நரேந்திர மோதி ஆட்சியமைக்க குடியரசுத் தலைவரிடம் உரிமை கோரினார்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று, சனிக்கிழமை, இரவு சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.

அப்போது ஆட்சியமைக்க மோதிக்கு அழைப்பு விடுத்தார் ராம்நாத் கோவிந்த்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 75 (1) குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்கீழ் நரேந்திர மோதியை இந்தியாவின் பிரதமராக நியமிப்பதாக இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்களையும், பதவியேற்பு நிகழ்ச்சிக்கான தேதி மற்றும் நேரத்தையும் தெரிவிக்குமாறு குடியரசுத் தலைவர் அவரிடம் கூறினார் என குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவிக்கிறது.

முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர்கள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பாஜக நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக நரேந்திர மோதி தேர்வு செய்யப்பட்டதைத் தெரிவிக்கும் கடிதத்தை வழங்கினர் என ஏ.என்.ஐ செய்தி தெரிவிக்கிறது.

மோதி பிரதமராக ஆதரவு தெரிவிக்கும் கடிதங்களும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்களால் வழங்கப்பட்டன என்றும் ஏ.என்.ஐ தெரிவிக்கிறது.

இந்தியாவின் 17வது மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிற கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களால் இன்று மாலை நரேந்திர மோதி பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் மோதி தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அமித் ஷா நரேந்திர மோதியை தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராக முன்மொழிந்தார்.

ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி அதை வழிமொழிந்தனர். இதற்கு புதிய உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்தனர்.

தேர்வு செய்யப்பட்டபின் எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரது பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றார் மோதி.

நாடாளுமன்ற குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டபின் இந்தக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோதி பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நன்றி தெரிவித்தார்.

அத்வானி, ஜோஷி ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்பதாக நரேந்திர மோதி தெரிவித்தார்.

பாஜகவின் மூத்த தலைவர்களான இவர்கள் இருவருக்கும் இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த உலகமே இந்தத் தேர்தலை உற்று நோக்கியதாகவும், இனிமேல் நாம் அனைவரும் புதிய பயணத்தைத் தொடங்குவோம் என்றும் கூறினார் மோதி.

அரசியலில் உண்டாகியிருக்கும் மாற்றத்துக்கு நீங்களே சாட்சி என்று அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து மோதி தெரிவித்தார்.

முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நரேந்திர மோதியை வரவேற்றனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களில் வென்றுள்ளது. பாஜக மட்டுமே இவற்றில் 303 இடங்களில் வென்றிருக்கிறது.

பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பிகார் முதல்வருமான நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதிமுக சார்பில், தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மோதியை நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்யும் முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

ஆங்கிலத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமது பேச்சை 'வணக்கம்' என்று ஆரம்பித்து 'நன்றி. வணக்கம்' என்று முடித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :