You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏ.ஆர்.ரஹ்மானின் 'தன்னாட்சி' ட்வீட்டை பதிவிட்டது அவருடைய அட்மினா?
ஒட்டு மொத்த இந்தியர்களையும் ஆஸ்கர் விருது மூலம் பெருமைப்படுத்திய திரைப்பட இசைக்கலைஞர் ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது அவர் பதிவிடும் ட்விட்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
சர்ச்சைக்குள்ளான கஸ்தூரிரங்கன் குழுவின் பரிந்துரை
இஸ்ரோவின் முன்னாள் தலைவரான கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு புதிய பரிந்துரை வரைவு ஒன்றை அளித்தது. அதில் இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்தப் புதிய வரைவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
சமூக ஊடகங்களில் #TNAgainstHindiImposition என்ற ஹாஷ்டேக் மிகப்பெரியளவில் சர்வதேச அளவில் டிரெண்டானது. சமூக ஊடகங்களில் எழுந்த கடும் எதிர்ப்பால், குறிப்பிட்ட பகுதியில் மாற்றம் செய்து புதிய வரைவை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்.
"அழகிய தீர்வு"
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த முடிவு குறித்து ட்விட்டரில் அழகிய தீர்வு என்று கருத்து தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், தமிழகத்தில் இந்தி கட்டாயமில்லை வரைவு திருத்தப்பட்டது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். ரஹ்மானின் இந்த ட்வீட் சுமார் 16,000 முறை மீள்பகிர்வு செய்யப்பட்டிருந்தது.
"தன்னாட்சி"
இச்சூழலில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) தன்னாட்சி (AUTONOMOS) என்ற ஆங்கிலச் சொல்லையும், அதற்கு என்ன அர்த்தம் என்பதற்கு கேம்பிரிட்ஜ் ஆங்கில அகராதியின் இணைப்பையும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார்.
அந்த இணைய அகராதியில் தன்னாட்சி என்பதற்கு, சார்பற்று சுய முடிவுகளை எடுத்து கொள்ளும் அதிகாரத்தை கொண்டிருத்தல் என்றும், தன்னாட்சி நிறுவனம், நாடு அல்லது பிராந்தியம் யார் தலையீடுமின்றி தன்னிச்சையாக நிர்வகித்துக்கொள்ளும் தன்மை என்றும் அதில் இடம் பெற்றிருந்தது.
ரஹ்மானின் இந்த ட்வீட் வைரலானது. பலரும் இந்த ட்வீட்காக ரஹ்மானை பாராட்டியும், மீம்களையும் பதிந்து வருகின்றனர்.
ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாக பின்றீங்க என்கிறார் பாலமுருகன்.
ரஹ்மானும் ஒருவேளை அரசியலுக்கு வர்றாரோ என்று நகைச்சுவைக்காக சந்தேகம் எழுப்புகிறார் ட்விட்டர் பயனர் ஒருவர்.
அரசியல் வேணாம்ன்னு அமைதியா இருந்த மனுசனையே கடுப்பாக்கியிருக்கானுங்க என்று பதிவிட்டுள்ளார் சோனியா அருண்குமார்.
சரி இந்த ட்வீட்களையெல்லாம் போடுவது யார்?
ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பாளராக சினிமா துறையில் அறிமுகமாகும் திரைப்படம் 99 சாங்க்ஸ். இந்த படத்தை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்தப்படம் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழலில், ரஹ்மானின் இந்த ட்வீட்களை யார் பதிவிடுகிறார்கள் என்ற குழப்பம் ரஹ்மான் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. காரணம், ரஹ்மானின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், பயோ பிரிவில் ட்வீட்கள் அட்மினால் பதியப்படுகிறது என்ற தகவல் இடம்பெற்றிருந்தது.
ஆனால், இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு மேல் அந்த அட்மின் செய்தி பயோவிலிருந்து நீக்கப்பட்டிருந்தது. யாரை கேலி செய்ய இப்படி செய்தார் ரஹ்மான்? அல்லது நகைச்சுவைக்காக இப்படி செய்தாரா? ரஹ்மானுக்கே வெளிச்சம்.
ரம்ஜான் நோன்பு இருக்கும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? | Ramzan Fasting |
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்