You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மக்களவைத் தேர்தலில் பெண்கள் எந்த கட்சிக்கு அதிக வாக்களித்தார்கள்?
- எழுதியவர், சஞ்சய் குமார்
- பதவி, சமூக ஆய்வாளர்
இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகளை பலவிதமாக நாம் பார்க்கலாம். பாரதிய ஜனதா கட்சியின் இந்த இமாலய வெற்றிக்கும் பெண்கள் அளித்த வாக்குகளுக்கும் தொடர்பு இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இந்த தேர்தலில் பெண்கள் அதிகளவில் வாக்களித்ததோடு, அவர்கள் பெரும்பாலும் பாஜகவுக்கே வாக்களித்துள்ளதாக தெரிகிறது.
கிராமம்புற பகுதிகளில் எரிவாயு சிலிண்டர் இணைப்பு கொடுக்கும் உஜ்வாலா திட்டம் போன்றவை, பெண்கள் பாஜகவுக்கு அதிகளவில் வாக்களிக்க ஒரு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
உஜ்வாலா திட்டத்தால் சுமார் 34 சதவீத குடும்பங்கள் பயனடைந்ததாகவும், அதுவும் பெரும்பாலனவர்களுக்கு இத்திட்டம் மோதி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது என்று தெரிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த தேர்தல்களைவிட, இத்தேர்தலில் பெண்கள் அதிகம் வாக்களிக்க இது ஊக்கமளித்திருக்கலாம். எனினும், எந்த கட்சிக்கு அல்லது எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்யும்போது, இத்திட்டத்தால் பயனடைந்தவர்கள் ஆளுங்கட்சிக்குதான் வாக்களிப்பாளர்கள் என்று நாம் சொல்ல முடியாது என்பதே உண்மை.
பாஜகவுக்கு வாக்களிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான இடைவெளி வெகுவாக குறைந்திருப்பதாக, சிஎஸ்டிஎஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. எனினும், பெண்களைவிட ஆண்கள் மத்தியிலேயே பாஜக பிரபலமாக இருக்கிறது.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு விகிதம் 37 சதவீதமாக உள்ளது. 36 சதவீதம் பெண்களும், 39 சதவீதம் ஆண்களும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்.
இது புதிதான விஷயமல்ல. பாரதிய ஜனதா கட்சி எப்போதும் பெண்களைவிட ஆண்கள் மத்தியிலேயே பிரபலமாக இருந்திருக்கிறது.
2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இருந்தே, தரவுகளை எடுத்துப் பார்த்தால், இதே போக்குதான் இருந்திருக்கிறது.
இது பல மாநிலங்களுக்கு பொருந்தினாலும், சில மாநிலங்கள் விதிவிலக்காக இருக்கின்றன. குஜராத், கர்நாடகா, அஸ்ஸாம், உத்தர பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் ஆண்களைவிட பெண்களே பெருமளவில் பாஜகவுக்கு ஆதரவளித்திருக்கிறார்கள்.
ஆனால், பாஜக ஒரு பெரும் அரசியல் சக்தியாக விளங்கும் மற்ற மாநிலங்களில், ஆண்கள் மத்தியில்தான் பிரலமாக திகழ்கிறது. பொதுவாக யாருக்கும் சாதகம் இல்லாத பெண் வாக்காளர்கள் மேற்கு வங்கத்தில் மட்டும், மற்ற கட்சியை விட மம்தா பானர்ஜிக்கே ஆதரவளிக்கிறார்கள்.
2004 - 2019 மக்களவைத் தேர்தல்களில் பெண்கள் எவ்வாறு வாக்களித்துள்ளனர்?
ஆதாரம்: CSDS Data Unit
பெண்கள் வாக்களிக்கும் போக்கில் கடந்த தேர்தலைவிட, இத்தேர்தலில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், பெண்கள் இத்தேர்தலில் எந்தளவில் கலந்து கொண்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் வரலாற்றிலேயே இந்த மக்களவை தேர்தலில்தான் ஆண்கள் பெண்கள் இருவரும் சம அளவில் வாக்களித்துள்ளனர் என்பதை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்.
2019 மக்களவைத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளின் சதவீதம் 66.8. ஆண்கள் 66.8 சதவீதம், பெண்கள் 66.8 சதவீதம் அளவிற்கும் வாக்களித்துள்ளனர்.
ஆண்கள், பெண்கள் என வாக்களிக்கும் உரிமை இருவருக்கும் ஒரே நேரத்தில் கிடைத்தாலும், எப்போதும் ஆண்களே அதிகளவில் வாக்களித்து வந்தனர். சுதந்திரம் பெற்ற பின்பு நடந்த முதல் சில தேர்தல்களில், ஆண் மற்றும் பெண் வாக்களர்களுக்கு இடையே 12 - 14 சதவீதம் இடைவெளி இருந்தது. பின்னர் 2004 ஆம் ஆண்டில்தான் இந்த இடைவெளி 9-10 சதவீதமாக குறைந்தது.
2019 மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கு பெண்கள் எவ்வளவு வாக்களித்துள்ளனர்?
பின்னர் 2009, 2014ஆம் ஆண்டு தேர்தல்களில் இது படிப்படியாக குறைந்து தற்போது 2019ல்தான் ஆண்கள் மற்றும் பெண்களின் வாக்குகள் சமமாக பதிவாகியுள்ளது.
அருணாச்சல பிரதேசம், பிகார், கோவா, இமாச்சல பிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ஒடிஷா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் ஆண்களைவிட பெண்களே அதிகளவில் வாக்களித்துள்ளனர் என்பதை நாம் குறிப்பாக கவனிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில், பெண்கள் ஆண்களைவிட அதிகளவில் வாக்களிக்கவில்லை என்றாலும், ஏறத்தாழ சமமான எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர்.
அதுமட்டுமல்ல தற்போதைய மக்களவையில்தான் அதிகளவு பெண்கள் பிரதிநித்துவம் இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 78 பெண்கள் தற்போது மக்களவையில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
மாநிலம் வாரியாக ஆண்கள் மற்றும் பெண்கள் வாக்கு விகிதம்
ஆதாரம்: CSDS Data Unit
*வளர்ச்சி அடைந்து வரும் சமூகங்களின் ஆய்வு மைய (சிஎஸ்டிஎஸ்) இயக்குநராக இந்த கட்டுரைரை எழுதிய சஞ்சய் குமார் பணிபுரிந்து வருகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்