சென்னை அருகே பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு 4 வயது குழந்தை கொலை

பட மூலாதாரம், FRANCIS DEMANGE/GAMMA-RAPHO VIA GETTY IMAGES
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமலர்: பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு 4 வயது குழந்தை கொலை
நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸார் கைது செய்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தன் நான்கு வயது குழந்தையை காணவில்லை என நேற்று இரவு 7:30 மணி அளவில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் போலீஸார் அந்தப் பெண்ணின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டு கழிப்பறையில் இருந்த கோணிப்பையில், குழந்தை கொலை செய்யப்பட்டு அடைத்து வைத்திருந்தது தெரிந்தது.

பட மூலாதாரம், ANDRE VALENTE/BBC BRAZIL
விசாரணையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகே வசிக்கும் முன்னாள் ராணுவ வீரரான 60 வயதான மீனாட்சி சுந்தரம், நேற்று மாலை வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து கொன்று, உடலை கோணிப்பையில் அடைத்து, கழிப்பறையில் வீசியது தெரிய வந்தது.
இதனையடுத்து திருமுல்லைவாயல் போலீஸார், மீனாட்சி சுந்தரத்தை கைது செய்து விசாரித்து வருவதாக மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தினமணி: திமுகவில் இணைகிறார் தங்க.தமிழ்ச்செல்வன்?
அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க.தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் சந்தித்து கட்சியில் சேர உள்ளார் என்றும் அவருடன் தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் உடன் வந்து திமுகவில் இணைய உள்ளனர் என்றும் அச்செய்தி குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம், FACEBOOK / தங்க தமிழ்செல்வன்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர் தங்க.தமிழ்ச்செல்வன். அவர் மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனின் ஆதரவாளராகச் செயல்பட்டார்.
இதன் காரணமாக, அவருடைய சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் பறிபோனது. டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது, அதிலும் இணைந்து செயல்பட்டு, அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. இதற்கு, டிடிவி தினகரனின் செயல்பாடுகள்தான் காரணம் என்று தங்க.தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியதுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் புகழ்ந்து பேசினார். அதைத் தொடர்ந்து, அமுமகவிலிருந்து தங்க.தமிழ்ச்செல்வன் விரைவில் நீக்கப்படுவார் என்று டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் அதிமுகவிற்கு மீண்டும் செல்வதற்கான முயற்சியில் தங்க தமிழ்ச்செல்வன் ஈடுபட்டு வந்தார். அது சரிவராத நிலையில் தற்போது திமுகவில் இணைய உள்ளார்.
இவ்வாறாக அச்செய்தி விவரிக்கிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் பின்னணியில் சீன நிறுவனங்கள்'
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மூடப்பட்டதன் பின்னணியில் சீன நிறுவனங்கள் இருப்பதாக வேதாந்தா நிறுவனத்தின் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனங்களுக்கு இந்தியச் சந்தையில் வர்த்தக நலன்கள் இருப்பதாக வழக்கறிஞர் அரியமா சுந்தரம் தெரிவித்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் இந்தியாவின் தாமிரத் தேவையில் 38% இறக்குமதி செய்யப்படுவதாகவும், அந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாராணையின்போது அவர் தெரிவித்தார்.


தி இந்து - நிரவ் மோதி, சகோதரி வங்கி கணக்குகள் முடக்கம்
பஞ்சாப் தேசிய வங்கியில் நிதி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று லண்டனில் வாழும் வைர வியாபாரி நிரவ் மோதி மற்றும் அவரது சகோதரி பூர்விக்கு சொந்தமாக சுவிட்சர்லாந்தில் இருக்கும் நான்கு வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்திய அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று சுவிட்சர்லாந்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தி இந்து செய்தி தெரிவிக்கிறது.
இந்த வங்கிக்கணக்குகளில் சுமார் 283 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













