You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெகன் மோகன் ரெட்டி - ஐந்து துணை முதல்வர்களோடு ஆந்திர அமைச்சரவை விரிவாக்கம்
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: இந்தியாவில் முதல் முறையாக 5 துணை முதல்வர்கள் - ஜெகன் மோகன் அறிவிப்பு
ஆந்திர அமைச்சரவை சனிக்கிழமை விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிதாக 25 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். நாட்டில் முதல்முறையாக மாநிலத்தில் 5 பேர் துணை முதல்வர்களாகப் பதவியேற்க உள்ளனர். அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஆளுநர் நரசிம்மனிடம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெள்ளிக்கிழமை வழங்கியதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் நடந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் அந்த கட்சி 151 தொகுதிகளைக் கைப்பற்றியது.
தெலுங்கு தேசத்துக்கு 23, ஜனசேனா கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தன. ஆந்திராவில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 22 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கட்சிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
கடந்த 30-ம் தேதி ஆந்திராவின் புதிய முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். அன்றைய தினம் அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
இதைத் தொடர்ந்து புதிய அமைச்சர்களை தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் தாடேபல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் 151 எம்.எல்.ஏக் களும் கலந்து கொண்டனர்.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசியபோது, " எனது அரசில் ஊழலுக்கு இடமில்லை. ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது" என்று தெரிவித்தாக இந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'மாலேகான் குண்டுவெடிப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது'
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க நீதிமன்றம் மறுத்து விட்டதால், மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினரும் பெண் சாமியாருமான பிரக்யா தாக்கூர், குண்டுவெடிப்பு நடந்தது பற்றி தெரியுமா என்று கேட்டதற்கு அது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும், இதுவரை விசாரிக்கப்பட்ட சாட்சிகள் பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நீதிமன்ற அவையில் இருந்து நீதிபதி வெளியேறியதும் தமக்கு வழங்கப்பட்ட நாட்காலி அழுக்காக இருந்ததாகவும், தனக்கு ஒவ்வாமை இருப்பதாகவும் நீதிமன்றத்தில் இருந்த என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் அவர் புகார் கூறினார்.
தினத்தந்தி: பிரதமர் மோதியும், ராகுல் காந்தியும் கேரளாவில் சுற்றுப்பயணம்
கேரளாவில் இன்று பிரதமர் மோதி, ராகுல் காந்தி ஆகியோர் ஒரே நேரத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோதி நேற்று இரவு கேரளா வந்தார். சிறப்பு விமானம் மூலம் கொச்சி கடற்படை தளத்தில் வந்திறங்கிய மோதி, எர்ணாகுளத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றார். சனிக்கிழமை காலை கொச்சி கடற்படை தளத்துக்கு செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் கோவிலுக்கு செல்கிறார்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேற்று கேரளா வந்தார். இதற்காக நேற்று பிற்பகல் கோழிக்கோடு விமான நிலையம் வந்திறங்கிய அவர் கார் மூலம் வயநாட்டுக்கு புறப்பட்டார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை அந்த தொகுதியிலேயே தங்கியிருக்கும் ராகுல் காந்தி, சுமார் 15 வரவேற்பு கூட்டங்களில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோதி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் ஒரே நேரத்தில் சுற்றுப்பயணம் செய்வதால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தினமலர் நாளேடு தெரிவித்துள்ளது.
தினமணி: மழை நீர் சேமிப்பு அமைப்புகளை உருவாக்க தமிழக அரசு உத்தரவு
மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவதிலும், அதனை பராமரிப்பதிலும் பொதுமக்கள் சரியாக முனைப்புக் காட்டவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளததாக தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், மழைநீர் சேகரிப்பு, ஆழ்துளை கிணறுகள் அமைக்க வாய்ப்புள்ள இடங்களை கோட்ட வாரியான வரைபடங்களைக் கொண்டு கண்டறியவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்