You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குழந்தைகள் இறப்பு விகிதம்: தமிழ்நாடு மற்றும் வட இந்தியாவின் நிலை என்ன? - நிடி ஆயோக் அறிக்கை
- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி
பிகாரில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம் அடைந்திருப்பது, நாட்டின் சுகாதார சேவை நடைமுறை குறித்தும், குழந்தைகள் எந்த அளவுக்கு கவனிக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தியாவில் குழந்தைகள் மரண விகிதம் 2000வது ஆண்டில் இருந்து ஏறத்தாழ பாதியாகக் குறைந்துள்ளது. குழந்தைகள் மரணத்துக்கான காரணங்களாக இருக்கும் காரணிகள், தடுப்பூசிகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது இதற்கு முக்கிய காரணமாகும். ஆனால், குழந்தைகள் உயிர்வாழ்வதற்கு மிகவும் மோசமான இடங்களில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.
இந்தியா முதலிடம்
பெரிதும் மதிக்கப்படும் லான்செட் என்ற மருத்துவ இதழ், 2015ல் இந்தியாவில் ஐந்து வயதை எட்டுவதற்குள் 12 லட்சம் குழந்தைகள் இறந்துவிட்டனர் என்றும், அந்த ஆண்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் இந்தியா தான் முதலிடத்தில் இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.
ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மரணத்தில் பாதி பேர் உத்தரப்பிரதேசம், பிகார் மற்றும் மத்தியப் பிரதேசம் என மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதிக மக்கள் தொகை என்பது பாதி காரணமாக இருக்கலாம். ஆனால் மாநிலங்கள் அளவில் இதில் மாறுபாடுகள் இருக்கின்றன.
2015 ஆம் ஆண்டில் 1000 குழந்தைகள் பிறப்பில், மத்தியப் பிரதேசத்தில் 62 குழந்தைகள் இறந்துள்ளனர். கேரளாவில் ஆயிரத்துக்கு ஒன்பது குழந்தைகள் மட்டுமே இறந்துள்ளனர். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சராசரி மரணம் (U5MR) தேசிய அளவில் 43 ஆக உள்ளது.
அசாம், ஒடிசா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற குறைந்த வருவாய் உள்ள மாநிலங்களிலும், தமிழகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், மேற்குவங்கம் போன்ற அதிக வருவாய் உள்ள மாநிலங்களிலும் குழந்தைகள் மரணம் குறைவாக உள்ளது.
மனித ஆரோக்கிய மேம்பாட்டுக்கு பெருமளவு முதலீடு செய்வதில் கேரளம், தமிழகம் போன்ற மாநிலங்கள் நீண்ட வரலாறு படைத்திருக்கின்றன.
நாட்டில் சுகாதாரத் துறையில் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் ஆதரவு திரட்டுதலுக்கான பணிகளை முன்னெடுத்துச் செல்பவர் காந்தி நகரில் உள்ள இந்திய பொது மக்கள் சுகாதார நிலையத்தின் இயக்குநர் பேராசிரியர் திலீப் மவலங்கர்.
``விவசாய சீர்திருத்தங்கள், மகளிருக்கு அதிகாரம் அளித்தல், கல்வி, முழு அளவில் அலுவலர்கள் பணியாற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள், அதிக அளவிலான மருத்துவமனைகள் மற்றும் படுக்கைகள், சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகளில் அதிக முதலீடு ஆகியவற்றால் கேரளம் இப்போதுள்ள நிலையை எட்டியிருக்கிறது'' என்று அவர் கூறுகிறார்.
இந்தக் காரணங்கள் மட்டுமின்றி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில், சுகாதார கட்டமைப்பு வசதிகளைப் பராமரிப்பது கடினமான விஷயம் என்றும் சொல்கிறார் பேராசிரியர் மவலங்கர்.
சாலைகள் இணைப்பு வசதிக் குறைபாடும் இதற்குக் காரணம். பல கிராமங்களில் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு செல்லும் இணைப்பு சாலை இல்லை என்பதால், அவர்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பது தாமதமாகிறது.
``நிர்வாகப் பிரச்சினைகள்'' இருப்பதாக சுகாதார அமைச்சகம் ஒப்புக்கொள்கிறது. இந்த மாநிலங்களில் ``பலவீனமான சுகாதார வசதிகள் உள்ளன. அதனால் சுகாதார வசதிகள் கிடைப்பதிலும், அதன் தரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தை பிறப்பு நேரத்தில் இந்த சிரமம் ஏற்படுகிறது'' என்று அமைச்சகம் ஒப்புக்கொள்கிறது.
குழந்தைகள் ஏன் இறக்கிறார்கள்?
பிரசவ நேரத்திலும், குறை பிரசவ நேரத்திலும் ஏற்படும் சிக்கல்கள் தான் 2017ல், ஒரு மாத கால வயதிற்குள் குழந்தைகள் மரணத்துக்கான முக்கிய காரணங்களாக இருந்தன என்று யுனிசெப் சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த மரணங்களைத் தவிர்த்திருக்க முடியும். பேறுகால மற்றும் குழந்தைகள் சுகாதார சேவைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.
2005 ஆம் ஆண்டில், தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் (NRHM) தொடங்கப்பட்டது. ஊரகப் பகுதிகள் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் எட்டு மாநிலங்களில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தராஞ்சல், உத்தரப்பிரதேசம் ஆகிய இந்த மாநிலங்கள் , அதிகாரமளிக்கப்பட்ட செயல்பாட்டுக் குழு (EAG) மாநிலங்கள் என்று குறிப்பிடப்பட்டன.
சிகிச்சை மையங்களில் பிரசவங்கள் நடைபெறுவதை அதிகரிப்பது, பரிந்துரைக்கப்படும் பெண்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி கிடைக்கச் செய்வது, பிரசவ வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் சிசேரியன் வசதிகள் ஏற்படுத்துவது ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும்.
இதன் தொடர்ச்சியாக பணமாக ஊக்கத் தொகை வழங்கும் ஜனனி சுரக்சா திட்டம் (JSY), ஜனனி சிசு சுரக்சா கார்யகரம் (JSSK) போன்ற திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பொது சுகாதார நிலையங்களில் குழந்தை பெற்றுக் கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு, சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தாலும் அதற்கு இலவச சிகிச்சையே அளிக்கப்படும். குழந்தை பிறந்த பிறகு பரிசோதனைகள், ஓராண்டு காலம் வரை சிசுவுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் இலவச சிகிச்சை போன்றவைகளை அளிக்கும் வகையில் இந்தத் திட்டங்கள் உள்ளன.
மருத்துவ மையங்களில் பிரசவம் பார்த்துக் கொள்வது என்பது மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் அல்லது பயிற்சி பெற்ற சுகாதாரப் பணி அலுவலர்கள் மூலம் பிரசவம் பார்த்துக் கொள்வதைக் குறிப்பிடுகிறது. இதன் மூலம் பிரசவத்தின் போது தாய் மற்றும் சிசு மரணிப்பது குறைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.
பயிற்சி பெற்ற அலுவலர்கள் இருக்கும் போது, அவர்கள் முன்னிலையில் பிரசவம் நடக்கும்போது, சிக்கல்கள் ஏற்படுவது குறைகிறது. சிசுவுக்கு ஏற்பட வாய்ப்புள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.
``மருத்துவ மையங்களில் பிரசவம் பார்ப்பது என்பதில் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் இது இரு மடங்கு அதிகரித்திருக்கிறது'' என்று கூறுகிறார் சுகாதாரம் மற்றும் மக்கள் நலன் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு. மனோஜ் ஜலானி.
நாட்டில் பரவலாக வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையிலும், தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு 2015-16 (NFHS)-ன்படி, மருத்துவ மையத்தில் பிரசவம் நடப்பதில் மிக மோசமான எண்ணிக்கை கொண்ட மாநிலமாக பிகார் (63.8%) இருக்கிறது.
கேரளா (99.9%), தமிழகம் (99%) ஆகிய மாநிலங்கள் ஏறத்தாழ முழுமையாக, மருத்துவ மைய பிரசவங்களை எட்டியுள்ளன.
``சில சிறிய பகுதிகளில் சிறிது தயக்கம் இருக்கிறது'' என்பதை திரு. ஜலானி ஒப்புக்கொள்கிறார். ``லக்சயா என்ற திட்டத்தின் மூலம் குழந்தை பிறப்பு நேரத்தில் மருத்துவ கவனிப்பின் தரத்தை உயர்த்துவதில் எங்களுடைய முக்கிய கவனம் இருக்கிறது. அதன் மூலம் குழந்தை பிறப்பு நிகழ்வு என்பது பெண்ணுக்கும், குழந்தைக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அமையும்படி செய்வதில் கவனம் செலுத்துகிறோம்'' என்று அவர் தெரிவித்தார்.
உயிரைக் குடிக்கும் நோய்கள் எவை?
பிறந்து முதலாவது மாதத்தில் ஒரு குழந்தை உயிர் பிழைத்துவிட்டால், பிறகு நிமோனியாவும் வயிற்றுப் போக்கும் உயிரைக் குடிக்கும் பெரிய நோய்களாக இருக்கின்றன. மொத்த உயிரிழப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றுக்கு இவை தான் காரணமாக இருந்துள்ளன என்று யுனிசெப் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு, சத்தான உணவு கிடைக்காமை, பிறப்பின் போது குறைவான எடை, தாய்ப்பால் கிடைக்காமை, அம்மை தடுப்பூசி கிடைக்காமை, வீட்டுக்குள் காற்று மாசு மற்றும் அதிக நெரிசல் போன்ற காரணங்களால் நிமோனியா ஏற்படுகிறது.
2017 ஆம் ஆண்டில், சிறு குழந்தைகளுக்கு நிமோனியா பரவுவதைத் தடுக்க புதிய தடுப்பூசி மருந்தை அறிமுகம் செய்வதாக இந்திய அரசு அறிவித்தது.
நாடு முழுக்க தடுப்பூசி போடும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, அதே ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திரதனுஷ் திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருந்தது.
இன்னும் சில ஆண்டுகள் கழித்துதான் அதன் தாக்கத்தை மதிப்பிட முடியும். ஆனால் இப்போதைக்கு தடுப்பூசி போடுவதில் முழுமையை எட்டுவதில் மாநிலங்களுக்கு இடையில் வித்தியாசங்கள் உள்ளன.
NFHS 2015-16-ன் படி, பஞ்சாப் (89.1%) மற்றும் கேரளா (82.1%) மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், அருணாச்சலப் பிரதேசம் (38.2%), அசாம் (47.1%) ஆகியவை மிகவும் குறைந்த நிலையில் உள்ளன.
மற்ற உயிர்க்கொல்லி நோய்களைப் பொருத்தவரை, கழிப்பறை வசதிகள் இல்லாதது, தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது.
NFHS 2015-16-ன் படி, கழிப்பறை வசதிகளை குறைவாகப் பயன்படுத்தும் ஜார்க்கண்ட் (24%), பிகார் (25%), ஒடிசா (29%), மத்தியப் பிரதேசம் (33%) மாநிலங்களில், தீவிர வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கழிப்பறை வசதிகளை அதிகரிப்பது என்பது வீடுகளிலேயே கழிப்பறை வசதி ஏற்படுத்துவது, குழாய் மூலம் கழிப்பறையை இணைப்பது அல்லது மற்ற வீடுகளுடன் பகிர்ந்து கொள்ளாமல், குழி தோண்டி டேங்க் அமைத்துக் கொள்வதைக் குறிப்பிடுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தூய்மையான பாரதம் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டுவது என்ற அரசின் திட்டம் மூலம், இதற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.
9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டதன் மூலம் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இப்போது திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாதவையாக மாறிவிட்டன என்று அரசு கூறியுள்ளது.
கழிப்பறை வசதி கிடைக்கச் செய்வதுடன், பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்த சுகாதாரக் கல்வி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அவசியம் என்று பேராசிரியர் மவ்லங்கர் கூறுகிறார்.
``சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்வது, அதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உடலில் சத்துகள் குறைபாட்டை சமன் செய்வதற்கு ஓ.ஆர்.எஸ். கரைசலை பயன்படுத்துவது, ஈக்களால் உணவில் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது போன்ற விஷயங்களிலும் அதிகம் பணியாற்ற வேண்டியுள்ளது'' என்று அவர் கூறுகிறார்.
சுகாதார நிலையங்கள், தடுப்பூசிகள், கழிப்பறை வசதிகள் அளிப்பதிலும், அதிக அளவிலான கல்வி வளர்ச்சி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் நிலை போன்றவற்றில் தென் மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன.
இந்த அனைத்து அம்சங்களும், இளம் குழந்தைகள் உயிர் பிழைப்பதில் முக்கிய பங்கு வகிக்கி்றன. குழந்தைகள் மரணங்கள் அதிகமாக இருக்கும் EAG மாநிலங்களுக்கு இவை ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
ஆய்வு மற்றும் வரைகலை : ஷதாப் நாஷ்மி, புனீத் குமார்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்