You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
’நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதன் காரணம் எங்களுக்கு தெரியாது’ - தமிழக அரசு
நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் தமிழக அரசின் மசோதா குடியரசுத் தலைவரால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்த சரியான விவரங்களை வெளியிடாதது ஏன் என தி.மு.க. கேள்வியெழுப்பியிருக்கிறது.
இந்த மசோதா என்ன காரணத்தால் நிராகரிக்கப்பட்டது என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லையென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் மசோதா குடியரசுத் தலைவரால் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், தி.மு.க. இன்று தமிழக சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தது.
அதில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், "அரசியல் சட்டம் 201-வது பிரிவின் கீழ் மேதகு குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவை with held செய்திருக்கிறேன் என்று சொன்னால் அது நிராகரிப்பதுதான். மசோதாக்களை மக்கள் பிரதிநிதிகள் நிறைந்த சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்புவதால் சட்டமன்றத்தின் இறையாண்மை கருதி 'நிராகரிப்பு' என்ற வார்த்தை இடம் பெறாமல் With held என்று குறிப்பிடப்படுகிறது. அப்படி கூறப்படுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் என்னவென்றால், இதுபோன்று குடியரசுத் தலைவர் நிராகரிக்கும் மசோதாக்களை ஆறு மாதத்திற்குள் மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், அந்த அதிகாரத்தை இந்த அரசு பயன்படுத்தவில்லை.
காரணம் கேட்டிருக்கின்றோம் என்று சட்ட அமைச்சர் இந்த அவையில் குறிப்பிடுகிறார். காரணம் கேட்டு ஒரு கடிதத்தை எழுதி ஏழரைக் கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்ற சட்டமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை நீங்கள் முறையாக செய்யத் தவறிவிட்டீர்கள்" எனக் குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், "நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் மின்னஞ்சலிலும் பிரமாண பத்திரத்திலும் 'ரிஜெக்ட்' என்ற வார்த்தை இடம்பெறவில்லை. Return என்ற வார்த்தையே இடம்பெற்றிருந்தது. இந்த மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதையடுத்துப் பேசிய மு.க. ஸ்டாலின், "அவர் 'Reject' செய்யவில்லை என்ற வார்த்தை இல்லை என்று சொல்கிறார். அதில் ஒன்றை நான் படித்துக் காட்ட விரும்புகின்றேன். Both the learned counsel for Union of India submitted that on the clarification sought for, as to whether bills were withheld or rejected, Under Secretary (Judicial & PP), Ministry of Home Affairs, has stated that bills have been rejected. என்று தெளிவாக இருக்கின்றது. இரண்டு வருடங்களாக கவலைப்படாமல் இருந்துவிட்ட காரணத்தினால் 201 பிரிவின்படி ஏற்கனவே அனுப்பிய மசோதாவை மீண்டும் வலியுறுத்துவதற்கு வாய்ப்பில்லை. ஆகவே புதிய இரண்டு மசோதாக்களை இன்னும் மூன்று நாட்கள் உள்ள இந்தக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்குமா?" என்று கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பிறகு பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "மீண்டும் ஒரு தீர்மானத்தை நாம் நிறைவேற்றி அனுப்புவோம், எந்த காரணமும் இல்லாமல் இதே மாதிரி reject செய்தால் என்ன செய்ய முடியும்? ஆகவே, காரணம் என்னவென்று அவர்கள் தெரிவித்தால்தான், நாம் அந்த காரணத்தைச் சுட்டிக்காட்டி இந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்புகிறோம். அதில் ஏதாவது குறைபாடு இருந்தால், அதை சுட்டிக்காட்டி, இன்ன இன்ன குறைபாடுகள் என்று சொன்னால், அதற்கேற்றவாறு மீண்டும் திருத்தம் கொண்டுவந்து மசோதா தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினால், இதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். பலமுறை கடிதம் எழுதப்பட்டு விட்டது. அந்த கடிதங்களுக்கு இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இப்பொழுது மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு, அதற்கும் பதில் வரவில்லை என்றால் சிறப்புக் கூட்டம்கூட ஒன்று கூட்டலாம்" என்று பதிலளித்தார்.
மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. இந்தத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. அந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
அந்த மசோதாக்களின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், இது தொடர்பாக வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில் பதில் அளித்த மத்திய அரசு, மசோதா குடியரசுத் தலைவரால் திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறியது.
இது தொடர்பாக முன்னதாக தி.மு.க. சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பியபோது, பதிலளித்த சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், சட்டம் திருப்பி அனுப்பப்படவில்லை; நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார். இதனால், அவையில் தவறான கருத்தைத் தெரிவித்தாக தி.மு.க. குற்றம்சாட்டிவருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்