உரியவர்களிடம் கொடுத்து இருக்கிறார்கள். பணம் இல்லாத மணி பர்ஸை 22 சதவீதம் பேர்தான் உரியவர்களிடம் கொடுத்து இருக்கிறார்கள்.
இந்த ஆய்வு முடிவானது சைன்ஸ் சஞ்சிகையில் பிரசுரமாகி இருக்கிறது.
இந்த ஆய்வை நடத்திய மிக்கேகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஆலன், "இது நாங்கள் எதிர்பார்க்காதது. மக்கள் நாம் நினைப்பதை விட நியாயமாக இருக்கிறார்கள்" என்கிறார்.
பெங்களூர், கோவை மற்றும் ஹைதராபாத்
தென் இந்தியாவை பொறுத்தவரை அதிகபட்சமாக பெங்களூருவில் 66 சதவீதம் பேர் மணி பர்ஸை திரும்ப அளித்து இருக்கிறார்கள்.குறைந்தபட்சமாக ஹைதராபாத்தில் 28 சதவீதம் பேர் பர்ஸை திரும்ப அளித்து இருக்கிறார்கள்.
பணம் இல்லாத பர்ஸை 58 சதவீத கோயமுத்தூர் மக்கள் திரும்ப அளித்து இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் மோசமாக இருப்பது டெல்லி தான். அதாவது 12 சதவீத மக்கள்தான் பணம் இல்லாத பர்ஸை திரும்ப அளித்து இருக்கிறார்கள்
ஒட்டுமொத்தமாக ஆண்களைவிட பெண்கள்தான் மிக நேர்மையாக இருக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.
சர்வதேச அளவில்
இது இந்தியாவில் மட்டும் நடத்தப்பட்ட ஆய்வு அல்ல.
சர்வதேச அளவில் 40 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
2013- 2016 ஆகிய காலக்கட்டத்தில் 40 நாடுகளில் 35 நகரங்களில் 17 ஆயிரம் பர்ஸை கீழே போட்டு இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார்கள்.
சர்வதேச அளவில் பணம் உள்ள பர்ஸை திரும்ப கொடுப்பதில் டென்மார்க் முதலிடத்தில் இருக்கிறது. அதாவது, 82 சதவீத மக்கள் பர்ஸை திரும்ப அளித்து இருக்கிறார்கள். குறைந்தபட்சமாக பெரு இருக்கிறது 13 சதவீத மக்கள்தான் திரும்ப அளித்து இருக்கிறார்கள்.
பணம் இல்லாத பர்ஸை திரும்ப அளிப்பதில் சுவிட்ஸர்லாந்த் முதலிடத்தில் இருக்கிறது. 73 சதவீத மக்கள் திரும்ப அளித்து இருக்கிறார்கள். குறைந்தபட்சமாக சீனாவில் 7 சதவீத மக்கள்தான் திரும்ப அளித்து இருக்கிறார்கள்.
லஞ்சம் கேட்ட இந்தியர்
இந்த ஆய்வில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் இல்லாமல் இல்லை.
இந்தியாவில் இந்த ஆய்வை நடத்த சென்ற போது, கட்டடத்திற்கு அனுமதிக்க ஒரு காவலாளி லஞ்சம் கேட்டார். அது போல அவர் பர்ஸையும் திரும்ப அளிக்கவில்லை. அதுபோல இன்னொரு இடத்தில், பணத்தை உரியவரிடம் திரும்ப அளிக்க முடியவில்லை என்றால், அதை தொண்டு நிறுவனத்திடம் கொடுத்து இருப்பேன் என்று ஒருவர் கூறினார் என்கிறார் இந்த ஆய்வில் முன்னிலை வகித்த ஹூயோரிக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கிரிஸ்டீன்.
மனிதன் ஒரு மகத்தான சொல்
இந்த ஆய்வு சொல்வது என்ன?
மனிதர்கள் நாம் நினைத்து பார்ப்பதைவிட மகத்தானவர்களாக இருக்கிறார்கள் என்பதைதான் இந்த ஆய்வு சொல்கிறது.
அதாவது, பிறர் மீது அக்கறையாக இருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் குற்ற உணர்ச்சியுடன் இருக்க விரும்புவதில்லை.
பணம் இல்லாத பர்ஸை வைத்திருப்பதால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை. குற்ற உணர்ச்சி மட்டும்தான் மிஞ்சுகிறது. ஆனால், அதே பர்ஸில் பணம் இருக்கும் போது உள்ள கணக்குகள் வேறு என்கிறார் கிரிஸ்டீன்.
பர்ஸை திரும்ப கொடுக்காதவர்கள் குறித்து பேசும் போது, "அவர்கள் நேர்மையற்றவர்களாக இருக்கலாம். ஆனால், அதே நேரம் அவர்கள் தங்கள் வேலை பளு மற்றும் மறதியின் காரணமாக கூட பர்ஸை திரும்ப கொடுக்காமல் இருந்திருக்கலாம்" என்று அவர் மேலும் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்