நரேந்திர மோதி மக்களவை உறுப்பினராக பதவியேற்றார்

இந்திய நாடாளுமன்றத்தின் 17வது மக்களவையின் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோதி பதவியேற்றுக்கொண்டார் என்று ஏ.என்.ஐ செய்தி தெரிவிக்கிறது.

அவையின் முன்னவர் எனும் அடிப்படையில், விதிகளின்படி மோதி முதல் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து நரேந்திர மோதி இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்வானார்.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இன்று மக்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

கடந்த மாதம் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தல் முடிந்தபின், முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய பிரதேச மாநிலம் திகம்கார்க் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்வான வீரேந்திர குமாருக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

வீரேந்திர குமார் கடந்த ஆட்சிக்காலத்தில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்.

மாநிலங்களின் பெயர்களின் அகரவரிசைப்படி ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்வான உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழும்.

மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடக்கவுள்ளது. ஜூன் 20 அன்று குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார்.

தேர்தல் ஆண்டு என்பதால் பிப்ரவரி மாதத்தில், மோதி தலைமையிலான முந்தைய அரசால் இடைக்கால நிதிநிலை அறிக்கைதான் நானடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஜூலை 5 அன்று, நடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :